கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

99

ந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே… பாவம்… அவருக்கு எப்போதுமே ஏதாவது சிக்கல் வந்து கொண்டுதான் இருக்கும். அவர் படம் எடுத்தால்தான் சிக்கல் வரும் என்றில்லை. இப்போது கௌதமி! 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கௌதமி இப்போது பிரிந்து செல்வதாக ட்விட்டர் மூலம் அறிக்கை விட்டு விட்டு கமல் வீட்டை விட்டு விட்டுகிளம்பிவிட்டார். இந்த உலகமகாசெய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவி… கமல்ஹாசன் ஒரு பெண் பித்தன்… ஸ்ரீவித்யா, வாணி, ஸ்ரீதேவி, சாரிகா, சிம்ரன், கௌதமி என்று தொடர்ந்து, இப்போது அடுத்தவளைப் பிடிக்ககௌதமியைத் துரத்திவிட்டு விட்டான் என்ற ரீதியில் நம்மவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் மன்னிக்கவும் ஏசிக்கொண்டிருந்தனர்.

கமலஹாசனிடம் இருந்து அவரின் இரண்டாவது மனைவி சரிகா பிரிந்து சென்ற காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அந்த நேரத்தில் அந்தப்பிரிவு ஒரு பெரிய விடயமாக இந்தியாவின் மீடியாக்களில் பேசப்பட்டமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம். 80களில் கமல்ஹாசன் ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நடிகைசாரிகாவிடம் காதல் வசப்பட்டார். சாரிகா கர்ப்பமான பின்னர் சாரிகாவின் வயிற்றில் வளர்வது என் குழந்தைதான் என்று கமல்ஹாசன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். அதன் பின்னர் பல வருடகாலமாக இருவரும் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். இரண்டு அழகிய பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து பொறுப்பான பெற்றோராக கமல்-சாரிகா தென்பட்டபின் ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசன் வற்புறுத்தியதால் அவர் முன்னிலையில் வடஇந்திய சரிகாவை தென்னிந்திய முறையில் சம்பிரதாயபூர்வமாகத் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார் கமலஹாசன். திடீரென ஒருநாள், “சாரிகா கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்து செல்கிறார்” என்ற செய்தி வந்தபோது முழு இந்தியாவிலும் அது பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்பட்டது. அவர்களது திருமணச் செய்தியைவிட அவர்களது பிரிவுச் செய்தி பலத்த முக்கியத்துவம் பெற்றது. சினிமாப் பிரபலமாக இருப்பதால் வரக்கூடிய அனைத்துச்சங்கடங்களையும் கமல்ஹாசன் அனுபவித்துக் கொண்டிருந்தார். மீடியாக்கள் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தன.அதன் அழுத்தம் தாங்க முடியாத நிலையில் கமல் ஒரு பத்திரிகைக்கு சொன்ன வார்த்தைளைப் படித்துப்பாருங்கள்.

“ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவையிருக்கும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகி விட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு – பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. தனிப்பட்டவாழ்க்கையில் எல்லோரையும்போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும்
உங்களைப்போல மனிதன்தானே?” என்றார்.

“ஒரு பெண்ணும் ஆணும் பிரிவது என்பது அவர்களது தனிப்பட்ட விடயம். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையுள் மீடியா நுழைவதை தாங்க முடியாமல் கமல்ஹாசன் “என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கிறது. அந்த பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியேபார்க்கக் கூடாது. மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம்” என்றும் சொன்னதைப் படித்தபோது, நடிகனாக அல்ல ஒரு தனிமனிதனின் மனம் புண்பட்டதால் வெளிப்பட்ட வார்த்தைகளே அவை என்பதைத்தான் காண முடிந்தது. இது ஒருபுறமிருக்க….

முதல் மனைவியான வாணியை விவாகரத்துச் செய்த காலத்திலும் அது இலகுவானதாக அவருக்குஇருக்கவில்லை. “பொய்த்தது அன்பல்ல.. மனிதர்களே…” என்றிருந்தார். தான் சம்பாதித்த சொத்துக்களை வாணியைவிவாகரத்து செய்தபோது முற்றுமுழுதாக இழக்கவேண்டி வந்ததாகவும் பேட்டியளித்திருந்தார். இதனால்தான்  “மனதுக்குப் பிடித்தவர்களோடு, மனதுக்குப் பிடிக்கிற வரையில் வாழ்வது” என்ற Living together வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அதனால்தான் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று வந்திருந்த கௌதமியும்அதற்குச் சம்மதித்திருக்க வேண்டும். தனியே வாழ்வது இருவருக்கும் பெரிய விடயம் அல்ல.

‘Living together’ என்ற ஒருமித்து வாழும் வாழ்க்கையானது ‘திருமணம் என்னும் கைவிலங்கை ஆணும் பெண்ணும் ஒருசேர மாட்டிக்கொண்டு ஒருவரை ஒருவரை கட்டுப்படுத்தாமல், சுதந்திரமானதொரு வாழ்வியலை இருவருக்கும்பொதுவாக்கிக் கொள்வது’ என்று புரிந்து கொள்ளப்படலாம். எதிர்வரும் காலங்களில்  ‘சமூக அங்கீகாரம் பெற்றபொதுவான வாழ்க்கை முறை’ என்று அதனை நம் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொண்டு போகும் என்பதில் எனக்குச்சந்தேகம் இல்லை. ஆனால் இன்று ஏனோ அதுகுறித்து கேலி கலந்த பார்வையே வைக்கப்படுகிறது என்பதையும் நாம்கவனிக்கலாம். (அந்த வாழ்க்கை முறையை கமல் கௌதமி ஜோடி ஏற்று கைக்கொண்டது குறித்து பல கிண்டல் ஜோக்குகள் இப்போது கொஞ்சநாட்களாக ட்விட்டரை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

“பாபநாசம் படத்தில் பிணம் புதைத்த இடத்தை கமல் ஏன் கொளதமியிடம் சொல்லவில்லை தெரியுமா… ஒருவேளை பிரிஞ்சி போனாபோட்டு குடுத்திடுவா எண்ட முன்னெச்சரிக்கைதானாம்” என்று ஒருவர் ட்வீட் செய்தார். “கல்யாண செலவும் இல்லை. டைவேர்ஸ் செலவும் இல்லை. இதெல்லாம் பாராட்டப்பட வேண்டிய விடயங்கள்” என்று இன்னொருவர் ட்வீட்செய்திருந்தார். மற்றுமொருவர் சோகமயமாகி “கமல் குடுத்து வச்சவர்… இன்னொரு சந்தர்ப்பம் கிடச்சிருக்கு! நமக்குவிதிச்சது அவ்வளவுதான்” என்றிருந்தார்.)

நினைத்துப் பார்க்கிறேன். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் மற்றவர்கள் அத்து மீறி கருத்துக்கள் சொல்வது எத்துணை அநாகரீகம். இது தெரிந்தேயிருந்தும், நாம் பிரபலங்களின் தனி வாழ்க்கையை சுவாரஸ்யத்தோடு கவனிக்கிறோம். அவர்கள் பிரபலங்கள் என்ற ஒரே காரணத்தால் நமது மனோவிகாரங்களை அவர்களது தனிவாழ்க்கையில் கொண்டு சென்று உராய்ந்தும் பார்க்கிறோம். தேர்தெடுப்பதும், சேருவதும், பிரிவதும் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட அந்த ஆணின், அந்த பெண்ணின் விருப்பம் என்பதை புரிந்து, “ஒரு துறவி போன்ற மனோ நிலை” யில் அவற்றைக் கடந்து சென்று விடுவதை நம் மனங்கள் ஏனோ ஏற்பதாகத் தெரியவில்லை. ஒரு மலிவான கிளுகிளுப்புத்தான் எமது மனங்களில் அந்த நேரங்களில் எம்மை வழிநடத்துகிறது.

இன்றைக்கும் தமிழ்நாட்டின் சிலகிராமங்களில், சில குறிப்பிட்ட சமூகங்களில் ‘அறுத்து விடுவது’ என்கிற வழக்கம் இருக்கிறது. தனக்கு கணவன்பிடிக்கவில்லையென்றால் மனைவியோ அல்லது மனைவி பிடிக்கவில்லை யென்றால் கணவனோ பஞ்சாயத்தில் முறையிட்டு, தாலியை அறுத்துப் பிரிந்துகொள்ளலாம். இந்தமாதிரியான வாழ்க்கை முறையையும் நம் தமிழ்ச்சமூகம் கொண்டு தானிருக்கிறது! சேர்வதும் பிரிவதும் அவரவர் விருப்பு! இருவரதும் குடும்ப நன்மையைக் கருதித்தான் கமலஹாசனை பிரிந்து செல்வதாக கௌதமி சொல்லியிருக்கிறார்.b இன்றைய வாழ்க்கையில் திருமணம் என்ற செவ்வியல் அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருக்கின்றது. திருமணம் என்ற ஒப்பந்தம் நாமெல்லாம் நினைப்பதுபோல தொன்மையானதுமல்ல, சக்தி வாய்ந்ததும் அல்ல. உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை இருமனங்கள் ‘சேர்ந்து வாழ்வதன் மூலமும்’ உருவாக்கிக் கொள்ளலாம். ‘பிரிந்து வாழ்வதன்மூலமும்’ உருவாக்கிக்கொள்ளலாம். இதைத்தான் கௌதமியின் வாழ்க்கையும் கமல்ஹாசனின் வாழ்க்கையும் தனித்தனியாக நமக்குக் காட்டி நிற்கின்றன. குடும்பம் என்றஅமைப்பை கருத்தில் கொண்டு ‘பிரிந்து செல்லும் உரிமை’ நமக்கு உண்டு என்பதை என்றும் மறந்து விடாமல்… இப்போது கொஞ்சம் அரசியல் பேசுவோம்:

பிரபல சினிமா நடிகர்கள் தம் சுய நலத்திற்காக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வதை கிளுகிளுப்போடு கவனிப்பதை
விட்டுவிட்டு இங்குள்ள சில ‘பிரபல’ தமிழ் அரசியல்வாதிகள் வறுமையின் நிறம் ‘சிவப்பு’ என்ற கணிப்பில் தம் சுயநல இலாபத்திற்காக Let’s paint Markham blue என சிவப்பிலிருந்து ‘நீல’ நிறம் பூசிக். கட்சி மாறிப் பிரிந்து செல்ல’நினைப்பது’ பற்றிக் கடும் கரிசனத்தோடு கவனிப்போம். கருத்தும் சொல்வோம். கட்சி என்பது குடும்பம் போன்றதொரு அமைப்பேயாகும். (ஒரு கட்சியின் card carrying memberஆக இருப்பது கல்யாணம் பண்ணுவது போன்றது.) அது தருகிறேன் இது தருகிறேன் என லஞ்சம் கொடுப்பதுபோல சிலர் காட்டும் ஆசைக்கு மயங்கி ஒரு கட்சியில் இருந்து மற்றக் கட்சிக்கு ஜம்ப் பண்ணுவதற்கு சில நல்லவர்களும் முயலலாம். அது அவர்களது அரசியல் நம்பகத்தன்மையை  பாதித்துவிடும் என்பது என் கருத்து. கௌதமியும் கமல்ஹாசனும் சினிமாவிலிருக்கும் யாரோ இரு தனிமனிதர்கள் அவர்கள் விழாக்களுக்கு குத்துவிளக்கேற்ற நம்மால் மதிப்புடன் அழைக்கப்படும் சமூகத்தலைவர்களல்லர். அந்த நடிகர்கள் தமது ‘ஒப்பந்த ஒழுக்கத்தை’ப் பேணுகிறார்களா என்ற கண்காணிப்பில் நாம் நமது நேரத்தைச் செலவிடுவதைவிட, ‘நம் தமிழ்ச் சமூகத் தலைவர்கள்’ என நாம் நம்புபவர்கள் ‘கட்சி மாறி’ சமூக ஜனநாயக ஒழுக்கத்திற்கு எப்படியான பாதிப்பை உருவாக்குகிறார்கள் என்பதை அணுகுவதில் நம் கவனம் இருக்கட்டும்.

PC யோ… லிபரலோ… NDP யோ… எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சி என்பது ஒரு ‘அரசியல் குடும்பம்’. அதன் கருத்தியலைப் புரிந்து, கட்சி கருத்துப் பிறழ்வுக்கு உள்ளாகும்போது ‘பிரிந்து செல்லும் உரிமை’ எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஒரு “குடும்பத்திலிருந்து எதற்காகப் பிரிகிறோம்?” என்பதே கேள்வி.