சிவசேனை: தமிழர்களிற்குள்ளும் மத சண்டை மூளுமா?

93

லங்கைக்கும் சிவசேனை வந்துவிட்டது! என்ன நடக்கும்? வடக்கு, கிழக்கில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மதத்தினர் நெருக்கடிகளை சந்திப்பார்களா? மதரீதியான பதற்றங்கள் நடக்குமா? இந்து அடையாளம் மேலெழ தமிழ் அடையாளம் பின்தள்ளப்படுமா? தமிழ் அடையாளம் பின்தள்ளப்பட்டால் தமிழர்களின் உரிமைப் பயணம் பலவீனப்படுமா? தமிழர்களை பலவீனப்படுத்த திட்டமிட்டரீதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா?

இப்படி நிறைய கேள்விகளாலும், சந்தேகங்களாலும், விவாதங்களாலும் தமிழ் இணைய, சமூகவலைத்தளங்கள் நிறைந்துள்ளன. உண்மையில் சிவசேனை ஆபத்தானதா? இதற்கு தெளிவான பதிலை இப்பொழுது சொல்ல முடியாதென்பதே உண்மை. சமூகவலைத்தளங்களில் மாற்றுக்கருத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதீதமாக பதட்டப்படுவதைப் போலவோ அல்லது சிவசேனை சும்மா அமைப்பு என அசட்டையாக இருப்பதை போலவோ அதனை அணுக முடியாது. சற்று எச்சரிக்கை கலந்த விழிப்பு அவசியம்.

இந்திய அரசியலில் சிவசேனா முக்கிய சக்தி. இந்து மதத்தின் பெயரால் அங்கு நடக்கும் வன்முறைகளின் ஊற்றுவாய் அந்த அமைப்பு. மும்பை தாரவி பகுதியில் சிவசேனை நிகழ்த்திய வன்முறைக்கு வரலாறேசாட்சி. இந்திய சிவசேனாவின் நீட்சிதான் இலங்கை சிவசேனை எனில் அது அவதானமாக கையாளப்பட வேண்டிய விவகாரம்.

ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கூற்றுப்படிபார்த்தால், இரண்டு அமைப்புக்
களிற்குமிடையில் நெருக்கமான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நிகழ்ந்தால் அது ஆபத்துக்களை விளைவிக்கலாம். இந்திய சிவசேனா முஸ்லீம்களுடன் தீராத பகையை வைத்துள்ளது. சிவசேனாவின் நீட்சிதான் சிவசேனையெனில் அது தமிழர் போராட்டத்தை வழியில்லாத முட்டுச்சந்திற்குத்தான் கொண்டு செல்லும்.

பிரச்சனைகளை மதத்தின் பெயரால் அணுகும்போது ஏற்படும் விளைவுகள் பெரியவை. உதாரணமாக, திருக்கேதீஸ்வரத்திற்கு அண்மையில் மாதா சொரூபம் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதை இந்து, கிறிஸ்தவ விவகாரமாக அணுகியதைவிட, தமிழர்களாகத்தான் பெருமளவிற்கு அணுகப்பட்டது. அதனால் சிறிய சச்சரவுகள் தோன்றினாலும் அது பதற்றத்தை ஏற்படுத்துபவையாக மாறவில்லை.

நயினாதீவு புத்தர்சிலை விவகாரமும் அப்படித்தான். இந்த விவகாரங்களை தமிழர்கள் அரசியலின் ஒரு பகுதியாகத்தான் அணுகுகிறார்கள். மத விவகாரங்களாக குறுக்கவில்லை. புத்தர்சிலை பெருக்கத்தின் பின்னணியில் மத நோக்கங்களை விட அரசியல் நோக்கங்கள்தான் பெரிதும் இருக்கும். இந்த பின்னணியில் மத அமைப்பொன்று தலையெடுத்து, இப்படியான விவகாரங்களில் தலையிட்டால், போராட்டங்களில் இறங்கினால் அது சிக்கலை அதிகப்படுத்தும். தமிழர்களாக ஒன்றிணைவதை மதங்களாக பிளவுபடுத்துவது நிச்சயம் ஆபத்தே.மத அடையாளங்களை காப்பாற்றுவது, மத மாற்றங்களை தடுத்து நிறுத்துவது போன்ற வேலைத்திட்டங்களைத்தான் சிவசேனை முன்மொழிந்துள்ளது.

மத அடையாளங்களை பேணுவதென்பதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் எல்லா விடயத்தையும் விடவும் மதத்திற்கு முன்னுரிமையளிப்பவர்கள். கோயிலில்லா ஊரில்ல, கோலியல்லா தெருவிலேயே குடியிருக்க மாட்டோம் என வீதிக்கு வீதி கோயில் கட்டி வைத்துள்ளார்கள். மத அடையாளங்களை வெளிப்படுத்த தடையிருப்பதாக எந்தப்பகுதியிலும் தமிழர்கள் முறையிட்டதில்லை. ஆலயத்தில் பகிரங்கமாக வழிபட அச்சப்பட்டு மனதிற்குள்கோயில் கட்டி வழிபடும் பூசலார்களும் இங்கில்லை.

வன்னியில் இறுதி யுத்தம் தீவிரம் பெற்றிருந்தது. கொத்துகொத்தாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். யுத்த வலயத்திற்கு வெளியில் இருந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழர் பகுதியிலும் ஒரு இந்து ஆலயத்தில், ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருவிழா தடைப்படவில்லை. வழிபாடுகளிற்கு அரசும் தடைவிதிக்கவில்லை.

இதற்காக, சிறுபான்மை தமிழர்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்பது அர்த்தமல்ல. இந்த விவகாரம் அரசியல் விவகாரம். வடக்கில் வகைதொகையில்லாமல் விகாரைகள் முளைப்பது, இந்து ஆலயங்கள் தாக்கப்படுவது அரசியல் பின்னணியை கொண்டது. அது அரசியல்தீர்வின் மூலமே தீர்க்கப்பட கூடியது. சிவசேனை சூலாயுதத்துடன் கோயில்களில் காவல் நின்று அனுராதபுர ஆலயம் இடிக்கப்பட்டதை போன்ற அடாவடித்தனங்களை நிறுத்த முடியாது. தேவையெனில் மோதல் போக்கை அதிகரிக்க மட்டும் செய்யும்.

அடுத்த விவகாரம் மதமாற்றம். தமிழர்கள் யாரும் – அது இந்துவோ, கிறிஸ்தவர்களோ கட்டாயமாக பௌத்த மதத்திற்கு மாற்றப்படுவதாக ஒரு தகவலும் வெளியாகவில்லை. நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற விவகாரங்கள் வேறு. மதமாற்றம் வேறு. பௌத்த மதமாற்ற அபாயம் இந்துக்களிற்கு கிடையாது. ஆக நடப்பது இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதே. அதிலும் றோமன் கத்தோலிக்கர்களாக மாறும் அபாயம் இல்லை. சிறிய சபைகள்தான் ஆட்களை உள்ளீர்ப் பதில் அதீத ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்த விவகாரம் அச்சுறுத்துமளவிற்கு பெரிதாக இல்லை. இன்னொரு விடயம்

இந்த மதமாற்றங்களும் கட்டாய மதமாற்றங்கள் அல்ல.ஆகவே தற்போதைய நிலையில் மதத்தை முன்னிறுத்திய அமைப்புக்களின் தேவை தமிழர்களிற்கு கிடையாது. மதத்தை முன்னிறுத்திய நகர்வுகள் நிச்சயம் தமிழர்களை பிளவுபடுத்தும். நாங்கள் தமிழர்களாக சிந்திக்கப் போகிறோமா அல்லது இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் சிந்திக்கப் போகிறோமா என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.

சிவசேனை விவகாரத்திற்கு இந்த பார்வை மட்டும்தான் உள்ளதென்றுமில்லை. இன்னொரு பார்வையும் உள்ளது. இந்துக்கள் தமது அடையாளங்களை பேண ஒரு அமைப்பை உருவாக்கும் சகலவித உரித்தும் கொண்டவர்கள். பொதுபல சேனா தீவிரமாக பௌத்த மதவாதத்தை முன்னிறுத்துகிறது. முஸ்லீம்கள் அரசியலாலும் மதத்தாலும் ஒன்றுபட்டு, மத நிறுவனங்களை பலமாக பேணி வருகிறார்கள். கிறிஸ்தவ மத நிறுவனங்கள் நமது சமூகத்தில் எவ்வளவு பலமானதென்பதை அதிகம் எழுத வேண்டியதில்லை. அரசியல், காவல்த்துறையில் ஆதிக்கம் செலுத்த வல்லவை கிறிஸ்தவ மத நிறுவனங்கள். இவற்றுடன் ஒப்பிடும்போது இந்து மத நிறுவனங்கள் அதிகாரபீடங்களாக உருவெடுக்கவில்லை. அதிகார பீடங்களாக உருவெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களெதுவும் இந்து மத நிறுவனங்கள், அமைப்புக்களிடம் இருக்கவில்லை. பற்றற்றதன்மையை வலியுறுத்திய மதமல்லவா!

தேர்தல் சமயத்தில் செல்வாக்கு செலுத்தாத ஒரே மதம் இந்துதான். மற்றைய மதங்கள் தம்சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கும். வடக்கு, கிழக்கிலும் இதுதான் நிலை.மத அமைப்பொன்றை உருவாக்குவது ஒன்றும் சாவான பாவமல்ல. ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்ப பகுதியில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். யதார்த்தம் என்னவென்றால், தீவிர மத அமைப்புக்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. படிப்படியாக தீவிர நிலையை நோக்கி அவை நகர்ந்துவிடும். இந்த விவகாரத்தில் உள்ள ஒரே ஆறுதல் மறவன்புலவு சச்சிதானந்தம் மட்டுமே. தமிழ்தேசிய அரசியலின் பாதையில் நடந்த நீண்ட வரலாறுடையவர். மத தீவிரவாத அமைப்பாக மாறுவதோ, மத சிக்கலை தோற்றுவிப்பதோ இந்த அமைப்பின் நோக்கமல்ல என்று அவர் கூறுகிறார். அவருக்குள்ள இந்திய தொடர்பை குறிப்பிட்டு, இது உள்நோக்கமுள்ள ஆபத்தான இந்திய இறக்குமதியென்ற எச்சரிக்கையை விடுபவர்களும் உள்ளனர்.

இன்னொரு ஒருங்கிணைப்பாளரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் சிவசேனை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை, இது அகிம்சைவழியிலான ஒரு அமைப்பு என்றுள்ளார். ஆனால் உலக வரலாறு சொல்வது வேறு விதமாக-

மதம் ஒரு போதை. அதை அருந்தியவர்கள் சாத்தான்களாகிறார்கள் என்கிறது.