நம்மவர் முன்னுள்ள பணி!

123

இனப்படுகொலை/இனவழிப்புத் தீர்மானம் ஒன்றைக் கனடிய நாடாளுமன்றம் சென்ற வாரம் நிறைவேற்றியது. எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த எல்லா உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். (இது முக்கியமான செய்தியாக கனடா நாளிதழ்களிலோ அல்லது ஏனைய ஊடகங்களிலோ இடம்பெறவில்லை.என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)

இஸ்லாமிய அரசு (ISIS/ISIL) என அழைக்கப்படும் மத அடிப்படைவாத இயக்கம், ஓகஸ்ட் மாதம் 2014 இல்,வடக்கு ஈராக்கைத் தாக்கிப் பல பகுதிகளைக் கைப்பற்றியது.அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த யஸிடி இனக்குழுமத்தை சேர்ந்த மக்களை இஸ்லாமிய அரசு கொன்றொழித்தது. யஸிடி மக்கள் ஆறாயிரம் ஆண்டுகள் பண்பாட்டு அரசியல் வரலாறு கொண்ட, ஆனால் சிறு எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட தேசிய இனம்.இஸ்லாமிய அரசின் அழித்தொழிப்பில் அந்த மக்களில் 5000 பேர் கொல்லப்பட்டனர். ஏழாயிரம் பேர் கடத்திச் செல்லப்பட்டார்கள். அந்த மக்களில் 90மூமானவர்கள்  புலம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பெருமளவான பெண்களும் சிறுமிகளும் பாலியல் அடிமைகளாக்கப்பட்டு விற்கப்பட்டார்கள். இவர்களில்1100 பேரை ஜேர்மன் அரசாங்கம் பொறுப்பேற்று நல்வாழ்வு அளித்து வருகிறது. யஸிடி மக்களின் 42 வழிபாட்டிடங்களும் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன.

இத்தகைய ஏராளமான விபரங்களை, ஐ.நாடுகள் அவை இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டுள்ளது. யஸிடி மக்களுக்கு நடந்தது இனப்படுகொல என அது பிரகடனம் செய்தது. உடனடியாகவே ஐ. நா.வின் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அது கோரிக்கை விடுத்தது ( அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா எல்லாமே இஸ்லாமிய அரசுக்கு எதிராக இருப்பதால் இத்தகைய கோரிக்கையை முன்வைக்க ஐ.நா.வுக்கு எத்தகைய தயக்கமும் இருக்க வேண்டியதில்லை என்பது தெரிந்ததுதான். பாவம் தமிழ் மக்கள் என்பது வேறு விடயம்!!!!)

யஸிடி மக்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் எனக் கனடிய நாடாளுமன்றமும் அங்கீகரித்து பிரகடனம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது அனைத்துக கட்சிகளதும் ஆதரவு கோரப்பட்டது) யஸிடி மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை கனடிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளான  பெண் களையும் சிறுமிகளையும்120 நாட்களுக்குள் கனடாவுக்கு வரவழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இப்போது நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் பழமைவாதக் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பெல் (MIchelle Rempel)  அவரது கடுமையான உழைப்பின் மூலமே இந்த தீர்மானம் எல்லாக் கட்சிகளதும் ஆதரவுடன் நிறைவேறியது, இதனைத்  தமிழ் மக்கள் வரவேற்க வேண்டியது மட்டுமல்ல,இனப்படுகொலை,இனவழிப்பு எங்கு நடந்தாலும் அதற்கு ஆதரவான உணர்வுத் தோழமையுடன் குரலெழுப்பி ஆதரவு தர வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கும் உண்டு.

நாடாளுமன்ற  உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்களாகக் கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்துப் பிரகடனம் செய்வதற்கான் முயற்சிகளில் ஈடுபட்டபோது அவர் எல்லாக் கட்சிகளதும் ஆதரவை நாடினார்@பெற்றுக் கொண்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே வழிமுறையின்படி, தமிழ் மக்களுக்கு இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் எனத் தீர்மானம் கொண்டு வருவது அவசியம். அதற்காக லிபரல், பழமைவாதக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி,பசுமைக் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு உழைக்கும் நம்மவர்கள் முன்வர வேண்டும். இது ஒன்றுதான் தற்போது  கனடியத் தமிழர்கள் சீரிய முறையில் கவனம் செலுத்த வேண்டிய அரசியல் நடவடிக்கையாகும்.

ஐ.நா பொதுச்செயலாளர் பான்.கி.மூன்  இலங்கை தொடர்பாக நியமித்த விசேட ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரிபன் ரட்னர் சென்ற வாரம் யோர்க் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் போது தெரிவித்தது போல “ஈழத் தமிழர்களுக்கு இப்போதைய பணி என்னவெனில் ஐ. நா  அவையும் அதில் அங்கம் வகிக்கும் அதிகாரம் மிக்க நாடுகளையும் பலமாக அழுத்தத்துக்கு உள்ளாக்குவதுதான். எங்களுடைய பணி- அதாவது வல்லுனர்களது பணி முடிந்துவிட்டது. இனி நடவடிக்கை எடுப்பது ஐ.நாவின் கைகளில்” என்று அவர் சொல்கிறார்.

புதிய கனடா அரசு தனது ஆளுமையையும் கவர்ச்சியையும் செயல் திறனையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் உதவ முடியும் இதற்கான முதலாவது காலடியாக ‘தமிழ் மக்கள் இனப்படு கொலை’என்ற தீர்மானத்தைக் கனடாவில் நிறைவேற்ற எல்லாக் கட்சிகளுக்கும் பணிபுரியும் நம்மவர்கள் உழைக்க வேண்டும்