யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்

209

யாழ் பல்கலைக் கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டமையும், அதைத் தொடர்ந்து, இரண்டு இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு நடாத்தப்பட்டதுவும், திட்டமிட்ட வகையிலான நடவடிக்கையாக இருக்க முடியும் என்று எழுதுகிறது லங்கா ஈ நியூஸ் இணையப் பத்திரிகை. முன்னைய அரசாங்கத்தால் கடத்திச் செல்லப்பட்டு இன்றுவரை உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தெரியாமலிருக்கும் ஊடகவியலாளரும் சிறந்த கேலிச்சித்திரக்காரருமான எக்னலியகொட அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இணைய பத்திரிகைதான் லங்கா ஈ நியூஸ்.. இந்தக் கொலை தொடர்பாக அது, தங்களுடன் தொடர்பாயுள்ள, வடக்கில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

“1983க்குப் பிறகு பொலிசாரால் யாழ்ப்பானத்தில் சிவிலியன்கள் மீது நடாத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. (இந்த தகவல் தவறு 1984க்குப் பிறகு என்று சொல்வதே சரியாக இருக்கும். சுன்னாகப் பொலிஸ் நிலையப் படுகொலை, பருத்தித்துறைப் படுகொலைகள் இரண்டிலும் மொத்தமாக 26 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் 1984 இல் நடைபெற்றன- தீபம்)  யுத்த காலத்தில்,கூட, இராணுவத்தினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஒழிய பொலிசாரால் தாக்கப்பட்டதில்லை. அப்படியிருக்க, நிறுத்தச் சொன்னதைக் கேட்காமல், வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியதற்காகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம் என்பது சந்தேகத்துக் குரியதும், முழுக்க முழுக்க ஒருவகைச் சதி நோக்கத்துடன் -செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என தான் கருதுவதாக அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்” .

“வழமையாக இவ்வாறு நிறுத்தாமல் வாகனம் ஓட்டுபவர்களை, அவர்களது வாகன பதிவு இலக்கத்தை வைத்து வாகன உரிமையாளர் பற்றிய தகவலைக் கண்டு பிடிப்பதுவே நடை முறையில் இருக்கிறது. அதுவும் இன்றைய தொலைத்தொடர்பு வசதிகளின் காரணமாக, ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முழு விபரங்களையும் பெற்றுவிட முடியும். அதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  தவிரவும், முக்கியமாக அவசரகால நிலை அமுலில் இல்லாத போது, ஒரு பொலிஸ்காரருக்கு ரி- 56  ரக துப்பாக்கியால் சுட எந்த அதிகாரமும் இல்லை. அப்படி சுடுவதற்குரிய தேவை இருந்தாலும், அதற்கான முன்னனுமதியை  பெற்றிராமல் அவர் அப்படிச் சுட முடியாது. இதைவிட முக்கியமான விடயம் என்னவெண்றால், இன்றைய பாதுகாப்புச் செயலாலர், (இவர் முன்னிய ஜனாதிபதி மகிந்தவுக்கு விசுவாசமான ஒருவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர்) துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் அடங்க முன்னரே, இதற்கும் பொலிசுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று தெரிவித்திருப்பது, இந்தச் சதி நோக்கத்தை மேலும் வலுப்படுத்தப்படுகிறது”

“அந்தப் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், கொழும்பிலிருக்கும் சட்டம் தொடர்பான பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹனவின் (இவரும் இன்னொரு ராஜபக்ஷ எடுபிடி தான்) அறிவுறுத்தலின் பேரில். இந்தச் சூட்டுச் சம்பவம் வெறும் வீதி விபத்தாக முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதியப்பட்டது. ஆனால், அதன் பிறகு வெளியான தகவல்களால்,  நிலமைகள் மோசமாக திரும்புவதைக் கண்டதும், அந்தப் பதிவுகள், மூன்று பதிவேடுகளிலுமிருந்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன.” “இந்த நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிவிலில் இருந்த இரண்டு பொலிஸ் புலனாய்வுப்பிரிவு பொலிஸ்காரர்கல் மோட்டார் சயிக்கிளில் போகும் போது சுண்ணாகத்தில் வைத்து வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இது ஒரு உள்வீட்டு தகராறு என்றே நான் கருதுகிறேன். வாளால் வெட்ட வந்தவர்கள், இலக்கத் தகடில்லாத மூன்று மோட்டார் சயிக்கிளில் வந்து, தாக்கிவிட்டு ஓடிவிட்டார்கள். இந்த நடவடிக்கை, ராஜபக்ஷவுக்கு சார்பான இராணுவ உளவுப்பிரிவின் உறுப்பினர்கள், பல்கலைக் கழக மாணவர்களின் பழிவாங்கலே இது எனக் காட்டி இனவெறித் தாக்குதலை உருவாக்க எடுத்த ஒரு நடவடிக்கைதான்.கொல்லப்பட்ட மாணவனின் வீட்டிலிருந்து 1 மைல் தூரத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தாக்கப்பட்ட நவரத்ன, ஹேரத் ஆகியோரை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் சிவில் உடையில் அலைபவர்கள். இரகசியப் பொலிசார். தவிரவும், தாக்குதல் நடந்த இடத்தில் எந்த சிவிலியனும்,இலக்கத் தகடில்லாத மோட்டார் சயிக்கிளில் திரிவதில்லை. ஆகவே இது திட்டமிட்டு அதே ராஜபக்ஷ சார்புக் குழுக்களிடையே நடந்த, மீண்டும் ஒரு யுத்த சூழலை உருவாக்க செய்யப்படும் சதி நடவடிக்கையே.” என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார் இவ்வாறு அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பெருந்திரளாக திரண்டு நின்று கச்சேரியை முற்றுகையிட்ட்டு நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் பின் கொல்லப்பட்ட தமது நண்பர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று கோரும் மகஜர் ஒன்றை அரசாங்க அதிபரிடம் கயளித்துள்ளனர். தமது இந்தக் கோரிக்ககளுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாது என மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.