கனடாவும் அகதிகளும்

Migrants from Sri Lanka stand aboard a boat off the coast of Banda Aceh on June 13, 2016. Dozens of Sri Lankan immigrants bound for Australia were stranded off Aceh in northwest Indonesia after their boat broke down, local officials said on June 12. / AFP PHOTO / CHAIDEER MAHYUDDIN

கடந்த வார இதழிலே கனடாவின் கிழக்குக் கரையோர மாகாணமான நோவஸ்கோசியா மாகாணத்திற்கு கப்பல் ஒன்றிலே வந்த சேர்ந்த சீக்கிய அகதிகள் பற்றியும், அவர்களைக் குறித்து அன்றைய கனேடிய அரசு எடுத்த நடவடிக்கை பற்றியும் பார்த்தோம். ஆனால் இக்கப்பலின் வருகைக்குக்கு மூன்று மாதங்கள் முன்னதாக, கனடாவில் அகதிகளை உள்வாங்குவதிலும், அவர்களின் வழக்குகளை விசாரிப்பதிலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை அன்றைய கனேடிய அரசு கொண்டுவந்திருந்தது.

ஆண்டாண்டு காலமாக அகதிகளாக கனடாவிற்கு வந்தவர்களுடைய வழக்குகள் உரிய நேரத்திலே தீர்த்துவைக்கப்படாமல், நிலுவையிலே நீடித்திருந்ததும்தான் கனடாவில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இதை முற்றிலும் மாற்றும் விதமாக மல்ரோனி அவர்களின் அரசு 1986ம் ஆண்டிலிருந்து சில நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அவற்றிலே முதன்மையானதும் முக்கியமானதுமான நடவடிக்கையாக, 1986ம் ஆண்டு நிலுவையிலே இருந்த பல்லாயிரக்கணக்கான அகதிகளின் வழக்குகளை விசாரிப்பதற்கு அவர்கள் கொண்டுவந்த  Administrative Review Programme என்ற திட்டத்தை குறிப்பிடலாம். இந்தத் திட்டத்தின் மூலம், 1986ம் ஆண்டு மே மாதம் 21ந்தேதிக்கு முன்னர் கனடாவில் கால் பதித்த பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிட்டியது. ஏறத்தாழ 28,000 அகதிகளின் கோப்புக்கள் பரிசீலிக்கப்பட்டு, அதிலே 85 வீதமானோர் நிரந்தவதிவிட உரிமை பெற்றனர். இதைப்பற்றி நாம் கடந்த இதழிலும் குறிப்பிட்டிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படி வழக்குகளை துரிதப்படுத்தனாலும், மீண்டும் மீண்டும் அகதிகள் வருவதனால் அகதிகளின் கோப்புக்களும் அதிகரிக்க ஆரம்பித்தன. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே கனடா வரும் அகதிகளுக்கும், கனடாவுக்கு கொண்டு வரப்படும் அகதிகளுக்@கும் ஒரு சரியான அமைப்பு அவசியம் என்று கருதி, மல்ரோனி அரசு பில் சி 55 என்கின்ற மசோதா மூலம், இன்று கனடாவில் காணப்படும் குடிவரவு அகதிகள் சபையை உருவாக்க பாராளுமன்றத்தில் ஒரு நகர்வை மேற்கொண்டது.

கனடா வரும் அகதிகள் இரண்டு கட்டங்களாக விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது. கனடா வரும் அகதிகள் கனடாவில் அகதிநிலை கோரிக்கைக்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், அப்படி உரித்துடையவர்களாக இருக்கும் பட்சத்திலேயேதான் அவர்கள் கனடாவிலே அகதிக்கோரிக்கைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அந்த மசோதா தெட்டத் தெளிவாக எடுத்தியம்பியது,

இவையெல்லாவற்றையும்விட கனடவிற்கு வரும் ஒரு அகதி, ஒரு மூன்றாவது பாதுகாப்பான நாட்டின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசிப்பாரேயாயின் அவருக்குக் கனடாவிலே அகதி அந்தஸ்த்து கோரும் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மசோதா சொல்லியது. ஒட்டு மொத்தத்திலே அகதிகள் சம்பந்தமாக கனேடியச் சட்டத்தில் இருந்த பல விதிகள் இறுக்கப்பட்டன என்பதுதான் உண்மை. அந்த மசோதா பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்ட போது, இதிலிருந்த சட்ட விதிகளைக் கண்டித்து அகதிகளுக்காக குரல் கொடுக்கும் பல நிறுவனங்களும், சட்ட வல்லுனர்களும் இந்த மசோதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். எழுந்தமானமாகப் பார்க்கும்போது, அகதிகளின் வருகையையும், அவர்கள் கனடாவிலே உள்வாங்கப்படுவதையும் துரிதப்படுத்துவதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டதுபோல தோன்றினாலும், இந்த மசோதா பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும்போது இதனுடைய பல உள் சரத்துக்கள் அகதிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அகதிகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்கள் வாதிட்டன.

இப்படி அகதிகளை கனடாவில் உள்வாங்குவது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோதுதான் நம் கடந்த இதழில் பார்த்தவாறு பல சீக்கிய இனத்தவரைத் தாங்கிக் கொண்டு அகதிக்கப்பல் ஒன்று நோவஸ்கோசியாவை வந்தடைந்தது. ஏற்கனவே மசோதா சி55இனால் அமளிப்பட்டுக்கொண்டிருந்த பாராளுமன்றத்திலே மேலும் சூடான விவாதங்களை இந்த சீக்கிய மக்களின் கப்பல் உருவாக்கியது.

நாம் கடந்த இதழில் பார்த்தவாறு கடல் வழியாக வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த இன்னொரு சட்டமும் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டது. அகதிகளைக் கட்டுப்படுத்துவது தடுப்பக்காவல் சட்டம் என்று அழைக்கப்பட்ட அந்த சட்டம்தான் பில் சி 84.

பில் சி 84 மிகத் துரித கதியிலே 1987ம் ஆண்டு, கனடியப் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டது. கனடியப் பாராளுமன்ற வரலாற்றிலேயே அகதிகளின் வருகையைக் குறித்தும், கனடாவிலே அவர்களை எப்படிக் கையாளவேண்டும் என்ற அரச நடை முறைகள் குறித்தும் இரு சட்டங்கள் அடுக்கடுக்காக சமர்ப்பிக்கப்பட்டது 1987ம் ஆண்டு என்றே சொல்லப்பட வேண்டும். இந்த இரு சட்ட மசோதாக்களிலும், பில் சி 84, பில் சி55ஐ விட மிக இறுக்கமானதும் கடுமையானதுமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அகதிகளின் நலன் பேணும் குழுக்கள் போர்க்குரல் எழுப்பினர்.  இந்த எதிர்ப்புக்கள் காரணமாக இந்த இரு சட்ட மசோதாக்களும், சட்டமாவதற்கு பாராளுமன்றத்தில் நீண்ட காலம் எடுத்தது. ஆனால் ஈற்றிலே அரசினுடைய சட்ட மசோதாக்கள், பாராளுமன்றத்திலே ஏற்றுக் கொள்ளப்பட்டு கனடாவில் சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டங்கள் அரசு எதிர்பார்த்தபடி அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தியதா அதன் பலாபலன்கள் என்ன என்பதை அடுத்த இதழிலே பார்க்கலாம்