த்ரிஷாவின் கோபம்!

158

தனது சக திரையுலகத்தினர் பற்றி த்ரிஷா வெளிப்படையான பேசியுள்ளார். தனுஷ் தலைக்கனமில்லாத நல்ல நடிகர் என்றும் சிம்பு ஜாலியான பேர்வழி என்றும் கூறியுள்ளார். “சிம்பு என் நெருங்கிய நண்பர். கிரேஸி என்றுதான் அவரை அழைப்பேன். அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாத போதும் அவர் என் நெருங்கிய நண்பர்தான். என்றைக்கும் எனக்கும் துணை நிற்பார். நயன்தாராவும் நானும் 10 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களிற்குள் ஒரு பிரச்சனைதான் இருந்தது. அது பணி சம்பந்தப்பட்டதாக இருந்ததில்லை. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எங்கள் இருவரையும் தெரிந்து கொண்ட நண்பர்கள் மூலமாக எங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். சிலகாலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன். பிறகு இருவரும் பேசிக்கொண்டோம்“ என்றுள்ளார்.

மடோனாவிற்கு வந்த வாய்ப்பு!
தனுஷ் தயாரித்து இயக்கிவரும் படம் பவர் பாண்டி. ராஜ்கிரண் நடிக்கிறார். இதில் தனுசும் நடிக்கிறார். தனுசின் நாயகியாக மடோனா செபஸ்ரியன் ஒப்பந்தமாகியுள்ளார். மடோனா ஏற்கனவே விஜய் சேதுபதி படங்களில் நடித்தவர். அவரை ஒப்பந்தம் செய்ய முன்னர், விஜய் சேதுபதியுடன் தனுஷ் பேசி, மடோனா பற்றிய கருத்தை கேட்டுத்தான் ஒப்பந்தம் செய்துள்ளார். பிரசன்ன, சாயாசிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத்தை கழற்றிவிட்ட பின்னர் ஷான் ரோல்டனை தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளராக வைத்துள்ள தனுஷ், இந்தப்படத்திலும் அவருக்கே வாய்ப்பளித்துள்ளார்.

கவர்ச்சி சிங்கம்!
நீது சந்ராவிற்கு இந்திப்பக்கம் நல்ல மார்க்கெட் உள்ளது. கவர்ச்சி மார்க்கெட். ஆனால் தமிழில் வாய்ப்புக்கள் இல்லை. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்தவர். அண்மைக்காலமாக ஒரு பாட்டிற்கு ஆடும் குத்தாட்ட வாய்ப்புக்கள்தான் வருகின்றன. அவற்றையும் விடாமல் நீது பிடித்துவைத்திருக்கிறார். இறுதியாக சூர்யாவின் சி3 எனப்படும் சிங்கம் 3 படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமிடுகிறாராம். இந்தப்பாடல் காட்சி முடிந்தால் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிகிறதாம். முதல் இரு பாகங்களையும் விட 3ம் பாகத்தில் பட்ஜெட் பெரியது. அதனால் வியாபாரமும் பெரிதாக இருக்குமென எதிர்பார்க்கிறார்கள்.

சேதுபதி காட்டில் செமமழை!
2016 இல் விஜய் சேதுபதிதான் நம்பர்1 நடிகர். எப்படியென்றால், அதிக படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார். 2015 இல் 3 படங்களில்தான் நடித்தார். இந்த வருடத்தில் சேதுபதி, காதலும் கடந்துபோகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்கை என ஆறு படங்களில் நடித்துவிட்டார். விரைவில் வெளியாகும் புரியாதபுதிர் (மெல்லிசை) படத்தையும் சேர்த்தால் ஏழு படங்கள். மற்ற நாயகர்கள் அதிக பட்சம் 3 படங்களில் நடித்திருக்க விஜய் சேதுபதி காட்டில்தான் கனமழை. அடுத்த வருடமும் இதே மழை நீடிக்கும். இறுவரை ஆறுபடங்கள் கைவசம் வைத்துள்ளார்.