உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ‘மாய நிலவரை’ ஓவியக் கண்காட்சி!

209

ரொறன்ரோ கலைக்கூடத்தில் (Toronto Art Gallery) கடந்த ஒக்ரோபர் 22 ம்  திகதிமுதல் எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி வரைக்குமான காலப்பகுதி ரொறொன்ரோவின் கலை ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு இநிமையா காலம். இன்னொரு வகையில் அதை ஒரு அதிர்ஷ்ட காலம் என்று கூடசொல்லலாம். உலகப்புகழ்பெற்ற இந்த அரிய ஓவியங்களின் மூலப்பிரதிகள், கிட்டத்தட்ட பதினந்து நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ளன. ஒரே நேரத்தில் முப்பதுக்கு மேற்பட்ட ஓவியர்களின் 90 ஓவியங்களை ஒரே கண்காட்சியில் பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதென்பது நிச்சியமாக ஒரு அதிர்ஷ்டம் தான் என்பதில் சந்தேகமில்லை.

‘மாய நிலவரை’ (Mystical Landscape)  என்ற மகுடத்தின்கீழ் இந்த ஓவியங்கள் தொகுக்கப்படிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற உன்னத ஓவியர்களின் தலைசிறந்த ஓவியங்கள் எனக் கருதப்படும் ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வான் கோவின் Starry Night over the Rhon, க்ளோட் மொனேயின்  water lillies, போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிக்கின்றன.

நிலவரை ஓவியங்கள், நவீன ஓவியம் தொடர்பான சிந்தனைகளில் பாரிய பரட்சிகர மாற்றங்களைக் கண்ட 1800களின் ஆரம்பகாலப் பகுதியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஓவியம் என்பது இருப்பதை அப்படியே தருவதல்ல அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற சிந்தனை தான் நவீன ஓவியத்திற்கான அடிப்படை. புகைப்படத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட்து, இந்தச் சிந்தனையின் வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது எனலாம். காணும் காட்சிகளை, ஓவியரின் பார்வையில், அவர் எப்படி அதை உணர்கிறார் என்பதைக் காட்டுவதாக அமைந்த ஓவியங்கள் அக்காலத்தின் போக்காக இருந்தன. அன்றைய ஓவியம் பற்றிய மரபார்ந்த கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியது இந்தச் சிந்தனை.  மனப்பதிவை வரைதல், மனப்பதிவை வெளிப்படுதும் விதத்தில் வரைதல், இந்த வெளிப்படுத்தலை குறியீட்டு உத்தியுடன் வெளிப்படுத்தல் என்று ஓவியத்தின் தன்மைகள் மேலும் மேலும் விரிவு பெற்று வளரத்தொடங்கின.

இந்த அடிப்படையில், ஓவியம் தொடர்பாக இவ்வாறு மாறுபட்ட சிந்தனைகளக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர்களின் நிலவரை ஓவியங்களை தனியாக தொகுத்துத் தருவதையே இந்த கண்காட்சி செய்கிறது. இதன் மூலம் ஓவியக்கலையின் வியத்தகு ஆற்றல்களையும், அது வெளிப்படுத்தும் பல்வேறு பரிமாணங்களையும் ஒருவர் அறிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும், நவீன ஓவியத்தின் பல்வேறு போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியங்களை ஒன்றாக காணக்கிடைப்பதை விட அதிர்ஸ்ட வசமான ஒரு சந்தர்ப்பம் இது. தவறவிடக்கூடாத ஒரு நிகழ்வு இது. அனுமதிச் சீட்டு பெறுதல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் http://www.ago.net/mystical-landscapes என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.