கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

105

‘நூற்றுக்கு நூறு’ என்று ஒரு தமிழ்ப்படம் எழுபதுகளில் வெளியானது. பலரும் பார்த்திருப்போம். கே. பாலச்சந்தர் இயக்கிய படம் அது. படத்தில், ஹீரோ ஜெய்சங்கர் பெண் சபலம் உள்ளவர் என எல்லோருமே பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் ஒரு கட்டத்தில் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். இப்படியாக கதை போய்க் கொண்டிருக்க, படத்தில் வரும் ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு “இது என்ன?” என்று கேட்பார். லட்சுமி “கறுப்புப் புள்ளி” என்பார். நாகேஷ் தாளைக்காட்டி “இந்தத் தாளில் இவ்வளவும் வெள்ளையாக இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா? எங்கோ உள்ள ஒரு கறுப்பை மட்டும் கண்டுபிடித்து சொல்கிறாயே…” என்று கிண்டலாகக் கேட்பார்.

இதுபோலத்தான் நமது தொலைக்காட்சிகள் பற்றிப் பேசும்போதும் தோன்றுகிறது. எத்தனையோ சிரமங்கள்.. எத்தனையோ தியாகங்கள் என நம்மவர் புலம்பெயர் நாடுகளில் வெகுசிரமத்துடன் உருவாக்கி நடத்திவரும் தமிழ்த் தொலைக்காட்சிகளின் சேவைகள் குறித்து தெரிந்து கொண்டும், என்னைப்போன்ற சிலர் கறுப்புப்புள்ளியை மட்டுமே எடுத்துவைத்துப் பேசுகிறோமா என்ற குற்ற உணர்வு உண்டேயாயினும்…

சென்ற வாரம் கனடாவின் தமிழ் ஊடக உலகில் ஒரு குறிப்பிடத்தக்க பெரிய விடயம்  நடந்தது. ஐரோப்பாவில் புகழ்பெற்ற ‘IBC-தமிழ்’ தொலைக்காட்சியினர் கனடாவிலும் தம் ஒளிபரப்புச் சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள். கனடாவின் ATN தொலைக்காட்சயின் கேபிள் ஒளிவழியாக ‘IBC-தமிழ்’ தொலைக்காட்சி நமது வீடுகளுக்கு இப்போது வருகிறது. இந்த இணைவு குறித்த அறிவிப்பை ஒக்டோபர் 28 வெள்ளிக்கிழமையன்று ATN தொலைக்காட்சி நிறுவனர் திரு. சான் சந்திரசேகர் மற்றும் ‘IBC-தமிழ்’  உரிமையாளர் பாஸ்கரன் கந்தையா ஆகியோர் இணைந்து உத்தியோக பூர்வமாக வெளியிட்டனர். ATN ஒளிபரப்பு மையத்தில் நடந்த ATN-‘IBC-தமிழ்’ அறிமுக விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அடக்கமாக நடந்த பெரும் விழா அது. ATNனுடன் கைகோர்த்துள்ளதன் மூலம் ‘IBC-தமிழ்’  தன் தொலைக்காட்சியை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்த முயற்சியை ஒரு வெள்ளைத்தாள் என நினைத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சில ‘சின்ன சின்னக் கறுப்புப் புள்ளிகள்’ குறித்து நினைத்துப் பார்க்கிறேன்.

‘IBC-தமிழ்’இன் கனடா விஜயம் “கனடாவின் TVi, TET, தமிழ்வண் ஆகிய தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு ஒரு பின்னடைவைக் கொண்டு வருகிறது” என்ற குற்றச்சாட்டு இப்போது சில இடங்களில் பேசப்படுகிறது. ஓரு தொலைக்காட்சி நேயராக அந்தவகைக் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏற்கனவே தமிழக தொலைக்காட்சிகள் இங்கு நிறைந்து வழிகின்றன. ‘IBC-தமிழ்’ மட்டுமல்ல, நாளை இதேபோல வேறு தொலைக்காட்சிகளும் இங்கு கொண்டுவரப்படலாம். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இது சர்வ சாதாரணம். அவற்றையெல்லாம் எதிர் கொண்டு நிற்கும் பலம் இங்குள்ள உள்ளுர் தொலைகாட்சிகளான TVi, TET, தமிழ்வண் என்பனவற்றிற்கு இருக்கிறதா என்ற கேள்விதான் இத்தருணத்தில் முக்கியமாக எழுப்பப்பட வேண்டியது. தரம்மிகுந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகத் தருவதற்கு ஏற்றதொரு வியாபாரக் கட்டமைப்பை இங்குள்ள தொலைக்காட்சிகள் கொண்டிருக்கின்றனவா? “இன்றுவரை இல்லை” என்பதே இதற்கான பதிலாகும். பெரும்பான்மைநேரம் பாட்டுக்களையும் படங்களையும் போட்டுக் கொண்டு ஒடும் TVi, TET, தமிழ்வண் என்பனவற்றிற்கு ‘IBC-தமிழ்’ ஒரு பயமுறுத்தல் அல்ல.

‘IBC-தமிழ்’ தொலைக்காட்சி ஒரு முழுநேர தமிழ்த் தொலைக்காட்சி. அது மட்டுமல்லாமல் ‘ஈழத்தமிழ் பேசும்  தொலைக்காட்சி’ என்ற முத்திரையுடன்தான் புலம்பெயர் தமிழர் வாழும் இடங்களிலும், இலங்கையிலும் அது தன்னை நிலைநிறுத்துகிறது. இதனால் ‘ஒரு மகத்தான எதிர்பார்ப்பு’ அந்த தொலைக்காட்சி குறித்து நமக்கு எழுகிறது. AI Jazeera தொலைக்காட்சி மத்திய கிழக்கின் அடையாளடமாக மாறியிருப்பதுபோல ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலை வெளிச் சொல்ல ‘IBC-தமிழ்’ தன்னை அர்ப்பணித்திருக்கிறது என்றும் ATN-‘IBC-தமிழ்’ அறிமுக விழாவில் பெருமையாகச் சொல்லப்பட்டது. ஆஹா… இங்குதான் என்னைப் பொறுத்தவரை ‘பிரச்சனையே’ ஆரம்பமாகிறது. “அதென்ன ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல்?” எவ்வளவு பெரிய வார்த்தை அது. அதை ஒரு தொலைக்காட்சி சொல்லிவிடும் என்றால் எத்துணை பெரியதொரு சாதனை அது! முடியுமா நம்மால்? சிந்தித்துப் பாருங்கள்.. ஈழத்தமிழ் மக்களின் ‘வாழ்வியல்’ என இன்று சொல்லப்பட வேண்டியது எதை? போரால் சிதைக்கப்பட்ட வாழ்வையா? அல்லது தோல்வி சாம்பலாக படிந்திருக்க அதை தட்டிவிட்டு வீறு கொண்டு எழவேண்டும் என சொல்லும் வாழ்வையா? இவை இரண்டும் அல்ல… வாழ்ந்து தீர்ப்பதே வாழ்க்கை என்று வாழும் வாழ்வையா? அல்லது இவை மூன்றும் கலந்ததே வாழ்க்கை என்ற சமாதான சகவாழ்வையா? இதில் எந்த வாழ்வியலை பற்றிக் கூறுவதை ‘IBC-தமிழ்’ தன் ‘கடமை’யாகக் கொள்ளப்போகிறது? போரின் அழிவால் சிதைக்கப்பட்டிருக்கும் அடிப்படை ஜனநாயகம், தமிழ் விழுமியங்கள், அரசியல் மேன்மை என்பனவற்றை மீட்டெடுக்கவேண்டியது இன்று ஒரு கடமையாகும். கொந்தளிப்பும், தத்தளிப்பும் கொண்ட வாழ்க்கை நிலையை அப்படியே சொல்லவேண்டியது இன்னொரு கடமையாகும். தமிழ்த் தர்மங்களுக்கிடையே வரும் மோதல்களை தங்கு தடையின்றி தணிக்கையின்றிச் சொல்லி அதனூடாக ஒரு புதிய தர்மத்தைக் குறித்து மக்களைப் பேச வைக்க வேண்டியது இன்னொரு கடமையாகும். இவையெல்லாவற்றையும்விட தமிழர் வாழ்வில் ‘பலகுரல் தன்மை’ இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதும் ஒரு கடமையல்லவா? இதில் எதைப்பற்றி ‘IBC-தமிழ்’ சொல்லப்போகிறது? எப்படிச் சொல்லப் போகிறது?

வார்த்தைகள் கோர்வையாகச் சொல்லப்படும்போது அவற்றின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுவதே மொழியாகும். தொலைக்காட்சிக்கும் ஒரு ‘மொழி’ உண்டு. காட்சிகள் சொல்லப்பட சொல்லப்பட அந்த ‘மொழி’ புரிந்து கொள்ளப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை துரதிஷ்டவசமாக ஒரே ஒரு ‘தொலைக்காட்சி மொழி’தான் SunTV, VijaiTV, கலைஞர் TV, ஜெயா TV என பற்பபல ஒளிவழி வழியாகப் பேசப்படுகின்றது. இதை நாம் புரிந்துதான் இருக்கிறோம். ஆனால், அதே மொழியைத்தான் ‘IBC-தமிழ்’ தொலைக்காட்சியும் பேசும் என்றால் நமக்கென்று ஓர் உலகளாவிய பெரும் தொலைக்காட்சி அவசியமில்லை. ‘தமிழகத் தொலைக்காட்சி மொழி’யைத் திருப்பியும் பேசாது, நமக்கென்றதொரு தொலைக்காட்சி மொழியை ‘IBC-தமிழ்’ பேசுமா? உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் ஒளிபரப்பாகும் PBS ‘தொலைக்காட்சி மொழி’யும், அதே ஆங்கில மொழியில் வரும் CNN தொலைக்காட்சி மொழியும் வேறு வேறு. அப்படியாக, ‘தமிழ்மொழி’ பேசினாலும், ‘தமிழக தொலைக்காட்சி மொழி’யைப் பேசாத தொலைக்காட்சியாக ‘IBC-தமிழ்’ இருக்குமா??

தொலைக்காட்சிகள் ‘ஊது குழல்கள்’ அல்ல. தொலைக்காட்சிகள் ஒருபோதும் பிரச்சாரப் பீரங்கிகளாகவோ அல்லது கொள்கைப்பரப்புச் செயலாளர்களாகவோ மாறவும் கூடாது. அதேசமயம் அவை பொழுதுபோக்கு கொட்டகைகளும் அல்ல. ஒரு சமூகம் எத்தகைய குழப்பங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும், அலைபாயல்களுக்கும் உட்படுகின்றதுவோ அவற்றை அவற்றை அப்படியே பிரதிபலிக்க வேண்டிய வாகனமாக தொலைக்காட்சி அமையவேண்டும். ஆனால் இங்குள்ள நம் தமிழ்த் தொலைக்காட்சிகளான TVi, TET, தமிழ்வண் ஆகியன தமிழக சினிமாவை தனது ஆத்ம பலமாக வைத்திருக்கின்றன. மேலும், ‘தமிழக தொலைக்காட்சி மொழி’யை தமது தொலைக்காட்சி மொழியாக வைத்து பேசிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தவறுகள் தெரிந்தே செய்யப்படும் தவறுகள் அல்ல. ‘தெரியாமல்” செய்யப்படுபவை! இந்த தொலைக்காட்சிகள் ‘தொலைக்காட்சி மொழி குறித்த புலமை கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை’ என்பதே அதற்குக் காரணமாகும். இது அவற்றைப் பார்க்கும்போதே தென்படுகிறது. “ஒரு வானொலி நிகழ்ச்சியைப் படம் பிடித்து ஒளிபரப்பும் முறைமையே இங்குள்ள தொலைக்காட்சிகளின் மொழி”யாக மாறிவிட்டதோ என்ற திகில் இந்த மூன்று தொலைக்காட்சிகளினதும் பல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது தோன்றுகிறது. ‘IBC-தமிழ்’ இவற்றிற்கு மாற்றாக இருப்பதைவிட, எப்படி வேறுபட்டுத் தோன்றப் போகிறது என்பதே ‘IBC-தமிழ்’ குறித்து நமக்கிருக்கும் எதிர்பார்ப்புக்களில் முதன்மையானதாகும்.

இன்றைய காலகட்டத்தில் தமிழரிடையே தொலைக்காட்சி நூற்றுக்கு நூறு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதைப் புரிந்த நிலையில், ஒருவகையான ஊடக தர்மத்துள் நின்று கொண்டு அதைவிட மேலான இன்னொரு ஊடக தர்மத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் இருக்கும் காலகட்டமும் இதுவாகும். இந்த உருவாக்கத்தை, “ஊடக தர்மத்தை வளர்ப்பது” என்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. மாற்றாக ஒரு புது ஊடக தர்மத்தையே உருவாக்கித் தரவேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்களான நாம் இருக்கிறோம். அதனை ‘IBC-தமிழ்’ நிறைவேற்றித் தருமா?

அதைச் நிறைவேற்ற ‘IBC-தமிழ்’ முனையவில்லை என்றால் அறிவுச் செயல்பாடு மீது  ‘IBC-தமிழ்’  கொண்டிருக்கும் அச்சம்தான் அதற்கு நூற்றுக்கு நூறு காரணமாகும்.