குழந்தைப் போராளி – 32

136

ப்பாவின் இருண்ட பக்கத்தை என் சகோதரியைத் தவிர வேறொருவரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் துணிந்ததில்லை. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெகு நேரமாக வெட்கத்துடன் போராடிக் கடைசியில் அவர் ஹெலனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கத்தினார். ஹெலனோ ” முடியாது, நான் இங்கேதான் இருப்பேன். என்னைக் கொல்ல விரும்பினால் இப்போதே நீ என்னைக் கொல்லலாம்… நீ ஏன் என்னைப் பெற்றாய்? நீ எனது உண்மையான தந்தை இல்லையா? நீ எனது உண்மையான தந்தை இல்லையென்றால் எனக்கு மகிழ்ச்சி தான். நீ உண்மையான தந்தையாய் இருந்தால் நான் இங்கிருந்து போகப்போவதில்லை” எனப் பதிலுக்குக் கத்தினாள்.

அப்பா அவளைத் இழுத்துத் தரையில் வீழ்த்த முயற்சித்தார்.ஹெலன் அப்பாவை விடப் பலசாலியாயிருந்ததால் திமிறிக் கொண்டு நின்றாள். அவளைக் கீழே தள்ளிவிடும் முயற்சியில் தோல்வியுற்ற அப்பா அவளை அடிக்கத் தொடங்க அவளும் திருப்பி அடித்தாள். இருவருமாக மாறிமாறி ஆவேசத்துடன் அடித்துக் கொண்டார்கள். அதிலும் ஹெலன் பலசாலிதானென்பதை அப்பாவிற்கு கூடுதலாக அடிப்பதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்தாள். “நான் உயிருடன் இருக்கும் வரை நீ என்னை அடிப்பதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை” எனச் சொல்லிச் சொல்லி அவள் அப்பாவை அடித்தாள்.

அடுத்த நாள் அப்பா ஹெலனிற்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவள் அவரது மனைவியின் சொல்கேட்டு நடக்க வேண்டும். முடியாதென்றால் அவள் வீட்டிலிருக்கக் கூடாது! அத்துடன் அவரது நண்பனின் மகனைத் திருமணம் செய்துகொள்ளவும் வேண்டும். ஹெலன் முகத்திலடித்தது போல அப்பாவிற்குப் பதில் சொன்னாள்:

“உனது மனைவியின் சொல்கேட்டு நடக்க நான் தயாரில்லை, உனது நண்பரின் மகன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் உனது மனைவிக்கே அவனைக் கட்டி வை.” வெளியே என்னைக் கூட்டி வந்த ஹெலன் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்த கடித உறையொன்றை என்னிடம் தந்தாள். நான் கவலையுடனும் அக் கடிதத்துடனும் வாழைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கண்ணீர் விட்டு அழுதுகொண்டே நான் அக்கடிதத்தை வாசித்து முடித்தேன். என் ஞாபக அடுக்குகளில் இவ்வாறாக அக் கடிதம் பதிவாகியிருக்கிறது:

அப்பா,

நீ எனக்குத் தந்த குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றது, அதற்கான தண்டனையை நீ பெறுவாய்.அப்பா! உலகில் இலக்கின்றி நான் அலையப் போகிறேன். அன்பே காட்டாத நீ என்னை உனது இரத்தமும் சதையுமெனச் சொல்கிறாய். நீ தானா எனது தகப்பனென்ற சந்தேகத்தை நீ என்னுள் விதைத்துவிட்டாய். நான் துயரத்துடன் தான் மரிப்பேன். ஆனால் அப்போது கூட நான் உன் பெயரை உச்சரிக்கப் போவதில்லை. நீ என்னதான் செய்தாலும் மீண்டும் என்னை நீ காணப்போவதுமில்லை. நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களையும் தவறுகளையும் ஒருமுறை தன்னும் கேள்விக்குள்ளாக்காமலேயே இறப்பாய். நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் கட்டாயம் அனுபவிப்பாய்.

கடிதத்தை வாசித்து முடித்தவுடன் அப்பாவிடம் இதைச் சேர்ப்பிப்பதா இல்லையா என யோசித்தேன். கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழிப்பதென முடிவெடுத்தேன். காட்டிக்கொடுப்பவள் என்று என்னால் பழிக்கப்பட்டவளே இப்போது என் மனதில் வீராங்கனையாக உயர்ந்து நிற்கிறாள். அவளின் கடிதம் என் மனதில் வரி வரியாகப் பதிந்துவிட்டது. நான் இறக்கும் வரை துயர் கொப்புளிக்கும் அந்தச் சொற்கள் அங்கே அலைந்து கொண்டேயிருக்கும். அவளின் போராட்டம் எனக்கான போராட்டமாயும் இருந்தது. ஹெலன் தனது வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தாலும் அவள் வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை. இறுதிவரை அப்பாவிடம் எந்த உதவியும் கேட்காத அவள் திரும்பி வரும்போது இறப்பதற்காகத்தான் வந்திருந்தாள்.

நான் மீண்டும் தனித்துப் போனேன். மீண்டுமொரு சகோதரி தொலைந்து போனாள். என்னுடன் இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் என்னை விட்டுப் போய்விட்டது.அவள் எங்கு போனாள்? எங்கே அவளைத் தேடுவது? இதெல்லாம் எங்கே போய் முடியப்போகின்றது? அவள் மாதிரியே நானும் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாமா எனத்தீவிரமாகச் சிந்தித்தேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. என் துயரங்களும் பெருகிக்கொண்டே போயின.

ஒரு நாள் காலையில் பால்காரர் வரவில்லை. எனவே நான் பால் விற்குமிடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்பவிடம் பணம் வாங்கிக் கொண்டேன். பால் வாங்குவதற்குச் செல்லும் வழியில் என் பாடசாலையின் அருகே இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர். எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாது வேகமாக அவர்களைக் கடந்து ஓடினேன்.