பாண்

492

னது கணவரை விட நான் 20 வருடம் இளமையானவள். அவருடைய முதல் மனைவி குழந்தைப்பேற்றின் போது இறந்துவிட்டாள். அவர் ஒரு நல்ல மீன்பிடிகாரர். அவருக்கு சொந்த வீடு இருந்தது. தேவையான காலம் வரும்போது எனது அம்மாவையும் அப்பாவையும் வீட்டில் வைத்திருப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இந்தக்காரணங்களுக்ககத்தான் நான் அவரை மணம் முடிக்கச் சம்மதித்தேன். அது ஒரு நடைமுறைக்கேற்ற  முடிவு. அவர் அதை விட எதுவும் மேலதிகமாகக் எதிர்பார்க்கவில்லை. ஒரு சாக்கு மாவை ஒன்றாக சாப்பிட்டு முடிக்கும் வரை இரண்டு பேர் காதல் என்ற வார்த்தையைச் சொல்லக் கூடாது என்று அவர் எனக்குச் சொன்னார்.

நாங்கள் திருமணம் செய்த அன்று இரவு நான் எனது இரவு உடையை என் தொடைகளைச் சுற்றித் தூக்கிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். கண்களை மூடிய இறுக்கத்தில் எனக்கு நட்சத்திரங்கள் தெரிந்தன. பிறகு நான் வெளியே போனேன். எனக்கு சத்தி வந்தது. வேலிக்கு மேலால் சத்தி எடுத்தேன். அவர் கதவுக்கு வெளியே என் பின்னால் வந்து தனது கையை எனது கீழ் முதுகில் வைத்தார். முதல் தடவை இப்படித்தான் நடக்கும். பிறகு சரியாகப் போய்விடும் என்றார்.

நான் உடனேயே கர்ப்பமாகிவிடேன். பிறகு அவர் லப்ரடோருக்குப் போய் விட்டார். நான் தோட்டத்தைக் கொத்தினேன். எனது வயிறு தண்ணீருக்குள் போட்ட விதைபோல வீங்கி வருவதைப் பார்த்தேன். பாண் வெதுப்பினேன். குளிர்காலத்துச் சேகரிப்புக்காக வெதுப்பிய அப்பிள்களை போத்தலில் அடைத்தேன்.  வைக்கோலுக்காக புல்வெட்டினேன். ஒரு மாதம் தனியாக இருந்த பிறகு நான் அவர் இல்லாததைக் கொஞ்சம் உணரத்தொடங்கினேன்.

செப்தெம்பர் மாதம் எனது கணவர் வீடு வந்து ஒரு சில வாரங்களின் பின்னர் குழந்தை  கொஞ்சம் முன்கூட்டியே பிறந்தது. அடுத்த நாள் ஞானஸ்நானத்துக்காக மதகுருவை வீடுக்கு வரவழைத்தோம். அங்கஸ் மக்லீன் என்று அவனுக்குப்பெயரிட்டோம். ஒரு கிழமைக்குப் பின்னர் அவனை “எரிந்த காடு” எனும் இடத்தில் புதைத்தோம். மரணச்சடங்கு நடந்த அன்று காலை அவர் அழ ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது முகத்தை எனது வயிற்றில் அவர் அழுது முடியும் வரை சாய்த்து வைத்திருந்தேன். அவரது தலை பிறக்க முதல் குழந்தை இருந்த அளவில் எனது கைகளில் இருந்தது. கவலையைப் பகிரும் போது ஒருவரிடம் காதல் தோன்றுவது ஏன் என்று எனக்குத் தெரியாது.

நவம்பர் மாதம் நான் மீண்டும் கர்ப்பமானேன். ஒரு முழுப் பாண் வெதுப்பிக்கொண்டு இன்னும் ஆவிபறந்துகொண்டிருக்க  மேசைக்குக் கொண்டுவந்தேன். அதை அப்படியே முழுதாக அவரது கோப்பையில் வைத்துவிட்டு அவரைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த மாப்பையின் கடைசி மா இதுதான் என்றேன். அவர் என்னப் பார்த்துச் சிரித்தார். ஒரு நிமிடம் எதுவுமே சொல்லவில்லை. இன்னுமொன்று இன்று வாங்கி வருகிறேன் என்று கடைசியாகச் சொன்னர்.

அப்படித்தான் நாங்கள் அதைக் கொஞ்ச காலம் விட்டு வைத்தோம்.

நியூபவுண்ட்லாந்தைச் சேர்ந்த சமகால எழுத்தாளரான இவரது ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு மற்றும் சில கவிதைத்தொகுப்புக்கள் உள்ளிட்ட  பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்தக்கதை ஒரு மிகச் சாதாரணமான ஆனால் நிறைவான ஒரு கனேடிய பனி நிலத்து கிராமியத் தம்பதியினரின் வாழ்வை மிகச் சொற்பமான வார்த்தைகளில் சித்தரிக்கிறது.  கோடை காலங்களில் ஆண்கள் தொழில் காரணமாக இடம் விட்டு இடம் செல்லுதல் இந்த வாழ்க்கை முறையின் ஒரு அங்கம். இது, கனடிய ஆங்கிலச் சிறுகதை உலகில் ஒரு சிறுகதை எவ்வளவு சிறியதாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக கூறப்படும் ஒரு கதையாகும். இந்தக் கதை :Canadian Short Stories (Ed. Russell Brown and Donna Bennett Toronto: Pearson Lonman/ Penguin Academics, 2005.435. Print) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.