யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிசாரின் துப்பாக்கிச் சூடு

88

ல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி  முழுமையாக ஆராயப்பட வேண்டும். நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்களை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோருகின்றேன்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொக்குவில், குளப்பிட்டியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் உந்துருளியில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. பின்பு நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் ஒருவர் சுடப்பட்டதால் இறந்தாகவும் அதனால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மற்றையவர் இறந்தாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் உந்துருளியில் சென்ற போது பொலிஸார் மறித்தாகவும் அவர்கள் நிற்காமல் சென்ற காரணத்தினால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறிக்கும் போது அவர்கள் செல்லும் வாகனத்தின் இலக்கத்தை அடையாளம் கண்டு பின்பு அவர்களை கைது செய்வது சிரமமான காரியம் அல்ல. மேலும் பல இடங்களிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதும் இயலுமான காரியமே. அப்படியான நிலையில் அவர்கள் சுடப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அது மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாகனம் மறிக்கும் போது நிற்காமல் சென்றால் அதற்கு எதிராக தவிர்க்க முடியாத உயர்பட்ச நடவடிக்கையாக ரயருக்கு சுடுவதே வழமையான விடயமாகவுள்ளது. ஆனால் இங்கு மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது முக்கியமாக ஒரு முறை மீறிய நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் 5 பொலிஸார் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் வரவேற்கும் வேளையில் இது தொடர்பான விசாரணைகள் நேர்மையாகவும் நியாபூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்கின்றோம்.

போர் முடிந்த பின்பு படுகொலைகள் கொள்ளைகள் கிறிஸ்பூத அச்சுறுத்தல்கள் என பல விதங்களிலும் தமிழ் மக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் இல்லை. இந்த விடயங்களில் பொலிஸார் ஒரு அக்கறையற்ற போக்கே கடைப்பிடித்தார்கள் என்று மக்கள் நம்பினார்கள்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்தகைய அத்துமீறல்கள் இல்லாமல் போய்விட்ட போதிலும் வாள் வெட்டுச் சம்பவங்கள் மக்களின் இயல்புவாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. பகிரங்க இடங்களில் வாள்களுடன் வந்து காடைத்
தனம் புரிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட போதும் அதனைத் தடுப்பதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சில சம்பவங்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும் கூட அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தே வந்தன. சில நாள்கள் அவை இல்லாமல் போன போதும் மீண்டும் அத்தகைய வாள் வெட்டுச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன. அதை தடுப்பதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவு அமைத்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன் பலன் அப்பாவி மாணவர்கள் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவதுதானா என்ற கேள்வி எழுகின்றது.

“அடிப்படையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு பின்னால் நின்ற சூத்திரதாரிகள் யார் என்பது கண்டு பிடிக்கப்படவுமில்லை. வெளிப்படுத்தப்படவுமில்லை. அதன் காரணமாகவே சிலர் தண்டிக்கப்பட்டாலும் கூட அவை தொடர்ந்து இடம்பெற்றன என்பதை சகலரும் உணர்ந்து கொள்ள முடியும். இன்று அவற்றைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மேல் பொலிஸ் பாய்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன என்று ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதா எனக் கேட்க வேண்டியுள்ளது. இம் மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் சென்றார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்தவே சுடப்பட்டார்கள் என்று காரணம் சொல்லும் முகமாக இதை மேற்கொண்டிருக்கலாமோ என்று ஒரு கேள்வியும் எழுகின்றது. மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கப் போகின்றது என்று ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சில சக்திகள் முனைந்து வருவதை நாம் அறிவோம். எனவே சம்பவம் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமன்றி இத்தகைய துப்பாக்கிப் பிரயோகத்தின் நோக்கம் என்ன இதன் பின்னணி என்ன என்பது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும். அப்படியில்லாமல் குற்றவாளிகள் மாத்திரம் இனங் காணப்பட்டாலோ அல்லது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டாலோ தொடர்ந்தும் எமது மக்கள் நிம்மதியற்ற அச்சுறுத்தலுக்க உள்ளான ஒரு வாழ்வையே எதிர்நோக்க வேண்டிவரும். எனவே சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் உரிய நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரையும், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” – என்று அந்த அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.