அரசியலில் மேலெழும் சக்தியாக உருவாகாதது ஏன்?

86

டந்தவாரம் யாழ் ஊடகஅமையத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களிற்கு அவலாக இருந்தது. முகநூலில் அதை வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

“எங்கள் தோல்விகளை பற்றியே சுமந்திரன் கதைத்துக் கொண்டு திரிகிறார். ஏனப்பா அதையே கதைத்துக் கொண்டு திரிகிறீர்கள். போகுமிடமெல்லாம் எங்களை பற்றியே கதைக்கிறார். எங்களுடன் ஏதாவது இரகசிய காதலோ தெரியாது“ இது அவர் கதைத்ததன் ஒரு பகுதியின் சாரம். தமிழ்தேசியம் பேசும் கட்சிகளில் அரசியல் தீர்வு, அரசியலமைப்பு தொடர்பில் அறிவுசார் உரையாடல்களில் ஈடுபடத்தக்கவர்கள் அதிகளவில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் உள்ளார்கள் என்ற அபிப்பிராயம் பொது வெளியில் உள்ளது. தமிழர்களின் அரசியல் இலக்கு தொடர்பில் கோட்பாட்டு விளக்கங்களுடன் அந்தக்கட்சி பேசி வருகிறது. பல்கலைகழக மாணவர்கள், சட்டத்தரணி
களில் கணிசமானவர்கள் கட்சியுடன் இருக்கிறார்கள் என்பதை போன்ற அபிப்பிராயமும் உள்ளது. இதெல்லாம் அந்தக்கட்சி மீது அறிவுசார் பிம்பமொன்றை விழுத்தியுள்ளது.

எனினும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தல் அரசியலில் மேலெழும் சக்தியாக உருவெடுக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியலின் ஒரு அளவுகோல். அண்மைய சில வருடங்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் சுமந்திரனை முன்னிறுத்திய
தாகவே மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குறைகளில் அரசியல் செய்ய ஆரம்பித்தது, இப்பொழுது சுமந்திரனின் குறைகளில் அசியல் செய்ய ஆரம்பித்திருப்பது பெரும் வீழ்ச்சியே.

அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் சுமந்திரனிற்கு எதிரான விமர்சனத்தில் விஞ்ஞானபூர்வ பார்வை கஜேந்திரகுமாரிடம் இருக்கவில்லை. திருநாவுக்கரசின் புத்தக வெளியீட்டில் நடந்த எந்த நிகழ்வையும் இந்த பத்தியாளர் ஆதரிக்கவில்லை. சுமந்திரன் தனது உரையில் சில விடயங்களை தவிர்த்திருக்க வேண்டுமென்பதே பத்தியாளரின் தனிப்பட்ட கருத்தும் கூட. ஆனால் தவிர்த்திருக்க வேண்டிய உரைகளை கூட அதிகபட்ச விஞ்ஞானத்தன்மையுடனும், தர்க்கத்துடனும்தான் அவர் முன்வைத்தார். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் தோல்விகள் பற்றிய சுமந்திரனின் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை. ஆனால் அதற்கு பதில் சொல்ல வந்த கஜேந்திரகுமாரிடம் அப்படியான தர்க்கரீதியான பலம், விஞ்ஞானபூர்வ தன்மை இருக்கவில்லை.

ஈ.பி.டி.பியின் அரசியல் தோல்வியும் இப்படித்தான் நிகழ்ந்தது. ஈ.பி.டி.பி தனக்கான தனித்துவமான அரசியல் உருவாக்கம் செய்யவில்லை. மாறாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் பிழை காணும் அரசியல்தான் செய்தது. தேர்தல் மேடைகில் பெரும்பாலான ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களின் பேச்சை அவதானித்தால் விடயம் புரியும். தமிழ்தேசிய கூட்டமைப்பை குற்றம் காண்பதிலேயே நேரத்தை செலவிடுவார்கள். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்தில் மக்கள் நலன்சார்ந்த சிந்தனைகள் இருந்திருக்கலாம். ஆனால் அது ஒன்றே தகுதியாகாது. மற்றவர்களை விமர்சித்து, விமர்சனங்களில் அதிக கவனம் கொடுக்காமல் தமக்கான அரசியல்பாதையை உருவாக்க வேண்டும்.

முகப்புத்தகத்தில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களின் அரசியல் எனப்படுவது சம்பந்தன், சுமந்திரனை கலாய்த்து மீம்ஸ் போடுவது என்ற அளவிலேயே உள்ளது. உலகம் மிகப் பெரியது. தமிழர்களின் அரசியல் பிரச்சனையும் மிகப்பெரியது. தமிழர்களின் அரசியலில் குதித்தால் அதற்கு தக்கதாக மாறிக்கொள்ள வேண்டும். ஏனெனில், மாறாததெதுவும் நிரந்தரமானதல்ல!