கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

183

னைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இலங்கையில் வாழ்ந்த காலங்களில் தைப்பொங்கல், புதுவருடப்பிறப்பு, தீபாவளி மூன்றையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். மூன்று பண்டிகைகளுக்கும் புது உடுப்பு கிடைக்கும். பள்ளிக்கூடம் லீவு கிடைக்கும். வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்புவதில் பிஸியாக இருப்போம். நாமே சொந்தமாக வாழ்த்து அட்டைகள் தயாரித்து அனுப்பிக் கொள்வோம். ‘தீபம்’ + ‘ஆவளி’யே தீபாவளி என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்ததால் (ஆவளி என்றால் வரிசை) நாம் தயாரிக்கும் வாழ்த்து அட்டைகளில் தீபம் நிச்சயம் இருக்கும். (அதை வரிசையாக இருப்பதுபோல வரைவதுதான் சலஞ்ச்.) சிவாஜி அல்லது எம்ஜியார் புதுப் படங்களை ரிலீஸ் பண்ணுவார்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை. இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் கே.எஸ்.ராஜா அட்டகாசம் செய்வார். தைப்பொங்கல்… வருடப்பிறப்பு… தீபாவளி… இந்த மூன்று பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் தீபாவளி மட்டும் கொஞ்சம் வித்தியாசமான கொண்டாட்டமாக இருக்கும். வெடி, மத்தாப்பூ என்பன வாங்கித்தருவார்கள். பகலில் வெடி. இரவு மத்தாப்பூ. இதைவிட இன்னொன்றும் உண்டு.  தீபாவளிக்கு மட்டும் ஆட்டிறைச்சி சமையல் இருக்கும். (பெரியவர்கள் சாராயம்).

தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்து இன்று பலருக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். தீபாவளி மதம் சார்பான பண்டிகையா அல்லது தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகையா என்ற கேள்விகள் ஒருபுறமாக காலகாலமாக தொடுக்கப்படுகின்றன, இது தமிழரின் பண்டிகையா அல்லது தமிழர்மீது திணிக்கப்பட்ட பண்டிகையா என்ற கேள்விகள்கூட இருக்கின்றன. கேள்விகள் எவையாக இருந்தாலும், நமது தொன்மையான மரபு வழிவந்ததொரு பண்டிகைதான் தீபாவளி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சைவ சமயத்தில் மட்டுல்ல, வைணவ சமயம், சீக்கியம் என எல்லா மதங்களுக்கும் ‘தீபாவளி’ உண்டு. கொண்டாடப்பட அதற்கான ஒரு மதவிளக்கமும் உண்டு. ‘நரகாசுரன் என்ற அசுரனை அழித்த தினம்தான் தீபாவளி’ என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது திருமாலின் பன்றி அவதாரத்திற்கும், பூமாதேவிக்கும் உருவான சக்தியே நரகன் என்று அழைக்கப்பட்ட நரகாசுரன் என்று சொல்லப்படுகிறது. அந்த ‘அசுரன்’ யார் என்று பார்த்தால் திருமால் என்ற ‘கடவுளின் மகன்’!

நரகாசுரன் கதையோ வேறெந்த புராணக் கதையோ வெறுமனே சமயம் சார்பான கற்பனைக் கதைகள் அல்ல. பொதுவாக சமயம் சார்பான புராணக் கதைகள் புனைகதைகள்போல சும்மா உட்கார்ந்து எழுதப்பட்டதாக இருக்க முடியாது. அவை அவற்றிற்குப் பின்னால் ஏதோ ஒருவகை மரபார்ந்த வாழ்க்கைப் பின்னணி இருக்கும். அவை குறியீட்டு முறையாக உருவாக்கித் தரப்பட்டவையாகவே நிச்சயம் இருக்கும். எந்த ஒரு புராணக் கதைக்கும் உள்ளர்ந்த தத்துவ விளக்கம் இல்லாமல் போகாது. ஒரு வேளை புராணம் சொல்லும் தத்துவ விளக்கம் வேறு தத்துவ விளக்கங்களோடு முரண்படலாம். ஆனால் ‘தத்துவ விளக்கம்’ என்ற அளவில் அது ஆழமான தொன்மங்களை தன்னகத்தே வைத்ததாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“தீமைக்கும் நன்மைக்குமான போரில் தீமை அழிந்தது” என்று சொல்வதுதான் தீபாவளிக்கான விளக்கம் என்றே வைத்துக் கொண்டாலும், நரகாசுரன் கதையில் நரகாசுரன் பூமாதேவிக்குப் பிறந்தவன் என்று சொல்லும்போது “அவனை ஏன் பூமியின் மகனாக உருவதித்தார்கள்?” என்ற கேள்வி எழுகிறது. பூமியில் இருந்து எழுகின்ற தொற்றுநோய்கள், பேரழிவுகள் என்பவற்றின் உருவகமே நரகாசுரன். அந்த அழிவு சக்தி வேறு எங்கிருந்தும் வரவில்லை. நாம் வணங்கும் ஒன்றில் இருந்தே அதுவும் வந்திருக்கிறது. அதாவது நாம் வணங்கும் ஆக்க சக்திதான் அந்த அழிவு சக்தியையும் பிறக்க வைத்திருக்கிறது என்ற விளக்கமே நரகாசுரன் என்ற உருவகம் என்றுதான் நான் இந்த புராணக் கதையை புரிந்துப் கொள்கிறேன். நரகாசுரன் கதையை இயற்கையோடு ஒன்றியதொரு விளக்கமாகவும் கொள்ளலாம். அதையே அரசியல் விளக்கமாகவும் மாற்றிப் புரிந்து கொள்ளலாம். ஒரு தீய சக்தி, தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதையும், அதைக்கூட ஒரு வரமாகக் கேட்பதாகவும் உருவகித்தே தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. (தமிழ்ப்படங்களில் வில்லன் கடைசிக் காட்சியில் மன்னிப்புக் கேட்பதுபோல.)

இன்னும் ஒன்றும் உண்டு. அன்றைய காலத்தில் இன்று இருப்பதுபோல மின்சாரம் இல்லை. பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் எரிபொருட்கள் இல்லை. இரவுப் பொழுது சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடும். மழைக்காலம் என்றால் இரவு இன்னும் சீக்கிரமாக வந்துவிடும். ஆக இருட்டில்தான் அன்றைய வாழ்வின் பாதிக் காலம் போய்கொண்டிருக்கும். அப்படியிருக்க மழைக்காலம் வந்து… அடைமழை பொழிந்தால்… எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு இரவும் பொழுதை இயற்கை நிலா வெளிச்சத்திலும், செயற்கையாக தீபங்கள், பந்தங்கள் கொழுத்திக் கழிப்பதில் ஒரு உல்லாசம் இருந்திருக்கும்! அந்த இருளைப் போக்க ஒரு தீபம் போதாது. பல தீபங்கள் வேண்டும். அப்படி தீபங்களை வரிசையாக வைத்தாலே ஒரு கொண்டாட்ட மனோநிலை உருவாகிவிடும். அதனால்தான் மழைக்காலம் வரமுன்னர் ஒரு ‘கொண்டாட்டத்திற்காக’ தீபாவளி பண்டிகை உருவாகியிருக்கிறது.

இராமாயணத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாளே தீபாவளி எனக் கொண்டாடப்படுவதாகவும் ஒரு கதை உண்டு.
வரலாற்றுப் பக்கமாகப் பார்த்தால், “சோழர்கள் காலம்வரை தமிழகத்தில் தீபாவளியானது தமிழக மக்களின் அனைத்துத் தரப்பும் கொண்டாடும் கொண்டாட்டமாக இருக்கவில்லை” என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சோழர் காலத்தில் திருவோணம் பண்டிகையே பெரும் பண்டிகையாக இருந்ததாகவும், சாக்தர்கள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடினார்கள் என்றும் சைவர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நாயக்கர்கள் காலத்தில்தான் தீபாவளி அரச ஆதரவு பெற்ற நிலைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சிங்கள மக்களிடையே தீபாவளி ஏற்றுக் கொள்ளப்பட இந்த நாயக்க தொடர்பு காரணமாக இருந்திருக்கலாம்.

நாம் கொண்டாடும் எந்த பண்டிகையும் ஏதோ ஒரு வழியில நம் மரபுடன் இணைகிறது. அந்த மரபுச் சங்கிலியில்தான் இன்று நாம் வாழும் காலமும் கொழுவப்பட்டுள்ளது. நமக்குப் பின்னாலும் இந்த மரபுகள் தொடர்ந்து காவிச் செல்லப்படும். அதனால்தான் அதை காவிச் செல்ல நம் மரபுகளின் கொண்டாட்டங்களை எம் குழந்தைகளிடம் ஒப்படைப்பது மிக அவசியமாகும். சுருக்கமாச் சொன்னால், தமிழராக நாம் கொண்டாடிவரும் எந்த ஒரு பண்டிகைகையையும் நம் குழந்தைகளை கொண்டாட வைப்பது நம் தமிழ் மரபின் தொடர்ச்சியை உறுதி செய்யும். அதாவது “என் அப்பாவும் அம்மாவும் என்னைத் தீபாவளி கொண்டாட வைத்தனர்” என்பது மட்டும்தான் இந்தக் கட்டுரையின் முதல் பந்தியில் நான் சொல்லியிருப்பது.