கட்டற்ற வணிகச் சந்தையில் கனடாவும்!

102

சென்ற கிழமை கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தம் (Comprehensive Economic Trade Agreement – CETA) கையெழுத்திடப்படுவதை எவ்வாறு பெல்ஜியம் நாட்டின் பிரென்ச் மொழி பேசும் வலூன் மக்களைக் கொண்ட வலூனியா மாநிலம் தடுத்து நிறுத்தி விட்டது என எழுதியிருந்தோம். ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்யக் கனடிய அரசு  ஒப்புக் கொண்டதால் இப்போது வலூனியா மாநில அரசு CETA வை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒப்பந்தத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.

பொதுவாகவே கட்டற்ற வணிக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements) பெரும் வணிக நிறுவனங்கள் வரி விலக்குப் பெற்றுத் தங்குதடையின்றி எல்லா நாடுகளிலும் தமது பண்டங்களைச் சந்தைப் படுத்த வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. போட்டி அதிகரிப்பதால் பொருட்களில் விலை குறையும். எனவே நுகர்வோர் பயனடைவர் என்பதே இதன் தர்க்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளும் கனடாவும் சேருகிறபோது 500 மில்லியன் மக்களைக் கொண்ட பெரும் சந்தைக்கு ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் பெரு வணிக நிறுவனங்களின் செயற்பாடுகளில் அரசுகள் தலையிட முடியாது. இந்த நிறுவனங்கள் உள்ளூர்ச் சட்டங்களுக்கு அப்பால் தமது நடவடிக்கைகளைச் செய்வதற்கும் ஒப்பந்தம் உரிமை வழங்குகிறது. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றின்  சட்டங்கள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை ஓமோன்கள், இரசாயன வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளப்படும் பன்றி, மாட்டு இறைச்சிகளை அனுமதிப்பதில்லை. கனடாவின் மட்டு, பன்றி இறைச்சிகள் இத்தகைய ஆரோக்கியமற்ற முறையிலேயே உருவாக்கப்படுபவை. எனினும் ஒப்பந்தத்தின்படி ஐரொப்பிய ஒன்றிய நாடுகள் இந்த இறைச்சி வகைகளை அனுமதிக்க வேண்டும்.

இது கனடிய இறைச்சி வணிகர்களுக்குப் பெரும் லாபம் தரக்கூடும். இதே போல ஐரோபிய நாடுகளில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்கள் வரி இல்லாமல் மலிவு விலையில் கனடா வர முடியும். இதனால் கனடாவின் மோட்டார் வாக உற்பத்தித் துறை பெரும் பாதிப்படையும். 150,000 பேர் இந்த ஒப்பந்தத்தின் பின் வேலை இழக்க நேரிடும் எனக் கனடாவின் மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம் தெரிவிக்கிறது. இது போலவே கனடாவின் மீன்பிடித் துறையும், பால், பாலாடைக் கட்டி (Cheese) உற்பத்தித் துறையும் மோசமான பாதிப்பை அடையும். இந்த ஒப்பந்தம் ஹார்ப்பர் அரசால் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பேணுவதில் இப்போதைய லிபரல் அரசும் சளைத்தது அல்ல என்பதையே CETA ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டற்ற வணிகத்தை-NAFTA என்றும் வேறு பல வழிகளிலும் உலகம் எங்கும் திணித்த அமெரிக்காவும் பெரு நிதி நிறுவனங்களும் இப்போது அவை பொருத்தமானவை அல்ல என்றும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கிறார்கள்.

“NAFTA கட்டற்ற வணிகத்தால் பெருமளவு நன்மை கிடைக்கவில்லை” என அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் நிதித்துறை சொல்கிறது. கட்டற்ற வணிகத்தின் தீவிர விசுவாசியான சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF),கட்டற்ற வணிகம் பல நாடுகளில் மக்களிடையே அசமத்துவத்தை அதிகரித்திருக்கிறது. வறுமையைக் கூட்டியிருக்கிறது. எனத் தெரிவிக்கிறது. ஆனால் இந்த நிலை ஏற்படுவதற்குத் தாம் வகித்த பங்கு பற்றிப் பேசுவதில்லை.

இந்தச் சூழலில் இன்னுமொரு கட்டற்ற வணிகத்துக்கு ஏன் கனடா போக வேண்டும்?