தேசிய கீதத்துக்கு முன்பு!.

210

தொறொன்ரோ மாவட்டக் கல்விச் சபை (Toronto District School Board- TDSB), இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கல்வி ஆண்டு ஆரம்பமான நாளிலிருந்து அதன் பொறுப்பில் இருக்கும் 588 பள்ளிக்கூடங்களிலும் வரவேற்கத்தக்க புதிய நடைமுறையொன்றைக் கொண்டு வந்துள்ளது. வழமையாகப் பள்ளிக்கூடம் ஆரம்பாக முன்பு கனடாவின் தேசிய கீதம் பாடப்படும். அதன் பின்னரே வகுப்புகள். புதிய நடைமுறையின் படி, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாகப் ஒரு  சிறு ஒப்புக்கொள்ளல்ஃஅறிவித்தல் செய்யப்படும். அதன் சாரம் இதுதான்:

இந்த நாட்டின் பழங்குடி மக்களின் வழமைகளை மதிக்கிறோம். அவர்களுடைய நிலங்களிலேயே எங்கள் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுப்புடன் ஏற்றுக் கொண்டு அறிவிக்கிறோம். பழங்குடி மக்களின் இருப்பு இந்த நிலங்களில் இடையறாது தொடர்கிறது என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புதல்ஃஅறிவித்தல் செய்யப்படுவது தொறொன்ரோப் பள்ளிக்கூடங்களின் புதிய காலைச் சடங்காக அமைந்திருக்கிறது. இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. கனட்டவின் தேசிய கீதமும், தேசியக் கொடியும் பழங்குடி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவன அல்ல. அவை ஆங்கிலேயரையும் ஃபிரெஞ்சுக்காரரையும் மட்டுமே குறித்துக் காட்டுகின்றன.

மாணவர்களுக்கு எமது வரலாற்றைத் தகுந்த முறையில் சொல்ல ஆரம்பிப்பது மிகவும் பயனுள்ளது. கனடாவின் பாடப் புத்தகங்களில் பழங்குடி மக்கள் பற்றிய வரலாறும் நாம் அவர்க்குச் செய்த அநியாயங்களும் இனப்படுகொலையும் உரிய முறையிலும் தெளிவாகவும் இடம்பெறுவதில்லை. எனவே ஒவ்வொரு நாளும் காலையில் இடப் பெறுகிற இந்த அறிவித்தல் வரலாற்றை ஒளிவு மறைவின்றிச் சொல்ல வழி திறந்திருக்கிறது எனக் கருத இடம் உண்டு. இதனைக் கற்பிக்கக் கிடைத்த அற்புதமான தருணமாக ஆசிரியர்கள் தமது மனதில் கொள்ள வேண்டும்.

பழங்குடி மக்களுக்கு நடந்த இனப்படுகொலை பற்றிய உண்மைக்கும் மீளிணக்கத்துக்குமான ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) சென்ற ஆண்டு வழங்கியிருந்த பரிந்துரைகளில் ஒன்றில் கனடாவில் எல்லா மாணவர்களுக்கும் பழங்குடி மக்களின் வரலாறு, வாழ்வு பற்றி அறிவூட்டப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும். அதன் ஆரம்பமாகவே நாம் இதனைக் கருத  வேண்டும்.

இந்த அறிவித்தல் பழங்குடி மக்களைக் கலந்தாலோசித்த பிற்பாடுதான் அவர்களுடன் ஒப்புதலுடன் இடம் பெறுகிறது. கலந்தாலோசனைகளில் நீண்ட காலமாகக் கலந்து கொண்ட பழங்குடி மூத்தோனான  டியூக் ரெட்பேர்ட்(70) அவர்கள் இது பற்றி மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார். தன்னுடைய சிறு வயதில் தன்னுடைய மொழியைப் பேசினாலோ அல்லது பண்பாட்டைப் பேண முயன்றாலோ தனக்குக் கிடைத்த கடுந்தண்டனைகளையும் நினைவு கூர்ந்தார்.

இதனுடைய இரண்டாவது படியாகப் பழங்குடி மக்களின் வரலாறு, வாழ்வு, பண்பாடு போன்றவற்றை விரிவாக மாணவர்களுக்குக் கற்பிக்கும் திட்டம் அமைகிறது.காலங்கடந்தது எனினும் இவை கனடாவின் எல்லாச் சமூகங்களாலும் உணர்ந்தும் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை.இன அழிப்பு, பண்பாட்டு ரீதியான இனப் படுகொலை, போன்ற விடயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அரசுகள் முதலில் நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் பிற்பாடுதான்  நீதி வழங்கள், நட்ட ஈடு வழங்கல், உரிய தீர்வு வழங்கல் பற்றிப் பொறுப்புடன் பேச முடியும். கனடிய அரசுகள் இந்த வகையில் தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டு முன் செல்கிறார்கள். எனினும் பழங்குடி மக்களைப் பொறுத்தவரையில் கனடிய அரசு கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வெறுமனே ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டும் நாம் கடந்து சென்று நீதியை எய்த முடியாது. வார்த்தைகள் மட்டுமல்ல. செயலும் செயற்பாடுகளும்தான் உண்மையான ஈடுபாட்டையும் பாசாங்குத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவை.கனடிய அனுபவத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மாட்டார்கள்!!!!!