2018 ஒன்றாரியோ மாகண தேர்தலில் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் யார்?

92

திர்வரும் 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாநில அவைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிலிருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் தாம் நிறுத்தவுள்ள பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான கட்சிகளின் மட்டத்திலான தேர்தல்கள் அடுத்த வருட ஆரம்பமுதல் நடக்கத் தொடங்கும். அவற்றில் எதிர்வரும் ஜனவரி மாதமே பழமைவாதக் கட்சி  தனது வேட்பாளர்களை தொகுதிவாரியாக தெரிந்தெடுக்கும் நோக்குடன் கட்சியின் உள்ளக தேர்தலை நடாத்தவுள்ளது.

இந்தத் தேர்தலில், மார்க்கம் தோன்கில் தொகுதியில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட தாம் விரும்புவதாக நிமால் விநாயக மூர்த்தி மற்றும், தியோ அன்ரனி ஆகியோர் அறிவித்துள்ளனர்.தமிழர்களுக்கு வெற்றிவாய்ப்புக் கூடிய ஒரு தொகுதி என்று பரவலாகப் பேசப்படுகிறது என்பதால் பலரதும் கவனம் இதன் மீது குவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களிருவரில், தியோ அன்ரனி அவர்கள் ஏற்கனவே உட்கட்சித் தேர்தலில் நின்ற அனுபவத்தைக் கொண்டவர். அண்மையில் நடந்து முடிந்தஸ்காபரோ றூஜ் றிவர் தொகுதிக்கான இடத்தேர்தலில்  போட்டியிடுவதற்கான தனது விருப்பை தெரிவித்து கட்சியின் உள்ளக தேர்தலில் போட்டியிட தயாராயிருந்தபோதும், அவ்வாறொரு தேர்தல் நடாத்தப்படாமலே வேட்பாளர் தெரிவு நடைபெற்றிருந்தது. நியாமானதும் நீதியானதுமான முறையில், இந்தத் தொகுதிக்கான வேட்பாளர் தெரிவு செய்யப்படும் என கட்சியின் தலைவர் பற்றிக் பிறவுண் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆயினும், இறுதி நேரத்தில் அவ்வாறான ஒரு தேர்தல் நடக்காமலே, றேமண்ட் ச்சோ அவர்கள் கட்சியின் அந்தத் தொகுதிக்கான  வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்காகக் கட்சித் தலைவர் பற்றிக் பிறவுண் மீது பல விமர்சனங்களை முன்வைக்கப்பட்டிருந்தன. கன்சர்வேற்றிவ் கட்சியின் சார்பிலும் ஒரு தமிழர் தேர்தலில் நின்றிருந்தால், மாநில அவையில் இப்போது ஒரு தமிழர் தெரிவாகி இருந்திருப்பார் என்ற கருத்தும் பரவலாக உரையாடப்பட்டது.

‘கடந்த பத்து வருடங்களாக கட்சியின் ஆர்வமிக்க தொண்டராகவும், கட்சிமீதான பற்றுமிக்க உறுப்பினராகவும்  செயற்பட்டுவந்தவர் என்ற அடிப்படையில், எமது கட்சியால் தான் ஒன்றாரியோவில் உள்ள எம்மெல்லோருக்கும் ஒரு சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவிக்கும் நிமால் வினாயக மூர்த்தி அவர்கள் முதன் முதலாக ஒரு தேர்தல் களத்தில் நிற்கவென இறங்கியிருப்பவர். ஆயினும் அவரது சமூக அரசியல் நடவடிக்கைகல காரணமாகப் பரவலாக அறியப்பட்டவர்.

இந்தத் தொகுதியில் மார்க்கம் மாநகரசபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் போட்டியிடவுள்ளார் என்று அவரது முகநூல் செய்தியொன்றை மேற்கோள் காட்டி பரவலாகப் பேசப்பட்டது. ஆயினும் அவர் அந்தக் முகனூல் செய்திக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அறிவித்திருக்கின்றார். அவர் இதுவரை தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்த முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை இந்தத் தொகுதிதியில் இவர்கள் இருரைத்தவிர இன்னமும் ஓரிரு தமிழர்கள் தேர்தலில் போட்டியிட முன்வரக்கூடும் என உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதிக்குள் இம்முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்ற ஒன்றரியோ பழமைவாதக் கட்சியின் திட்டத்தின் அடிப்படையில் இந்த வேட்பாளர் தெரிவு தை மாதத்தில் எடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மற்றைய கட்சிகள் தமது வேட்பாளர்கள் பற்றிய முடிவை எப்போது எடுக்கப் போகின்றன என்று அறிவிக்கவில்லை.