அரங்கம் நிறைந்த இசைவிழாவாக நடந்த அன்புநெறியின் நாதசங்கமம் 2016!

186

சென்ற சனிக்கிழமை (8-.10.-2016) கனடா அன்புநெறி  மனிதநேய உதவி அமைப்பு நடத்திய நாதசங்கமம்- 2016 நிகழ்வு, ரொறன்ரோவில் உள்ள சேர் ஜோன் மக்டொனால்ட் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  பம்பைமடு,  வவுனியாவில் அமைந்துள்ள VAROD என்று அழைக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்தின் கட்டிட நிதிக்காக  இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  அரங்கம் நிறைந்த விழாவாக நடைபெற்ற இந்த விழாவில், கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்களின் வீணை இசைக்கச்சேரி முக்கிய நிகழ்ச்சியாக இடம் பெற்றிருந்தது. பிரபலமான சில பாடல்களைத் தெரிவு செய்து வாசித்த கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்களின் வீணை இசை, அரங்கை மகிழ்ச்சிப் பிரவாகத்தில் ஆழ்த்தியதென்றே சொல்லலாம். கூடவே பார்வையாளர்களின் விருப்பப் பாடல்களையும் வீணை இசையில் மீட்டி சபையோரைப் பரவசப்படுத்தினார் அவர்.

மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, வேணு,  சுவேதா கிள்ளிவளவன், நிவேதா கிள்ளிவளவன் ஆகியோர்  இசைத்த கனடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா ஆரம்பமானது. அன்புநெறி மன்றத்தின் தலைவர் திரு. சிவகௌரிபாலன் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, அன்புநெறி பற்றிய காணொளி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலாளர் வேணு சிவக்கொழுந்து அவர்களால் போதகர் அல்பேட் அருள்ராஜா அவர்களிடம் நிதியுதவித் தொகை கையளிக்கப்பட்டது. நிதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய போதகர் அல்பேட் அருள்ராஜா அவர்களின் உரையைத் தொடர்ந்து இந்த நிகழ்விற்கான நிதி உதவியை வழங்கியோர், கலைமாமணி ராஜேஷ் வைத்தியாவ மற்றும் இசை உதவி வழங்கியோர்களுக்கான பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையில் நடைபெற்ற கோரயுத்தம் முடிந்வடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் அவல நிலையிலேயே இருப்பது சிலருக்குத் தெரியாது. உடமைகளை இழந்து, உடல் ஊனமுற்று, உறவுகளைப் பறிகொடுத்து, அன்பும் ஆதரவும் வேண்டி நிற்கும் எமது தாயகத்து உறவுகளுக்குக் கைகொடுப்பதற்காகவே அன்புநெறி மனிதநேய உதவி  அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  அன்று மனித நேயத்தை இலட்சியமாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையாக முக்கியமான உணவு உடை மருந்து போன்றவற்றைக் கொடுத்ததன் மூலம் அன்புநெறியின் சேவை ஆரம்பமானது. தொடர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் குறிப்பாக கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தும், சிறுதொழில்களைச் செய்ய உதவிகளைச் செய்தும் அன்பு நெறி தனது சேவைகளைத் தொடர்ந்தது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாதசங்கமம் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி உதவியைக் கொண்டு ‘அன்புநெறி மனை’ என்ற மனநலம் குன்றிய பெண்கள் காப்பகம் பம்பைமடு என்ற இடத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் சில வசதிகளை அந்தக் காப்பகத்திற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இன்று இந்த நாதசங்கமம் நடைபெற்றது. இதில் வரும் நிதியைக் கொண்டு அன்புநெறி மனையில் ஒரு சமையல் அறையும், உணவருந்தும் கூடமும் அமைக்கப்படும் என்று அமைப்பாளர்கள் நிகழ்வின் போது தெரிவித்திருந்தனர். நேரம்போனதே தெரியாது சபையினர் வீணை இசையில் கட்டுண்டு கிடந்தனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஆனாலும் நேரக்கட்டுப்பாடு
காரணமாக இசை நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. மறுநாள் மொன்றியலில் இது போன்ற இன்னொரு நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அன்புநெறி மன்றத்தின் செயலாளர் திரு. மு.மணிமாறன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது.