ரொறன்ரோவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்.!

92

டந்த சனிக்கிழமை மாலை ரொரொன்ரோ குயின்ஸ்பார்க்கில் டக்கோட்டா எண்ணெய்க்குழாயை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது. கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் அமெரிக்க தூதரகத்தில் தரித்து பின் நாதன் பிலிப்ஸ் சதுக்கம் வரை அமைதியாக நடந்து சென்று தமது ஆதரவை டக்கோட்டாவில் போராடும் ஆதிக்குடி
யினருக்குத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வட டக்கோட்டா மா நிலத்தில் உள்ள Standing Rock எனப்படும் ஆதிகுடியினரின் புனித நிலத்தினூடாக மசகு எண்ணெயை கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பதை எதிர்த்து நடை பெற்று வரும் பலவேறு அமைதிப் போராட்டங்களில் இதுவும் ஒன்று.

இந்த டக்கோட்டா எண்ணெய்க்குழாய் ஏறத்தாழ 1800 கிலோமீற்றர்கள் நீளமானதாக அமையவிருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் செலவு 3.7 பில்லியன் டொலர்கள். இது வட டக்கோட்டா எண்ணெய் நிலங்களில் இருந்து எண்ணையை தெற்கே இலினொய்ஸ் வரை எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது செல்லும் பாதையில் தான் Standing Rock என்னும் ஆதிக்குடிகளின் மூதாதையரைப் புதைக்கும் இடம் அமைந்துள்ளது. இக்குழாயின் பாதையிலுள்ள நீர் நிலைகள் மற்றும் நிலம் மாசுபடுவதற்கான வாய்ப்புக்களையும் இந்த எண்ணெய்க்குழாய் எற்படுத்தும். இதனால் பல ஆதிக்குடிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். அதில் முக்கியமானவர் சியொக்ஸ் எனப்படும் பழங்குடியினத்தவர்.

ஆதிக்குடிகளின் நிலங்கள் பெரும் பணம் படைத்த பெரு நிறுவனங்களால் சூறையாடப்படுவது என்பது வட அமெரிக்காவுக்குப் புதிதல்ல. அரசாங்கம், காவல்துறை என்பனவெல்லாம் பணம் படைத்த கம்பனிகளின் பின்னேதான் நிற்கும் என்பதும் புதிதல்ல. எண்ணெய் கொண்டு செல்லவதற்கு நிலக்கீழ் வழிமுறையே மிகப்பாதுகாப்பானது எனவும் இதனால் பொருளாதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்களும் நல்லது எனவும் எண்னெய்க்கம்பனி வாதிட்டு வருகின்றது. அது தவிர, ஆயுதமேயின்றி அமைதியாக நின்று போராடிய ஆதிக்குடி மக்களின் மேல் பலாத்காரத்தை காவல்துறையும் எண்னெய்க்கம்பனிகளினால் அமர்த்தப்பட்ட காவல் படைகளும் மேற்கொள்கின்றன.

சமூக வலைத்தளம் மூலமாக அதிகளவு ஊக்கம் இந்தப் புரட்சியாளர்களிக்குக் கிடைத்துள்ளது. இந்த நிலக்கிழ் குழாயின் பாதையை திசைதிருப்ப வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு பல்வேறு சூழலியல் அமைப்புக்களும் ஆதரவு கொடுத்துள்ளன. கனடாவைச் சேர்ந்த பல ஆதிக்க்டி அமைப்புக்களும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன. உலகளாவிய கவனத்தைப் பெற்றுவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, நாம் நடத்தும் இந்தப் போராட்டம், டக்கோட்டாவில் தங்களது நிலம் நீர் என்பவற்றின் மீதான தமது உரிமைக்காக போராடிவரும் அந்தப் பூர்வகுடி மக்களுக்கு ஆதரவாக நாங்களும் உள்ளோம் என்று காட்டுவதே இன்றைய போராட்டத்திற்கான காரணம் என்று அங்கிருந்த ஒரு போராட்ட உறுப்பினர் தெரிவித்தார்! இந்தப் போராட்டத்தில் கனடிய பூர்வ குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனச் சமூகங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்!.