உத்தரவாதமற்ற வேலைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் கனடாவின் புதிய கொள்கை!!

103
Finance Minister Billl Morneau outlines the Liberal's new tax strategy during a briefing in Ottawa on Monday, Dec. 7, 2015. THE CANADIAN PRESS/Adrian Wyld

னடாவில் தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் எதிர்காலம் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்
குமா என்ற கேள்விகளுக்கு மிகவும் அச்சம் தரக்கூடிய ஒரு பதிலையே நிதி அமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) வழங்கியுள்ளார். சென்ற வாரம் ஒன்ராறியோ லிபரல் கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் தெரிவித்த இரண்டு முக்கியமான ஆனால் ஆபத்தான கருத்துக்கள் இதனை உறுதி செய்கின்றன.  முதலாவது கருத்து தற்காலிகமான, தொழில் பாதுகாப்பற்ற, வேலை வாய்ப்புகளே (Precarious jobs) இனிக் கனடாவின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. அதற்கேற்ற வகையில் நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது கருத்து: ஒரே வேலையிலேயே ஒருவர் தொடர்ந்தும் இருப்பது சாத்தியமில்லை. எனவே மாற்று வேலைகளுக்கான மீள் பயிற்சி வழங்கும் திட்டங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். முதலாவது கருத்தைப் பார்ப்போம். இது புதியதல்ல. கடந்த பத்து ஆண்டுகளாக ஹார்ப்பர் அரசு செய்ததும் இதுதான். முழுமையான, சமூகப் பாதுகாப்பை வழங்கக் கூடிய நிரந்தரமான நல்ல தொழில் வாய்ப்பு (Full employment) என்பது மக்கள் நல அரசுகளின் அடிப்படைக் கோட்பாடாகும். ஸ்கண்டினேவிய நாடுகளிலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் அரசாங்கங்கள் இதனை நடைமுறைப்படுத்துகின்றன.  இத்தகைய முழு வேலைவாய்ப்பின் போதுதான் உரிய முறையில் விடுமுறைகள், பேறுகால விடுமுறை, மருத்துவச் செலவுகள் என்பவற்றை அரசும் வேலை வழங்குனர்களும் உத்தரவாதம் செய்வதும், ஒய்வூதியம் வழங்குவதும் நடைமுறையில் இருக்கும். இத்தகைய தொழில்களை உருவாக்கத் தனியார் துறையும் பெரும் வணிக நிறுவனங்களும் விரும்புவதில்லை. ஏனெனில் இது அவர்களில் லாப விகிதத்தைக் குறைக்கும் என்பதால். தடையற்ற வணிகத்தினது முதலாவது விளைவு இத்தகைய முழுமையான வேலை வாய்ப்புக்களை அழித்தொழிப்பதே.

பில் மோர்னோவும் சரி ஹார்ப்பரும் சரி இந்தக் கொள்கையில் வேறுபட்டவர்கள் அல்லர். இந்தக் கொள்கைகளால் பாதிக்கப்படப் போவது நமது இளந்தலைமுறைதான். இப்பாதிப்பும் மிகவும் பாரதூரமாக இருக்கும். இத்தகைய உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களை நாம் ஏற்க மறுத்தால் வெளிநாட்டில் இருந்து இன்னும் மலிவுக் கூலிக்கு ஆட்களைத் தற்காலிகமாக “இறக்குமதி” செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டி வரும் அதனைத்தான் ஹார்ப்பர் அரசு செய்தது.

பில் மோர்னோவின் இரண்டாவது கருத்து நல்லது போலத் தோன்றலாம். ஆனால் அதுவும் மிகச் சிக்கலானதே. மருந்துக்குப்  செல்வழிப்பதற்குப் பணம் தேடும் முயற்சியை விடுத்துக் காயங்களை வேண்டுமென்றே உருவாக்குவதைத்தான் நாம் தடுக்க வேண்டும்.அரசின் பங்கும் பணியும் முழுமையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் அரசினதும் கடப்பாடும் ஆகும். தடையற்ற வணிகம் மூலமும் ஒப்பந்தங்கள் மூலமும் பெரும் வணிக நிறுவனங்களதும் வங்கிகளதும்  லாபத்தை மிக அதிக அளவில் கூட்டுவது அரசின் பணி அல்ல.

இரு வாரங்களுக்கு முன்பாக பில் மோர்னோவைச் சந்திக்கத் தலைக்கு 1500 டொலர்கள் கொடுத்துக் கனடாவின் பெரும் வணிகப் புள்ளிகளும் வங்கித் துறை மேதாவிகளும் இன்ன பலரும் சென்றிருந்தார்கள். அது ஏன் நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன??