வெற்றிகரமாக நிகழ்ந்த அக்னி இசைவிழா!

222

ர்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதிதிரட்டலை நோக்கமாகக் கொண்டு கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட அக்னி இசைவிழா கடந்த ஞாயிறன்று ஸ்காபரோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் இந்த நிதிதிரட்டல் முயற்சியின் ஒரு அங்கமாகவே கனடிய தமிழ் கங்கிரசின் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முழுக்க முழுக்க கனடிய தமிழ் கலைஞர்களை மட்டும் கொண்டு நடாத்தப்பட்ட, மண்டபம் நிறைந்த பார்வையாளர்களைக் கொண்டிருந்த இந்த நிகழ்வு மாலை ஆறரை மணியளவில் ஆரம்பித்து,இரவு 11 மணிவரை நடைபெற்றது. இனிய இசையுடன் கூடிய பாடல்களாலும் நடனங்களாலும் களை கட்டியிருந்த இந்தச் சபையில் பாடிய ,நடனமாடிய கலஞர்கள் மற்றும் இந்த இசை நிகழ்வை நடாத்திய அக்னி குழு என அனைவரும் இந்த நிதிசேர் நிகழ்வுக்காக உணர்வுபூர்வமாக எந்தவித ஊதியமும் பெறாமல் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். இந்த சபையில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கையை கொண்டு வருவதற்கான முயற்சியை தொடக்கிவைத்தவர்களான வைத்திய கலாநிதிகளான ஜானகிராமன் அவர்களும், ஞானசம்பந்தன் அவர்களும் கலந்துகொண்டது ஒரு சிறப்பம்சமாகும். இவர்கள் இருவரும் சேர்ந்து,  6 மில்லியன் டொலர் தேவைப்படும் இந்தத் திட்டத்துக்கு, தமது பங்களிப்பாக 1 மில்லியன் டொலர்களை முதலாக வைத்து இந்த நிதி திரட்டலை ஆரம்பித்துள்ளனர் என்பது தீபம் வாசகர்கள் அறிந்ததே.

இந்த விழாவின் மூலமாகவும், இந்த நிதிதிரட்டல் முயற்சிக்காகவும் இதுவரை சேர்க்கப்பட்ட தொகையான 50,000டொலர்களை, விழா மேடையில் வைத்து, கனடாவில் இந்த நிதிசேர் திட்டத்தைப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடாத்திவரும் சிவன் இளங்கோ, எழுத்தாளர் முத்துலிங்கம் ஆகியோர்  ஜானகிராமன், ஞானசம்பந்தன் மற்றும் இவர்களுடன் ஈணைந்து இயங்கிவரும் போல் பாண்டியன் ஆகியோரிடம் கையளித்தனர் இந்த விழாவில் சபையிலிருந்த பார்வையாளர்கள் அனைவரதும் நெஞ்சைத்தொட்ட இரண்டு விடயங்கள் நடைபெற்றன. ஒன்று சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக உலகப் புகழ்பெற்ற பாடகியாக அறியப்பட்ட ஜசிக்கா ஜூட் தொடர்பானது. இந்த இசை நிகழ்வில் கலந்துகொண்டு அவர் தனது இனிய குரலில் பாடல்களும் பாடி சபையினரின் பலத்த கரகோசங்களைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், இந்த நிதிதிரட்டலுக்கான விழா நிகழப்போவதாக அறிந்ததன் பின்னரான இடைப்பட்ட காலத்துள் தான் செய்த இசை நிகழ்ச்சிகள் மூலமாக தனக்குக் கிடைத்த ஊதியமான 5000 டொலர்களை தனது பங்களிப்பாக வழங்கியதுடன், இந்த நிகழ்வில் பங்கு பற்றிய மற்றக் கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்பித்துமிருந்தார். 11ம் ஆண்டில் கல்வி பயிலும் இச் சிறுவயதிலேயே, தனக்குக் கிடைக்குக் வெகு மதிகளையும் பணத்தையும் நன்கொடையாக வழங்கி வரும் அவரது செயல் முழுமண்டபத்தினதும் மனதை தொட்ட ஒரு நிகழ்வாகும்.

அடுத்த நிகழ்வு, நினைவுகள் புகைப்படக் கலைஞர் கணா ஆறுமுகம் அவர்கள் சம்பந்தப்பட்டது, இந்த நிதிசேர் நடவடிக்கைக்கு தனது பங்களிப்பை எப்படிச் செய்வது என்று தான் நினைத்தது, அதன்பின், ஒரு நிதிசேர் நடவடிக்கையாக, தனது சேகரத்திலுள்ள புகைப்படங்களை முகநூல் வழியாக விற்பனை செய்ய நினைத்தது, அந்த முறையின் மூலமாக நிதி திரட்ட முய்ற்சி எடுத்தது என்பவை பற்றி அறிவித்ததுடன் தனது இந்தப் பரீட்சார்த்த முயற்சி, எதிர்பாராத அளவுக்கு அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார். முகநூலில் பதிவு செய்த முதல் நாளிலேயே தன்னால் ஆயிரம் டொலர்களை திரட்ட முடிந்தது என்றும், இன்றுவரை 7,000 டொலர்கள் சேர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்து அதையும் கனடிய தமிழர் பேரவையின் இந்த நிகழ்வுக்கானதனது பங்களிப்பாக தருவதாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல், 25,000டொலர்களை நவம்பர் மாதமுடிவுக்குள் தன்னால் திரட்டிவிட முடியும் என்றும் அந்த உச்ச எல்லையை அடைந்தவுடன் அந்தத் தொகையையும் இந்த நிதிசேர் முயற்சிக்கு வழங்குவேன் என்று அறிவித்தார். இது நெஞ்சைத்தொட்ட இரண்டாவது நிகழ்வு

இந்த இரண்டு அறிவிப்புக்களாலும் அக்னியின் சிறப்பான ஒழுங்கமைப்புடன் கூடிய இசை மழையாலும் மனம் நிறைந்த ஒரு மாலையை கழித்த மனம் நிறைந்த உணர்வுடன் ரசிகர்கள் பேசிக்கொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கே காணலாம்.