விழித்திருப்போம்!

169

யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சம்பவம், பொலிஸ் தரப்பில் இவ்வளவு பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொத்துக் கொத்தாக மக்களைக் குண்டு போட்டுக் கொன்றபோதும் சரி,அள்ளுகொள்ளையாக இளைஞர்கள் கேள்வி முறையின்றி பிடித்துச் செல்லப்பட்ட போதும் சரி வெறும் ஒப்பாரியை மட்டும் வைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஆதரவாக தெருநாய்களைத் தவிர வேறு யாரும் உரத்துக் குரலெழுப்பி அவர்கள் கண்டதில்லை. வடக்குக் கிழக்குக்கு வெளியே அதை ஒரு செய்தியாகக் கூடப் பகிர்ந்ததில்லை. தமிழர்களை சுடுவதற்காக பொலிசோ இராணுவமோ எந்தக் காரணத்தையும் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. இராணுவத்துக்கும் பொலிஸக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக எத்தகைய கடப்பாடும் இல்லை- அவர்கள் மிரட்டி வைக்கப்பட வேண்டியவர்கள என்பதை தவிர.

அவசர காலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் என்பன நிலவுகின்ற நேரங்களில் கூட பொலிசாருக்கு துப்பாக்கியைப் பாவிக்க விசேட அனுமதி தேவை. வாகன ஓட்டுனர்கள் பொலிசார் மறிக்கும் போது நிறுத்தாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் பல வெறும் சிவில் குற்றங்கள் சார்ந்த காணங்களாக இருக்க வாய்ப்புண்டு. சாரதி அனுமதிப் பத்திரமில்லாமல் போதல், வாகன உறுதிப் பத்திரமோ காப்புறுதியோ இல்லாமல் போதல், குடித்து விட்டு வாகனம் செலுத்துதல்,களவு அல்லது வேறு குற்றங்களை செய்துவிட்டு ஓடுதல் என்று பல காரணங்கள் இருக்கலாம்.இவை எவற்றுக்காகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய பொலிசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் நடக்கின்றன. காரணம் ஒன்றும் புதியதல்ல. நடக்கும் இடம் தமிழ் பிரதேசம். அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் படுபவர்கள் தமிழ் மக்கள் அல்லது சிறு பான்மையினர். ஆகவே அந்தப் பிரதேசங்களில் செய்பவைக்கு பொறுப்புக் கூறுவதோ, சட்டம் பற்றிச் சிந்திப்பதோ அவசியமில்லை என்பவைதான் இதற்கான காரணங்கள்.

ஆனால், நிலமை எதிர்பாராத விதமாக பெரிய விடயமாகி விடும் என்றவுடன், அதை எப்பாடுபட்டாவது மறைக்கப் பார்த்தனர். சம்பவம் நடந்த செய்தி பரவும் பொழுதே இதற்கும் பொலிசுக்கும் சம்பந்தமில்லை என்ற இப்போதைய பாதுகாப்பு செயலாளரின் கருத்தும் சேர்ந்தே பரவியது. ஆனால் உண்மை விரைவிலேயே வெளிச்சத்துக்கு வந்ததும் நிலமையை சமாளிக்கும் உத்திக்கு இறங்கினர். ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்தும் அளவுக்கு நிலமை சென்றுவிட்டதால் இப்போது எப்படி இதிலிருந்து மீழ்வது என்ற பிரச்சினை மட்டுமே பிரதானமாகிவிட்டுள்ளது.

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் போராட்டம் தவிர்க்கமுடியாமல் விசாரணையை துரிதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டுள்ளது.

ஆயினும், இந்த நிலையிலிருந்து அடுத்த கட்டம் பாதிக்கப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுதல் என்று வரும்போது, அது இழுபட்டு இழுபட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும் நிலமை தான் இங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் இதற்கு மேல் அதிகமாக எதையும் எதிர் பார்க்க முடியாது.அவர்களுக்கெதிரான வழக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வேறு பிரதேசத்துக்கு மாற்றப்படும். பிறகு அது நீண்டகால மாக இழுபட்டபின் குமாரபுரம் கொலையின் தீர்ப்புப் போல முடித்து வைக்கப்படும்.

இந்த இடத்தில் தான் அரசியல் வாதிகள் மடுமல்ல, சமூக இயக்கங்களும் மிகவும் விழிப்பாக இருந்து நியாயமான தீர்வுக்காக தொடர்ந்து போராட வேண்டும். யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணந்தது போல சிவில் அமைப்புக்களும் செயலில் இறங்க வேண்டும். பழிக்குப் பழி போன்ற நடவடிக்கைகளுக்குப் பதில் நியாயத்துக்கான போராட்டத்துக்கு குரலெழுப்பும் சக்திகளை ஒன்றிணைப்பது அவசியம். எழுக தமிழ் நிகழ்ச்சியில் தீவிரமாக இறங்கியவர்கள் கூட இதுபோன்ற விடயங்களுக்கு வெறும் கண்டன அறிக்கையுடன் நின்று விடுவது நல்லதல்ல.

மக்கள் அணியாகத் திரள்வதும், விட்டுக் கொடுக்காத போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுவதன் மூலமே நிலமை எல்லை மீறிப் போகாதிருக்கவும், நமது கோரிக்கைகளை வென்றெடுக்கவும் முடியும்.நடந்த படுகொலைகள் தற்செயலானவை அல்ல. திட்டமிட்ட படுகொலைகள். வடக்குக் கிழக்கில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை உருவாக்கும் நோக்குடனான நடவடிக்கைகள்.இவை வெறும் கண்டனத்துக்கு மட்டும் உரியவை அல்ல. தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் எதிர் கொள்ளப்பட வேண்டியவை.நாம் விழித்திருப்போம். விழிப்புடன்செயற்படுவோம் என்பதே மக்கள் போராட்டத்தின் பலத்துக்கான அடிப்படை

அநியாயமாக கொல்லப்பட்ட இந்த இரு இளைஞர்களுக்கும் தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிப்பதோடு, நியாயத்துக்கான எம்மக்களின் போராட்டங்களுடன் நேசக்கரம் நீட்டி இணைந்து கொள்கிறது.