சுய நிதி முகாமைத்துவம் – 2

125

ணமில்லாதவைரைப் பிணமும் மதியாது என்பார்கள். இந்தப்பணத்தின் வரலாறு என்ன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்ளா? மனிதர்களின் கொடுக்கல் வாங்கல்கள் வளர வளர பண்டமாற்றில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பரிமாற்று ஊடகமாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது.  பரிமாறலில் உள்ள சிக்கலை பணத்தின் வளர்ச்சி தீர்த்தது. ஆனால் இப்போது பணம் என்பது ஒரு சிக்கல் நிறைந்த பரிமாறலிற்கு வித்திட்டு இருக்கிறது. பணம், பங்குச்சந்தை, வங்கிகள் என இன்றைய நிதி உலகு வளர்ந்திருக்கும் இந்நிலையில் நாம் எல்லோருமே ஒருதடவை நினைத்துப்பார்க்க வேண்டிய விடயம் என்னவென்றால் பணம் என்பதற்கு உள்ளார்ந்த பெறுமதி என்கிற ஒன்று இல்லை. பணம் என்பது பரிமாற்று ஊடகமாக மட்டுமே பயனடைகிறது. ஒரு தேசத்தின் உண்மை உற்பத்திகள் வளராமல் பண ரீதியாக வரும் வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம் தான். எப்படியும் ஒரு முறை அந்த நிதிச் சந்தை உண்மை உற்பத்தியின் இடத்துக்கு விழுந்தே ஆகும். அதனால் தான் தவறாமல் கொஞ்ச காலத்துக்கொருமுறை நாம் பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறோம். வட அமெரிக்கா போன்ற மிகச்சிக்கலான நிதிச் சந்தைகளின் மிகப்பெரும் சாபம் என்னவென்றால் இந்த பணம் என்னும் மாயவலை தான். இதை இயக்கும் கைகள் தனிமனிதருடையவை அல்ல. கூட்டு எதிர்பார்ப்புக்கள் மற்றும் பேராசைகளின் வடிவம் என்றே சொல்லலாம்.

நிதிச்சந்தையின் சிக்கலைப் பார்த்து பயந்து ஒதுங்கியிருப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அதனைக் கையாளத்தெரிந்தவர்கள் நிறைய பயனடைந்தும் இருக்கிறார்கள். எது எப்படியோ நமது நிதி முகாமைத்துவ திறமையை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ளல் இந்த சிக்கலான உலகில் மிகுந்த பயனைத் தரும். எல்லாவற்றுக்கும் முதல்படி நமது கடன் அட்டைகளை நாம் சரிவர முகாமைத்துவம் செய்யப் பழகிக் கொள்வது தான்.  சென்ற வாரம் கடன் அட்டைகளைப்பற்றி ஒரு அறிமுகம் பார்த்தோம். கடன் அட்டை என்றாலே ஆபத்து என்றும் அது ஒரு தவிர்க்க முடியாத தலைவலி என்றும் நம்மில் பலர் கருதுவதுண்டு. ஆனால் கடன் அட்டையில் பல நன்மைகளும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் பாவிப்பவர்களுக்கான பயன்களும் இருக்க்கின்றன.

கடன் அட்டைகளின் பயன்பாடுகளை பொதுவில் மூன்று வகைப்படுத்தலாம். முதலாவது எமது வருமானத்துக்கும் செலவுக்கும் இடையில் ஏதாவது கால வித்தியாசமிருப்பின் அதனை இவ்வட்டைகளைக் கொண்டு நிவர்த்தி செய்ய முடியும். அதாவது நாளை சம்பளம் வரும் ஆனால் இன்று ஒரு செலவை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இவ்வட்டைகளை உபயோகப்படுத்தலாம். ஆனால் வருமானம் வரும் நேரமும் தொகையும் சரியாகத் தெரிந்து திட்டமிட்டு பயன்படுத்தினால் மட்டுமே அதனால் நன்மை ஏற்படும். இல்லாவிட்டால் வருமானத்துக்கு மீறிய செலவு ஏற்பட்டு வட்டிச்செலவு கையை மீறிவிடும்.

இரண்டாவது பயன் நமது கடன் புள்ளியினை (Credit Score) கட்டியெழுப்புவது. நாம் ஒருபோதுமே கடன் வாங்காதவர்கள் என்று பெருமையாகச் சொல்லி கொள்ளும் காலம் போய் விட்டது. கடன் வாங்கி, அதை மீளக்கட்டிய வரலாறு என்பது வட அமெரிக்காவின் கடன் முறைமையில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அதை ஆரம்பிப்பதற்கும் மிக எளிதாகக் கட்டியெழுப்புவதற்கும் கடன் அட்டைகள் உதவுகின்றன. எதிர்காலத்தில் குறைந்த வட்டியில் நீண்டகால தேவைகளுக்கான வீட்டுக்கடன் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு இது அவசியமாகிறது.  கடன் அட்டையினை சரியான முறையில் பாவித்து மாதாந்தம் முழுமையாக மீதிகளைக் கட்டி வரும் போது மட்டுமே நமது கடன் புள்ளியை அதிகரிப்பது சாத்தியமாகிறது.

மூன்றாவது பயன் ஒவ்வொரு கடன் அட்டைகளையும் பொறுத்து வேறுபடும் சலுகைகள், விலைக்குறைப்புக்கள், பரிசுகள் என்பவை சார்ந்தது. உதாரணமாக சினிபிளெக்ஸ் இல் இலவச படம் பார்ப்பதற்கான புள்ளிகளை வழங்கும் கடன் அட்டை ஸ்கோஷியா வங்கியில் வழங்கப்படுகிறது. அதிகம் நீங்கள் பயணம் செய்பவர் என்றால் வான் மைல்களை வழங்கும் அட்டை ஒன்று உங்களுக்கு பயனளிக்கக்கூடும். அது போலவே பல வங்கிக் கடன் அட்டைகள் நாம் செலவிடும் பணத்தின் சிறிய வீதத்தை (1 அல்லது 2 வீதம்) மீள வருட முடிவில் எமக்கு வழங்குகிறது. வியாபார நிறுவனக்களின் அட்டைகள் பொருள் விலைகளில் கழிவினை பலவேளைகளில் வழங்குகின்றன. இவை எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்தி இலாபமீட்டுவதென்றால் அதற்கு நாம் கடன் அட்டைகளைப் பெறும்போது அது பற்றி முழுமையாக அறிந்து கொண்டு அதற்கேற்ப தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தால் மட்டுமே முடியும்.

கடன் அட்டைகள் வழங்கும் இந்தப் பயன்பாடுகளை நமக்கு இலாபம் தரும் வகையில் பயன்படுத்துவதற்கான அடிப்படை தூர நோக்குடனான திட்டமிடல் தான்.

இதுபற்றி மேலும் விரிவாக அடுத்தவாரம் பார்க்கலாம்.