கூட்டமைப்பின் பிடி நழுவுகிறதா?

98

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் பரவிய கொந்தளிப்பு வடக்கில் பேரலையை தோற்று வித்துள்ளது. கொந்தளிப்பு எதிர்ப்பு நடவடிக்கையாக ஓரளவு எழுச்சியடைந்த போதும், அது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை. வித்தியா கொலையை தொடர்ந்த வன்முறையை போல செயல்பூர்வமாக அல்லா விட்டாலும் உணர்வுபூர்வமாக மக்கள் எதிர்ப்புணர்வை கணிசமாக தேக்கிவைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் மக்கள் தேக்கிவைக்கும் எதிர்ப்புணர்வின் கொள்ளவு அதிகரித்து சென்றுகொண்டிருக்கிறது. இது நல்லிணக்க செயற்பாடுகளிற்கு உவப்பானதல்ல.

வித்தியா கொலையில் தொடங்கி இப்போது மாணவர் படுகொலை வரையான சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்துவிட்டன. இவற்றில் அரசியல் செல்வாக்கிருக்கவில்லை. அண்மைக்கால தமிழர் வரலாற்றில் இது புதிய அனுபவம். வித்தியா கொலையில் வடக்கே பற்றியெரிந்தது. அந்த தீயை மூட்டவோ, அணைக்கவோ எந்த தமிழ்கட்சியாலும் முடியவில்லை.அதன்பின்னர் எழுக தமிழ் நடந்தது. அதிலும் கணிசமான மக்கள் திரண்டனர். வடக்கில் அண்மைக்காலத்தில் நடந்த பிரமாண்டமான எழுச்சிபேரணி. பத்தாயிரம் வரையானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதுவும் முற்றிலும் சிவில் சமூக ஒழுங்கமைப்பு. அதில் அரசியல்கட்சிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த எழுச்சியில் தமிழ்தேசியகூட்டமைப்பு என்ற அடையாளம் இருக்கவில்லை. கூட்டமைப்பின் பங்காளியான இரண்டு கட்சியும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி போன்றவை இணைந்திருந்தன.

இப்பொழுது மாணவர் கொலையை கண்டித்து நடந்த போராட்டங்களிலும் அரசியல்கட்சிகளின் சொல்வாக்கில்லை. இதன்படி பார்த்தால் வடக்கில் இறுதியாக நடந்த மூன்று பெரும் எழுச்சிகளிலும் அரசியல்கட்சிகளில் செல்வாக்கில்லை.அவர்கள் அந்த எழுச்சியை ஏற்படுத்தவில்லை. எழுச்சியுடன் சேர்ந்து பயணித்த சில அரசியல்தரப்புக்கள் உள்ளனதான். ஆனால், அவர்களால் இந்த எழுச்சி ஏற்படுத்தப்பட்டதல்ல.

கொல்லப்பட்ட மாணவர்களின் மரணச்சடங்குகளில் உரையாற்ற முனைந்த அரசியல் தலைவர்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை. கல்யாண வீடானால் மணமகனாகவும், மரணவீடெனில் பிணமாகவும் இருந்து பழக்கப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகளிற்கு இது அங்கு பெரும் அளெகரியத்தை ஏற்படுத்தியிருந்தன.மாணவர் கொலையை கண்டித்து நடந்த ஹர்த்தாலிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள், சமூகநீதிக்கான ஜனநாயக கட்சி (முன்னைய ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா அணி) என்பன இணைந்திருந்தன. இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்க ஒரு விடயம் இது. இந்த ஹர்த்தாலிற்கான அழைப்பிற்கு முன்னர் ரெலோ எல்லா கட்சிகளையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்திருந்தது. தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழ்தேசிய மக்கள் முன்னணி, சமூக நீதிக்கான ஜனநாயக கட்சி என்பவற்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சமூகநீதிக்கான ஜனநாயக கட்சி முன்னைய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் ஒரு அங்கம். தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்ற கட்சிகளையும் இணைத்து செல்லும் ஒரு அரசியல் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கவில்லை. சுதந்திரத்தின் பின் தமிழ்தேசிய அரசியல் கட்டமைத்த தியாகி, துரோகி அரசியலைத்தான் முன்னெடுத்தது. எனினும், ரெலோ என்ற தனிக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியதால் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள கட்சிகளையும் அழைத்தார்கள். ஆனால் இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. அந்த கட்சியின் முதிர்ச்சியின்மையை இப்படியான புறக்கணிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆலோசனை கூட்டத்தின் பின்னர் அவர்கள் ஹர்த்தாலை அறிவித்தார்கள். உண்மையை சொன்னால், இந்த சமயத்தில் கட்சிகள் செயற்பட்டது கொந்தளிப்பின் அலையில் நீந்திச்சென்றதே. இந்த கட்சிகள் அறிவிக்காமல் இருந்திருந்தால் மாணவர்களோ, சிவில் அமைப்புக்களோ ஹர்த்தாலிற்கு அழைப்பு விட்டிருப்பார்கள். இந்த நிகழ்வுகளின் மூலம் தெளிவாவது, வடக்கின் இறுதியான மூன்று பேரெழுச்சியும் பெரிதும் மக்கள் மயப்பட்டது. அரசியல்கட்சிகள் அதில் பார்வையாளர்கள். 1980களின் பின்னரான தமிழர் அரசியலில் நடந்த எல்லா பெரிய எழுச்சிகளும், ஹர்த்தாலும் அந்த சமயத்தில் கோலோச்சிய அரசியல் சக்திகள் அல்லது தலைமைகளின் பின்னணியில்தான் நடந்தன. ஆயுத இயக்கங்கள் கூட்டாகவும், பின்னர் புலிகள் தனியாகவும் இவற்றை தலைமை தாங்கினார்கள். பின்னாளில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஓரிரண்டு எழுச்சிகளை தலைமை தாங்கியது.

புலிகளின் காலத்தில் பொங்குதமிழ் நிகழ்வொன்றுதான் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட பேரெழுச்சி. புலிகளின் அரசியல் அதில் செல்வாக்கு செலுத்தினாலும், உருவாக்கத்தில் புலிகள் தலையிடவில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறியுள்ளது. தொடராக மூன்று நிகழ்வுகள் சமகால தமிழ்தேசிய அரசியல் தலைமைக்கு அப்பால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வித்தியா விவகாரத்தை விட்டு விடலாம். மற்றைய இரண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் தொடர்புடையவை. விடுதலைப்புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் தலைமைப்பாத்திரம் ஏற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு எல்லா தரப்பையும் வென்றெடுக்கும் பேராளுமை மிக்க சக்தியாக தன்னை வெளிப்படுத்தியிருக்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களையும் தலைமைதாங்குவதே பேராளுமை என்று பேசிக்கொண்டிருக்க, கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகளே இப்போது திசைக்கொன்றாக இருக்கிறார்கள் என்பதே நிலவரம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமில்லாமலே பேரெழுச்சிகள் நடக்கின்றன, கூட்டமைப்பின் பங்காளிகள் சிதறிச்செல்கிறார்கள் என்பவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று நெருக்கமானவை. அரசுடன் விட்டுக்கொடுப்புடன் நடந்து நல்லிணக்க செயற்பாட்டை முன்னகர்த்தும் போது இப்படியான எதிர்ப்பும், அதிருப்தியும் எழும்தான். அதற்கு காரணமும் உள்ளது. யுத்தம் முடிந்ததன் பின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் ஆறு வருடங்கள் கழித்துதான் ஆரம்பிக்கப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் யுத்தம் இருக்கவில்லையே தவிர, இனங்களிற்கிடையிலான கசப்புணர்வு அதிகரிக்கப்பட்டுக் கொண்டே சென்றது. மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கொப்பான ஆட்சி இராணுவபலத்தின் மூலம் இலங்கையை ஒன்றுபடுத்தலாமென நினைத்தது. ஆனால், மகிந்தவின் ஆட்சி நீடித்த ஒவ்வொரு நாளும் இலங்கை அதிகமதிகம் பிளவுபட்டுக்கொண்டே சென்றது. “தமிழ் அடையாளம்” என்ற கருத்துருவாக்கம் யுத்தத்தின் முன்னர் இருந்ததை விட, யுத்தத்தின் பின்னரே அதிகம் உணர்வு
பூர்வமாகியது. காரணம், தோற்றுப்போன இனத்திற்கு அடையாளம் அழிக்கப்படுகிறதென்ற பதற்றம் அதிகரிப்பது இயல்பு.

அடையாளம் அழிக்கப்படுவதாக உணரும் சிறுபான்மையின இனத்தின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினத்துடன் நல்லிணக்கம், அரசியல்தீர்வு முயற்சிகளை மேற்கொள்ளும்போது அதீத உணர்ச்சி பெருக்குடன் நடந்து கொள்ள முடியாது. ஆனால் சனத்திரள் என்பது உணர்ச்சிகளின் குவியல். இதில் பயணிப்பது கயிற்றில் நடக்கும் வித்தை.

அரசுடன் நெருங்கிச் செல்வதை போல மக்கள் உணர்ந்தாலும் சரி, விட்டுக்கொடாமல் நடக்கிறார்கள் என அரசு உணர்ந்தாலும் சரி நல்லிணக்க செயற்பாடு வெற்றியடையாது. அண்மைய நிலவரங்களை நோக்கும்போது முதலாவது நிகழ்வு நடப்பதை போல தெரிகிறது. அண்மைய வடக்கு சம்பவங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி. மேலெழுந்துவரும் எதிர்ப்புணர்வு தொடர்பாக ஆராய்ந்து, எல்லா தரப்பையும் வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அவசியமாக தனது பாதை தொடர்பான சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், மக்கள் கூட்டத்திடம் அதிருப்தி எழுந்தால் தெற்குடன் ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் வெற்றியடையாது.