ஒரு இலக்கியக்காரனின் வாழ்பனுபவங்கள்

135

1983ம் ஆண்டு கடைசியிலோ, 1984ம் ஆண்டு தொடக்கத்திலோ கல்முனையில் எனது இருப்பிடமான எழுத்தாளர் சண்முகம் சிவலிங்கம் வீட்டிற்கு ஒரு செய்தி கிடைத்தது. அப்பொழுது நேரம் முன்னிரவு 9மணி இருக்கலாம். அதிர்ஸ்டவசமாக நானும் அங்கேயே இருந்தேன். அந்த செய்தி என்னை உடனடியாக பாண்டிருப்பு தபால் நிலையத்திற்கு வருமாறும் 15 நிமிடத்திற்குள் ஊரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் என்றும் சொன்னது. நான் பரபரப்பாகப் புறப்பட்டு சற்றுத் தொலைவில் இருந்த தபாலகத்திற்குச் சென்றேன். ஊரில் என்னவோ ஏதோ என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் ஊரில் இருந்து எனது துணைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எனக்கு ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை நாளை பிற்பகல் 2மணிக்கு கொழும்பில் இளைஞர் விவகார அமைச்சில் நடக்குமென்றும் என்னை உடனடியாகப் புறப்பட்டு அங்கு செல்லுமாறும் சொன்னார். அத்துடன் எனது தராதரப் பத்திரங்களை தனது தம்பியிடம் கொடுத்து உடனடியாகவே கொழும்புக்கு அனுப்புவதாகவும், அங்கு குற்ப்பிட்ட இடத்தில் அவரைச் சந்தித்து அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார். எனக்கு இச் செய்தி ஒரு வகையில் அதிர்ச்சியாகவும் இன்னொரு வகையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனக்கு பிடித்தமில்லாத இந்த எழுது வினைஞர் வேலையில் இருந்து விடுதலை கிடைக்கப் போவதையிட்டு மகிழ்ந்தேன்.

உடனடியாக கொழும்புக்குப் போவதற்கான பணம் கைவசம் இருக்கவில்லை. உத்தியோகத்தர்களுக்கான புகையிரத ஆணைச்சீட்டை எடுத்தால் உதவியாக இருக்கும் என நினைத்தேன். இந்த இரவு நேரத்திலும் எங்கள் கல்வி அலுவலகத்தில் சில உத்தியோகத்தர்கள் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே அங்கு விரைந்தேன். எதிர்பார்க்கப்பட்டது போலவே சில உத்தியோகத்தர்கள் இருந்தார்கள். ஆனால் புகையிரத ஆணைச்சீட்டில் ஒப்பமிடுவதற்கான அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள் எவரும் இருக்கவில்லை.

அப்போது எனது நண்பர் ஒரு உபாயம் சொன்னார். பக்கத்திலுள்ள வெஸ்லி கல்லுலீரியின் அதிபர் விடுதியில் இருப்பார் எனவும் அவரிடம் சென்று உதவி கேட்போம் எனவும் வழிப்படுத்தினார். நண்பரும் உடன்வர அங்கு சென்று அதிபரிடம் எனது நிலைமையைச் சொன்னேன். அதிபரான திரு.மகாலிங்கம் அவர்கள் பெருமனதுடன் பாடசாலை ஆணைச்சீட்டுப் புத்தகத்தில் இருந்து எனக்கு ஆணைச்சீட்டு வழங்கி உதவினார். நேர்முகப் பரீட்சையில் தேர்வு பெற்று தன்னுடைய பாடசாலைக்கே ஆசிரியனாக வர வேண்டும் எனவும் வாழ்த்தி அனுப்பினார்.

அடுத்தநாள் காலையில் மட்டக்களப்பில் இருந்து உதய தேவியில் புறப்பட்டு, திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து, குறிப்பிட்ட நேரத்தில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றினேன். எனது தராதரப் பத்திரங்களைப் பார்வையிட்ட அதிகாரிகள் சில தராதரப்பத்திரங்கள் இல்லை எனச் சொன்னார்கள். அவற்றை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் தமது பகுதிக்குச் சேர்க்குமாறும் அறிவுறுத்தினார்கள். நான் உடனடியாகவே யாழ்ப்பாணம் வந்து நண்பன் மூலம் பத்திரங்களை உரிய இடத்தில் சேர்ப்பித்தேன். அவரும் எல்லாவற்றையும் சரியாகச் செய்ததாகவே தகவல் தந்திருந்தார். நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் கிடைத்த பின்னரான தனது செயற்பாடுகளை துணைவியார் கூறினார். “அன்று பாடசாலை விட்ட பின் வேறு ஒரு நிகழ்வில் பங்கு கொண்டு தாமதமாகவே வீடு திரும்பினேன். இப்படி ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் ஐயா கேட்டார். கடிதத்தை நானும் வாசித்த பின் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எனது சக ஆசிரியையின் உறவினர் தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் உயர் பதவியில் இருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. உடனே ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து 3மைல் தொலைவில் இருந்த அந்த ஆசிரியை வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் செய்திகளை கூறிய போது அவர் என்னை தனது உறவினரான அந்த உயர் அதிகாரி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சுகவீனமடைந்திருந்த அவ் உயர் அதிகாரி தனது வீட்டில் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தனது உதவியாளரைக் கண்டு “என்ன இந்த நேரத்தில்?” என விசாரித்தார். அவர் என்னைக் காட்டி விபரங்களைச் சொன்ன போது அவர் கண்களை மூடிச் சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின் படுக்கையில் இருந்தெழும்பி “என்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறீர்கள். எனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் முயன்று பார்ப்போம்” எனக் கூறி முயன்று பாண்டிருப்பு தபாலகத்திற்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்தார். அவருக்கு மிகுந்த நன்றி பாராட்டி விடை பெற்றோம். பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே”

இவ்வளவு பரபரப்பான செயற்பாடுகளால் எல்லாம் சரியாகவே முடிந்தது என்று நிம்மதி அடைந்தேன். என்றாலும் மனதில் ஒரு கிலேசம் இருந்து கொண்டே இருந்தது. பட்டதாரி ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்து கொண்டே இருந்தன. எனது பெயரும் வரும் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனது பெயர் வரவேயில்லை. இந் நிலையில் பாடசாலைத் தவணை விடுமுறையையொட்டி எனது வேலைத்தலமான கல்முனைக்கு எனது துணைவியும் வந்திருந்தார். எனது சக உத்தியோகத்தரான முஹமட் ஜிவ்ரி தனது வீட்டிற்கு எங்களை இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தார். அங்கு பலதும் பத்துமான பேச்சுக்கிடையில் நேர்முகப் பரீட்சை பற்றிய கதையும் வந்தது. முஹமட் ஜிவ்ரியும் தானும் ஆசிரியர் நியமனத்துக்கு காத்திருப்பதாகவும் தனது பெயரும் இன்னும் வரவில்லை என்றும் சொன்னார். எனவே இரண்டு பேரும் கொழும்புக்கு போய் கல்வி அமைச்சில் உரிய அதிகாரியைச் சந்தித்துப் பேசுவதாக ஏற்பாடு செய்து கொண்டோம். குறித்த தினத்தில் கொழும்பில் சந்தித்து கல்வி அமைச்சில் உரிய அதிகாரிக்காகக் காத்திருந்தோம். அவர் வரவேயில்லை.

எதற்கும் இளைஞர் விவகார அமைச்சிற்கு சென்று பார்ப்போமென்று தீர்மானித்து அங்கு சென்றோம். அங்கும் உரிய அதிகாரி எங்கோ சென்று விட்டதாயும், காத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட எழுதுவினைஞர் சொன்னார். நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரி வரவில்லை. எங்களின் நிலையைப் பார்த்த எழுதுவினைஞர் தான் உதவி செய்வதாகச் சொல்லி நேர்முகப் பரீட்சை சம்பந்தமான பேரேட்டை எடுத்துப் பார்த்தார். நண்பனுடைய பெயர் தவறுதலாக விடுபட்டுள்ளதென்றும், அடுத்த பட்டியலில் வருமென்றும் கூறி அவனுக்குத் தெம்பளித்தார். என்னுடைய பெயரில் முன்னர் அதிகாரிகள் இல்லையென்று சொன்ன தராதரப் பத்திரங்களின் பதிவு இடம் பெற்றிருக்கவில்லை. நான் முன்னெச்சரிக்கையாக கையுடன் கொண்டு சென்ற அந்தத் தராதரப் பத்திரங்களை அவரிடம் கொடுத்தேன். அவற்றைப் பேரேட்டில் பதிவு செய்த அவர் புன்முறுவலுடன் எங்களைப் பார்த்து “சரி நீங்கள் போங்கோ, அடுத்த பட்டியலில் உங்கள் இருவரின் பெயரும் வரும்” என்று சொன்னார். எங்கள் பார்வையில் நம்பிக்கை இருக்கவில்லை. அதை ஊகித்த அவர் மீண்டும் சொன்னார் “பயப்படாமல் போங்கோ, நான் அதிகாரியிடம் சொல்வேன், அடுத்த பட்டியலில் உங்கள் பெயர் வரும்”. நாங்கள் அவருக்கு நன்றி கூறித் திரும்பினோம்.

அடுத்த வாரமளவில், தனது பெயர் பத்திரிகையில் வந்திருக்கின்றதென்றும், எனது பெயரைக் காணவில்லை என்றும் ஜிவ்ரி சொன்னான். நானும் பரபரப்புடன் பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன். அவனது பெயர் இருந்தது. எனது பெயரைக் காணவில்லை. ஆனால் ஏ.சண்முகம், கரவெட்டி என்றோர் பெயர் இருந்தது. வீரகேசரியில் தெரிந்த நண்பருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரால் சரியான தகவலைத் தர முடியவில்லை. சரி நடப்பது நடக்கட்டுமென்று விரக்தியுடன் இருந்தேன். இரண்டொரு நாட்களின் பின் ஆசிரிய நியமனத்திற்கான கடிதம் வந்திருப்பதாக ஊரிலிருந்து தகவல் அனுப்பியிருந்தனர். இவ்வாறாக நான் ஆசிரியரானேன்.

  1. தங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டும், அப்பாலும் மனிதநேயத்துடன் உதவி செய்கின்ற அதிகாரிகள், ஊழியர்கள் அப்போது இருந்துள்ளார்கள். இப்போது…?
  2. எதையும் என்னால் முடிக்க முடியுமென்று முனையும் மனிதர்கள் அக்காலத்தில்  இருந்துள்ளார்கள். இப்போது..?

பிற்குறிப்பு:- 1985-1986ம் ஆண்டுகளில் இப்போதிருக்கின்ற நவீன தொடர்பாடல் வசதிகள் எவையும் இருக்கவில்லை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க.