தொடரும் வதை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிப்பு!

99
ab70338.jpg

லங்கையில் இன்னும் வதை முகாம்கள் இரகசியமாக இயங்குகின்றன என்பதை இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐ.நாடுகள் அவையின் வதைகளுக்கு எதிராகச் செயல்படும் அலுவலகத்துக்கு (UN Committee Against Torture) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (Terrorist Investigation Department – TID ) இவர்றை நடத்துவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உத்தியோகபூர்வமாக காலி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களில்தான் TID  “விசாரணை” நிலயங்கள் உள்ளன. எனினும் இவற்றைவிட மேலதிகமாக, இரகசிய முகாம்களை TID  நடத்துவதாகவும் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளார்கள் அமைப்பும் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஸ காலத்தில் இத்தகைய வதை முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களே இன்றைய அரசின் கீழும் அதே வேலைகளைச் செய்வதாக JDSL தனது அறிக்கையில் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறது.

இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும் காவல் முகாம்களிலும் வதை என்பது வழமையான ஒன்று என்று ஐ.நா. அவைக்கு அறிவித்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உரிய ஆதாரங்களுடன் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. 2015 இலிருந்து இன்றுவரை 600 பேர் பொலிசாராலும் படையினராலும் வதை செய்யப்பட்டுள்ளனர் என இந்த அறிக்கை சொல்கிறது. 2016 இல் மட்டுமே 208 பேர் வதை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மனித உரிமைகள் ஆணையத்துக்கு முறைப்பாடு வழங்கியவர்கள் எண்ணிக்கை மட்டும்தான். வெளியே தெரிய வராமல்  பல நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கக் கூடும் என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் 111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் 15 ஆண்டுகளாக எந்த விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரது வழக்குகள் 14 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன” என்று இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஐ.நா.வின் வதைகளுக்கு எதிரான அலுவலகத்துக்கு மேலும் பல மனித உரிமைகள் நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர் தமிழர் அமைப்புகள் சிலவும் பெறுமதியான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka/ JDSL ), பிரித்தானியத் தமிழர் பேரவை, இலங்கையில் வதைகளுக்கு எதிரான அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் ( Sri Lanka NGO Collective Against Torture),  அமெரிக்கத் தமிழர் அரசியல் செயல்பாட்டு அவை (US Tamil Political Action Council), போன்றவை இவற்றுள் சிலவாகும்.

நவம்பர் மாதம் ஐ, நா. அவையில் இந்த அறிக்கைகள் விவாதிக்கப்படும்.