திரும்பிச் செல்லும் நிதியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கிழக்கு முதலமைச்சர்!

96

த்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக் கட்டத் தொகுதி அமைக்கவென ஒதுக்கப்பட்ட 850 மில்லியன் நிதி திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை பிற்பகல் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான முதலமைச்சர் நசீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முக்கியமான ஒன்றாகும். அதற்கான நிதி கிடைத்துள்ள போதிலும் அதனை அமைப்பதற்கான இடப்பிரச்சினை காரணமாக அந்த நிதி திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனா தெரிவித்தார். சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் தற்போது மருந்தகத் தொகுதியுள்ள இடத்திலேயே அமைக்கப்பட வேண்டும். மருந்தகத் தொகுதிக்கான புதிய கட்டத்தினை அமைப்பதற்கான காணி திராய்மடுவில் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உடனடியாக மருந்தகத் தொகுதிக்குரிய கட்டடத்தினை அங்கு அமைக்க முடியாது. அதுவரையில் வேறு ஒரு இடத்தினைப் பயன்படுத்த வேண்டும்.

முதலமைச்சர் மனது வைத்தால் முன்னாள் முதலமைச்சரால் பயன்படுத்தப்பட்டு தற்போதைய முதலமைச்சரின் வசம் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் விடுதிக் கட்டத்தினை மருந்தகத் தொகுதிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலழித்த முதலமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான நசீர் அகமட் இவ்விடயம் தொடர்பாக தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால் அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும். இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை திருமலையில் நடத்தப்படும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவுக் கட்டட வேலைகள்  விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.