தமிழகமும் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் – 5

75

இந்த இதழுடன் காவிரிப் பிரச்சினை தொடர்பான தொடர் முடிவுறுகிறது. மேலதிகமாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் வரும்போது மீண்டும் தீபம் அவற்றை வெளியிடும். இந்தத் தொடர் ஓரளவுக்கு பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் தொட்டிருக்கிறது என்று நம்புகிறோம். சென்ற இதழில் வெளியான கட்டுரை லெனின் அகத்தியநாடன் அவர்கள் எழுதிய ‘காவிரிக்காக கன்னடர்களை தாக்குவது முறையா? – பிரச்சனைக்கு யார் காரணம்’ என்ற தலைப்பிலான கட்டுரை. இந்தக் குறிப்பு தவறுதலாக விடுபட்டுவிட்டது. இந்த இதழில் வெளியாகும் கட்டுரை காலச்சுவடு ஒக்ரோபர் இதழில் வெளியான கட்டுரை. இந்தக் கட்டுரைகளை தீபத்தில் நன்றியுடன் மறுபிரசுரம் செய்திருந்தோம். அவர்கள் எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை தீபம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.    (ஆ-ர்)

செப்டம்பர் 12, திங்கள்கிழமை, 12,000 கனஅடி காவிரி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்ற
உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து கர்நாடக – தமிழக வீதிகளில் கலவரங்கள் வெடித்தன. காவிரிநீரைப் பங்கிடுவது தொடர்பாக பல்லாண்டு காலமாய் நீதிமன்றங்களில் நீடித்து விவாதிக்கப்பட்டு வரும் விவாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. செப்டம்பர் ஐந்து உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா ஒவ்வொரு நாளும் 15,000 கனஅடி காவிரி நீரைப் பத்து நாட்கள் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும். இதற்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு வலுக்கவே நீரின் அளவைக் குறைக்க உச்சநீதிமன்றம் சம்மதித்தது.

எந்நேரமும் வெடிக்க இருக்கும் கடுஞ்சினம் அப்போது அங்கே நிலவிற்று. இச்சூழலைத் தணிக்க ஊடகங்கள் செய்த உதவி மிகக் குறைவு. பிரச்சனையை அவை மேலும் தூண்டியதாகவே தோன்றிற்று. இரண்டு மாநிலங்களின் வட்டார தொலைக்காட்சிச் செய்திச் சானல்கள் ஒளிபரப்பிய மிகையுணர்ச்சி மிகுந்த செய்திகள் வீதிகளில் மக்களின் கோபக் கனலை ஊதிப் பெருக்கின. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான வெங்கய்ய நாயுடு இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பவேண்டியதிருந்தது. ஊடகங்கள் இப்பிரச்சினையைக் கையாளும்போது அதன் கடுமையை மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டுமென அவர் அதில் கேட்டுக்கொண்டார். கலவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் கட்டுப்பாடு மீறக்கூடாதெனவும் ஊடகங்களை அவர் வலியுறுத்தினார்கன்னட நடிகர்களைக் கேலிச் சித்திரங்களாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, 22 வயதான ஒரு பொறியியல் தமிழ் மாணவன் நான்கைந்து கன்னடியர்களால் அடிக்கப்பட்டான். அந்த வீடியோ முகநூல்களில் இடுகையிடப்பட, அது காட்டுத்தீப்போல் பரவிற்று. இரு மாநிலங்களிலுமுள்ள இணையதளங்களும் இதனை மேலும் விரிவாகக் கொண்டு சென்றன. சனிக்கிழமை நடந்த இந்த நிகழ்வுதான் தொடக்கம். ஒரு பிரதான கன்னடத் தொலைகாட்சி சானல் தமிழ் மாணவன் அடிக்கப்படும் காட்சியைத் திங்கள்கிழமை காலை ஒளிபரப்பிற்று. அடித்தவர்களை “தைரியமான கன்னடக் களவீரர்கள்” எனவும் அவர்கள் சரியான காரணத்திற்காகவே கோபம் கொண்டனர் எனவும் அந்த சானல் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார். அவரது தொனியில், செய்தி அறிக்கைகளில் ஒருவர் எதிர்பார்க்கும் (சொந்த உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாத) புறவயமான தன்மை ஆகக் குறைவாக இருந்தது. தமிழ்நாட்டில் இதற்கான (தமிழ் மாணவனை அடிக்கும் ஒளிபரப்பிற்கான) எதிர்வினை உடனே நிகழ்ந்தது. சென்னையில் உள்ள நியூ வுட் லேண்ட்ஸ் ஹோட்டல் (உடுப்பி உணவகம் ) பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது.

செப்- 12 மதியம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வன்முறை வெடிக்கும் நிலையில் மக்களின் கோபம் கர்நாடகத்தில் ஏற்கனவே இருந்தது. கடைகளும் உணவகங்களும் தாக்கப்பட்டன. அங்கு வசிப்போர் சிலரிடம் தமிழ் நாட்டுப் பதிவு எண்கொண்ட வாகனங்கள் இருந்தன. கட்டுக்கடங்காத கும்பல் அவர்களைச் சூழ்ந்தன அலைக்கழித்தன. பெங்களூருவிலுள்ள இந்திரா நகர், மைசூர் ரோடு,காட பீசன ஹள்ளி போன்ற பகுதிகளில் பஸ்களும் லாரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. மஞ்சள்- சிவப்பு நிற அங்கவஸ்திரத்தைக் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த கர்நாடக ஆதரவாளர்கள், எரிந்துகொண்டிருக்கும் லாரிகளுக்கு முன்நின்று தங்களைத் தாமே செல்ஃபி எடுத்துக்கொண்டனர். கல்லெறிதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் என அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சம்பவங்கள் நடந்தன. அவற்றைப் பல தொலைக்காட்சி சானல்களின் புகைப்படமெடுப்போர் பதிவு செய்தனர்.

அதேநேரம் கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் சேதப்படுத்தப்பட்டன. ஒரு கன்னட பஸ் ஓட்டுநர் அச்சுறுத்தப்பட்ட வீடியோவை ஒரு தமிழ் தொலைக்காட்சிச் செய்தி சானல் திங்கள்கிழமை ஒளிபரப்பிற்று. பெங்களூருவில் அலுவலகங்களும் பள்ளிக்கூடங்களும் திடீரென மூடப்பட்டன. பள்ளிக் குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ராஜ்யசபா தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளரும் ஆலோசகருமான கிரிஷ் நிக்காம் கூறுவதாவது:

“1991இலிலும் ஊடகங்கள் இதுபோலவே நடந்துகொண்டன. சாரெகொப்பா பங்காரப்பா கர்நாடகா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்குக் காவிரிநீர் திறந்துவிடப்படும் விசயத்தில் கலவரங்கள் வெடித்தன. அப்போது பலர் குடும்பத்தோடு பெங்களூருவைவிட்டு வெளியேறித் தமிழ் நாட்டிலுள்ள தங்களின் வீடுகளுக்கு கால்நடையாக நடந்தே சென்றனர். கர்நாடகாவில் தங்கும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அது பெருந்திரளான மக்கள் வெளியேற்றம். சமீபகாலத்தில் அதுபோன்றதொரு நிகழ்வு நடந்ததாக நினைவில்லை. அப்போதிருந்த மய்ய நீரோட்ட பத்திரிகைகளே அதற்குப்பொறுப்பாகும். சம்பவங்களைப் பரபரப்புடன் வெளிப்படுத்தி அவற்றைத் திருப்பித்திருப்பி தொடர்ந்து ஒளிபரப்பும் ஊடகங்களின் செயல் கண்டிக்கத்தக்கது. திங்கள்கிழமையன்று தொடக்கத்தில் சில மணிநேரம் தொலைக்காட்சி சானல்கள் வன்முறையை விமர்சனம் செய்யவில்லை என்பது முக்கியமானதாகும். அதற்குப் பதிலாக, தீர்ப்பினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பதாக உணரும் பார்வையாளர்களின் உணர்ச்சியை சானல்கள் கொந்தளிக்கச் செய்தன. அவர்கள் செய்தி – இதழியல் பணியை நிறுத்தியிருந்தனர். வன்முறையைத் தூண்டுவோரின் முகவர்களாக ஆகி விட்டிருந்தனர். கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக அவர்கள் பதில்களைத் தந்துகொண்டிருந்தனர்” என்கிறார் கிரிஷ்நிக்காம்.

பெங்களூருவைக் களமாகக்கொண்ட செய்தியாளரும் ஆவணப்படம் எடுப்பவருமான வசந்தி ஹரி பிரகாஷ் ஊடகங்கள் சம்பவங்களைச் சித்தரிக்கும் விதத்தைக் கண்டனம் செய்கிறார். “காவிரிப் பிரச்சினை தொடர்பாக ஒரு இளைஞன் அடிக்கப்படுவதை பெங்களூருவில் உள்ள எனது மாமி தொலைக்காட்சியில் பார்த்தார். இதற்கான எதிர்வினை நிச்சயம் வரத்தான் செய்யும். வெறியூட்டும் எதிர்வினையை உருவாக்குவது ஒன்றே இந்த ஒளிபரப்பின் நோக்கம் போலும் என்றார் அவர்.” பிரச்சினைகளின் சிக்கலான தன்மையை உணராது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வீரியமிக்க தொனி இந்த வார ஊடக விவாதங்களில் இருந்ததென மைசூரு பல்கலைக்கழகத்தின் செய்தி, இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் பேராசிரியரான நிரஞ்சன் வாரனல்லி குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். “ஏறத்தாழ இரண்டு டஜன் கன்னட சானல்களைப் பார்த்தேன். தங்கள் ஒளிபரப்பின் தீவிர விளைவுகளை அவை உணரவில்லை. அச்சானல்களின் அடாவடியான வட்டாரப் பற்று தங்கள் சானல் தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சியாகும். மிகவும் எளிதான நுகர் தன்மைகொண்ட தட்டையான சொல்லாடலுக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறோம். தங்களையே நீதித்துறையாகக் கருதி ஊடகவியலாளர் ஏன் செயல்பட வேண்டும்..?” என அவர் மேலும் கூறினார்.

அஸிஸ் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுகையில் வல்லுநரான பெங்களூருவைக் களமாகக்கொண்ட பேராசிரியரான கி நாராயணா, “சில வாரங்களுக்கு முன்னர் மகாதேயி (கர்நாடகாவிற்கும் கோவாவிற்கும் இடையேயான நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினை) எதிர்ப்பு எழுந்தபோது, (சொந்த உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாத) புறவயமான புரிதலுடன் பிரச்சினையின் அடிப்படைக் காரணிகளைத் தொலைக்காட்சி சானல்கள் அணுகவில்லை. இதன் விளைவாக தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதான உணர்வை இரு மாநிலங்களுமே நிரந்தரமாகக் கொண்டுள்ளன” என்றார்.

மின்னணு ஊடகங்கள் பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் கொண்டிருந்தன. அப்போது தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலுமுள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் செயல்பாடு பிரச்சினையின் கடுமையைத் தணிப்பதாக இருந்தது. கூகிள் வரை படம்மூலம் வன்முறை அதிகமுள்ள பகுதிகளைப் பற்றிய விபரங்களையும், பாதிக்கப்பட்டோர் தங்குவதற்கு இடம் தரத்தயாராக இருந்த தன்னார்வ ஊழியர் குறித்த தகவல்களையும் தங்கள் ஊடக நண்பர் குழாம்களுக்கு அவர்கள் பரப்பினர். இவ்விதமாக இரு மாநிலங்களிலுமுள்ள மக்களுக்கு உதவி கிடைப்பதை அவர்கள் உறுதி செய்தனர். வேறு சிலர் சென்ற ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது கர்நாடகாவிலுள்ள தன்னார்வ ஊழியர்கள் தாமே முன்வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நல்லெண்ணத்தை ஊடகங்களில் நினைவூட்டினர். அதே நேரம் வன்முறையைத் தூண்டும் கன்னட சானல்களின் பெயர் குறிப்பிட்டும் அவற்றை இகழ்ந்தும் செய்தி அனுப்பினர். உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளை ஒளிபரப்பும் அந்த சானல்களைப் பார்க்க வேண்டாமெனவும் அறிவுறுத்தினர். எனினும் சேதம் பெரும்பாலான அளவில் ஏற்கனவே நடந்தேறிவிட்டிருந்தது.

திங்கள்கிழமையன்று வன்முறையைத் தூண்டும்விதமாக ஒளிபரப்பும் போட்டியை எந்த சானல் தொடங்கி வைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கையாக பெங்களூரு காவல்துறை சட்டப் பிரிவு எண் 144இன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே பல்வேறு செய்தி சானல்களின் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக ஒளிபரப்பத் தொடங்கியிருந்தனர். வன்முறை மேலும் பரவாமல் தடுப்பதற்காகத் தடை உத்தரவு வேண்டுமென்றே தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டது எனவும், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல் ஆணையர் என்.எஸ். மேகரிக் பின்னர் தெரிவித்தார்.

Business India இதழின் ஆலோசக ஆசிரியர் சிவானந்த கனாவி கூறுவதவது: செயல்கள் நிகழும்போது எதிர்வினையாற்றாது, மாற்றத்தை முன்கூட்டித் தாமாகவே தொடங்கிவைக்கும் அணுகுமுறையைப் பத்திரிகையாளர் மன்றம் மேற்கொள்ள வேண்டும். இது நடந்தாலொழிய இன்றைய நடைமுறையாக ஆகிவிட்ட அடாவடியான குறுகிய வட்டாரப் பற்றினை ஒழிப்பது மிகவும் சிரமம். வட்டார – பிற குழுக்களுக்கும் இடையே பகைமையை வளர்ப்பது சட்டப்பிரிவு எண் 153a யின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இப்போதைய அரசியல் சூழலில் இச்சட்டப் பிரிவு அமல்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறேன். அதே நேரம் பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், தமது சானல் நீடித்து இருப்பதற்காகவும் சுமார் ஒரு டஜன் செய்தி சானல்கள் ஒன்றொடொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. 2018இல் தேர்தல் வரஇருப்பதால் கர்நாடகாவிலுள்ள ஊடகங்களும் அரசியல் சக்திகளும் பதற்றமான நிலையிலேயே எப்போதும் உள்ளன. காவிரி நீர் பங்கிடுவது தொடர்பான விவாதம் விவசாயிகள் சங்கங்களுக்கிடையே நடப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் தொலைக்காட்சி நிலையங்களில் அல்ல. ஆனால் இப்பிரச்சினையோ அரசியல் கட்சிகளின் சூழலையே தீர்க்கமாய் மாற்றிவிடும் அரசியல் ஆயுதமாக மாறியிருக்கிறது.