மது பாவனையில், ஆண்களுக்கு இணையாகப் பெண்கள்!

து அருந்தும் விடயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாகப் பெண்களும் விளங்குவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது.

1991ஆம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் மக்களை ஆராய்ந்த இந்த ஆய்வு, ஆண்கள்தான் அதிகம் மது அருந்தி, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் இல்லாமற் செய்து விட்டதாகப் பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றிவரும் பங்கும் மாறிவருவது, மது அருந்துவதில் உருவாகும் ஆண் பெண் சமத்துவத்தை ஓரளவு காட்டுகிறது. 1900களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள், பெண்களைவிட இரண்டு மடங்குக்கும் மேல் (2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது. ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம். ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்து கொண்டு வந்தது.

எனவே 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள், பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம். பிரச்சனைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம் ஆகும். குடிப் பழக்கத்தால் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுவது என்பது 1.3 மடங்கு மட்டுமே அதிகம். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகக் குழு உலகெங்கிலிருந்து வந்த இந்தத் தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்த தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கிடைத்த தகவல்களையே சார்ந்திருந்தன.

மது அருந்துவது மற்றும் மதுவருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் ஆண்கள் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டன, என்று இந்த குழு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய ஆய்வு அந்தக் கணிப்பைக் கேள்விக்குள்ளாக்கி, இளம் பெண்கள் குறிப்பாகப்போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் மது
அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று அது கூறுகிறது. ‘சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றிவரும் பங்கு கடந்த பல தசாப்தங்களாகவே மாறி வருகிறது. இது இந்தப்போக்குகள் அனைத்துக்கும் இல்லாவிட்டாலும், சிலவற்றுக்காவது காரணம் எனலாம்’ என்கிறார் லண்டன் பொதுச் சுகாதாரம் மற்றும் வெப்பப் பிரதேசமருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மார்க் பெட்டிக்ரூ. மது அதிக அளவில் தாராளமாக கிடைப்பதும், மது விற்பனை விளம்பரங்கள் பெண்களை, அதிலும் குறிப்பாக இளம் பெண்களை இலக்கு வைப்பது போன்றவையும் இதில் ஒரு பங்காற்றுகின்றன என்கிறார் அவர். சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளைப் பற்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புரிய வைக்கவும், அந்த ஆபத்துகளை குறைப்பது எப்படி என்பதை விளங்கவைக்கவும் உதவ வேண்டும் என்கிறார் அவர்.

அதிக அளவில் மது அருந்துவது இருபாலாருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இதன் தாக்கம் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், மற்றும் கழுத்து, தலை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. கிழமைதோறும் 3 அல்லது 6 தடவை மது அருந்தும் பெண்களுக்கு 15வீதம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதுதென American Medical Association கூறுகிறது. மது மூளைக் கலங்களை (cells) கொல்லும், இதுவும் ஆண்களை விட பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகும். தொடர்ந்து மது அருந்தும் இளம் பெண்களுக்கு கர்ப்பந்தரிக்கும் திறன் பாதிக்கப்படும். சிலவேளைகளில் கர்பந்தரிக்க முடியாத நிலையும் ஏற்படாலாம். கர்பந்தரித்த பெண்கள் மது அருந்துவது வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தீங்கை ஏற்படுத்தும். ஆகவே கர்ப்பகாலத்தில் சிறிய அளவோ பெரிய அளவோ, எந்த அளவேனும் மது அருந்துவது தகாததாகும். மது அருந்துவதை முழுவதும் தவிர்ப்பது பிறக்கப் போகும் குழந்தைக்கு அதிக நன்மை பயக்கும்.

முக்கியமாக அதிகமாக மது அருந்தும் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கோ அல்லது வன்முறைச் செயல்களுக்கோ ஆளாக்கப்படுகிறார்கள். அது மாத்திரமல்லாது மனஅழுத்தம், நித்திரையின்மை, இதயக் கோளாறுகள், முன்முதிர்வு, மாதவிடாய் வற்றுதல் (Premature menopause), உயர் இரத்த அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சனைகளும் தொற்றிக் கொள்கிறது.

ஆரம்ப காலங்களில் பெண்கள் மது அருந்தவது என்பதே பெரும் அவமானத்திற்குரியதாக இருந்தது. ஆனால் அது இன்றைய இளம் பெண்களிடம் குறைந்து கொண்டே போகிறது. அன்று போல் அல்லாமல் இன்று அதிகப்படியான பெண்கள் நாளுக்கு நாள் ஆண்களோடு சரிசமமாக மது அருந்துவது சாதாரணமாகி விட்டது.  இன்று இந்தப் மது பழக்கம் கல்லூரி மாணவிகளிடமும் அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 18000 கல்லூரி மாணவிகளிடம்நடத்திய கணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பெண் அதிகப்படியான மது அருந்தும் பழக்கத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இது 1993இல் இருந்து 2001ஐ விட இருமடங்காகக் காணப்படுகிறது. அதனால் இந்த மாணவிகள் தங்களோடு படிக்கும் மது அருந்தும் சகமாணவர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இதனால் தேவையில்லாத சுகாதார அபாயங்கள் (Health Risks) பால்வினை நோய்கள் (Sexually transmitted decease ), இரு பாலாருக்கும் ஏற்படும். முக்கியமாகப் பெண்களுக்குத் திட்டமிடப்படாத தாய்மை
டைதல் ஏற்படுவதால், இளம் வயதிலேயே குழந்தையோடு எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

‘நாங்கள் அளவாக மட்டுமே அது அருந்துவோம், அளவுக்கதிமாக போக விடமாட்டோம்’ என்று சொன்னாலும் கூட, இந்த ஆபத்தான நிலையை தாண்டுவது மிக எளிது. ஆகவே இந்தப் பழக்கத்தை ஆரம்பத்தில் நிறுத்திக் கொள்வது அல்லது அதை ருசிபார்க்காமல் இருப்பதே நல்லது.