காத்திருக்கும் சவால்

126

டெஸ்டில் அனுபவமற்ற பலவீன நியூசிலாந்து அணியை வெள்ளையடித்ததை தொடர்ந்து விராட் ஹோலியை இந்திய ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றன. இந்த வெள்ளையடிப்பிற்கு முக்கிய காரணம், உபகண்ட ஆடுகளங்கள் என்றாலே நியூசிலாந்து ஆடிப்போகும் வரலாறுதான் முக்கிய காரணம். அது தவிர, அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் அதிகம் ஆடாதவர்கள். தண்ணீரில் முதலைகளான இந்திய சுழற்பந்தாளர்களை எதிர் காண்டு பழக்கப்பட்டிராத நியூசிலாந்து வீரர்கள் சிறிய போராட்டமும் இல்லாமல் சரணடைந்து விட்டார்கள்.

விராட் ஹோலி தலைமையில் இந்தியா நான்கு டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்த இடத்தில்தான் ஹோக்லியின அதிர்ஸ்டத்தையும் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டில் வென்ற தொடர்கள் இரண்டு. இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுடனான தொடர்கள் அவை. உண்மைய சொன்னப்போனால் இந்தியா இந்த நாடுகளிற்கு சுற்றுப்பயணம் சென்ற போதுதான், இந்த நாடுகள் டெஸ்டில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தன. இந்தியா இலங்கைக்கு வந்த சமயத்தில்தான் இலங்கை கிரிக்கெட் நவீன வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்திருந்தது. அதற்கு முக்கிய காரணம், அப்போதைய தேர்வுக்குழு. இரண்டு வருடங்களாக சரியான அணியை
கட்டியெழுப்ப முடியாமல் மோசமான வீரர்களிற்கு வாய்ப்பளித்து வந்தனர். அதன் பின் தேர்வுக்குழுவில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றங்களின் பின்னர் இலங்கை தலைநிமிர்ந்தது. மேற்கிந்திய தீவுகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அண்மைக்காலமாக மேற்கிந்தியாவின் சிரேஸ்ட வீரர்கள் சம்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அணிக்கு திரும்ப முடியாமல் இருக்க, அங்கு செல்லும் அணிகள் வெற்றிக்கணக்கை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.

விராட் ஹோலி தலைமையில் உண்மையில் பெருமைப்படத்தக்கது தென்னாபிரிக்காவிற்கு எதிரான வெற்றியைதான். அந்த தோல்விக்கு பின் தென்னாபிரிக்கா டெஸ்டில் பெரிதாக சோபிக்கவில்லையென்பதையும் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். அடுத்து இந்தியாவிற்கு வருகிறது இங்கிலாந்து. நியூசிலாந்து கணக்கை பார்த்து இந்திய ஊடகங்கள் வெள்ளையடிப்பை பற்றி பேச ஆரம்பித்துள்ளன. இந்த எதிர்பார்ப்பு எங்கு கொண்டு சென்று முடிக்கும் என தெரியாது. ஆனால் வெள்ளையடிப்பிற்கு எவ்வளவு வாய்ப்பில்லையோ அதேயளவு இங்கிலாந்து தொடரை வெல்லவும் வாய்ப்பில்லை.

இங்கிலாந்து வீரர்களிற்கும் சுழல்பந்து அலர்ஜி உள்ளது. ஆனால் ஜோ ரூட் போன்ற அனாயாசமான துடுப்பாட்டவீரர்கள் எதையும் சமாளித்து வருகிறார்கள். இங்கிலாந்திடம் தரமான சுழற்பந்தாளர்கள் இல்லையென்பதும், அன்டர்சனின் காயமும்தான் இங்கிலாந்தின் பலவீனங்கள். இந்த தொடர் இன்னொரு விதத்தில் ஹோலிக்கு சவால். இங்கிலாந்திற்கு எதிராக ஹோலியின் துடுப்பாட்ட சராசரி சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அந்த அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 20.12 சராசரியுடன் 322 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதை வடிகட்டி பார்த்தால் நிலைமை கொஞ்சம் மோசம்தான். இங்கிலாந்து மண்ணில் கடந்த 2014-ல் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் கோலி 10 இன்னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 134. சராசரி 13.4. அதிகபட்ச ரன்கள் 39.

சொந்த மண்ணிலும் இங்கிலாந்துக்கு எதிராக கோலி ஆட்டமே கண்டுள்ளார். 2012-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் கோலி 7 இன்னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 188. இதன் சராசரி 31.33. கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் 103 ரன்கள் எடுத்தார். இதை தவிர்த்து பார்த்தால் 6 இன்னிங்ஸ்களில் கோலி எடுத்த ரன்கள் 85 மட்டுமே.

9 டெஸ்ட் போட்டிகளில் அண்டர்சன் பந்தில் 5 முறை கோலி வீழ்ந்துள்ளார். கோலி விக்கெட்டை எந்த பந்து வீச்சாளரும் இந்த அளவுக்கு அதிகமுறை கைப்பற்றியதில்லை. மேலும் அண்டர்சன் கையாண்ட தொழில் நுட்ப நுணுக்கங்களையும் மற்ற பந்து வீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியது கிடையாது.இங்கிலாந்துக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் கோலி 11 முறை கட்ச் முறையில் ஆட்டமிழந் துள்ளார். அதிலும் சிலிப் பீல்டர் மற்றும் விக்கெட் கீப்பரிடமே சரண்டராகி உள்ளார். இதற்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கையாண்ட வியூகம் ஓப் ஸ்டெம்பை ஓட்டிய பகுதியில் சிறந்த நீளத்தில் பந்துகளை வீசியதுதான். குறிப்பாக 2014 தொடரில் பல முறை குறிவைத்து வீசப்பட்ட பந்துகள் கோலியின் மட்டை விளிம்பில் பட்டு சிலிப் பீல்டரிடம் தஞ்சம் அடைந்தது.

எதிர்வரும் தொடரில் கோலிக்கு ஓர் ஆறுதலான விஷயம் என்னவென்றால் அண்டர்சன் காயம் காரணமாக முதல் கட்ட போட்டிகளில் விளையாடாததுதான். மேலும் கடந்த கால தொடர்களில் அச்சுறுத்திய கிரேமி ஸ்வான், மோன்டி பனேசர் போன்ற தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் கோலிக்கு சாதகமாக இருக்கலாம்.