ரவி அச்சுதனின் புதிய திரைப்படம் – ‘ஐ-Scream’

129

னடாவின் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒருவராக அறியப்படுபவர் ரவி அச்சுதன். கனடாவில் உருவாக்கப்பட்ட தமிழ்பேசும் திரைப்படங்களுக்கு ஜனரஞ்சக முகம் இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் இயங்குபவர். திரையரங்கிற்கு வருபவர்கள் “பொழுதுபோக்காக உட்கார்ந்து படம் பார்க்கவேண்டும்”, “ரசிகர்கள் பொழுதுபோக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் திரைப்படத்தில் பின்னப்பட்டிருக்கவேண்டும்” என்பனவே தனது திரைமொழியாக என்றும் இருக்கும் என்ற வெளிப்படையாக சொல்லும் இயக்குனர் இவர். இவரது இயக்கத்தில் வரும்  பத்தாவது திரைப்படமான   ‘ஐ-Scream’ குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நவம்பர் மாதம் 5ந்திகதி நடைபெற்றது. சந்திப்பின் போது திரைப்படத்தின் ட்ரெய்லரும், திரைப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களும்  அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அத்துடன் திரைப்படத்தின் போஸ்டர்களும்,  ஏனைய விளம்பரங்களும்,  திரைப்படம் குறித்த மற்றைய பல விபரங்களும் முதன்முறையாக வெளிக்காட்டப்பட்டன.

இந்தியத்  திரைப்பட ரசிகர்களுக்கும், தமிழகத் தொலைக்காட்சிகளுக்கும் ஏற்ற விதமாக கனடா தமிழ்த் திரைப்படைப்புக்களைக் கொண்டு செல்வதற்கேற்ற  தயாரிப்பாக ‘ஐ-Scream’ இருக்கும் என தெரியவருகிறது. அதாவது  முற்றுமுழுதான ஒரு தமிழ்ப் படமாக  ‘ஐ-Scream’ தமிழ்க் கனடியர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், வியாபார நோக்கத்தைக் கருத்தில் கொண்டு படத்தின் பேசுமொழியை தமிழகத்தின் பேச்சுவழக்கிலிருக்குமாறு முழுப்படத்தினதும் உரையாடல்களும் மாற்றப்பட்டுள்ளன.

படத்தின் Post Production தமிழகத்தின் பிரபல தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு செய்யப்பட்டிருப்பதால், படத்தின் தொழில்நுட்பத் தரம் நம்மவரின் சராசரி திரைப்படங்களைவிடவும் பெருமளவில் உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக பின்னணி இசை, ஒலிச் சேர்க்கை, வண்ணத் திருத்தம், படத்தொகுப்பு என்பனவற்றின் தரம் கோடம்பாக்க தமிழ்சினிமாவின் தரத்திற்கு இணையானதாகும்.  படத்தின் தரம், பேசுமொழி என்பனவற்றால் தமிழகத்திலும், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் வியாபார ரீதியில் இந்த திரைப்படத்தினை சுலபமாக திரையிட்டுக்காட்ட முடியும் என்றும்  ‘ஐ-Scream’ தயாரிப்புக் குழு நம்புகிறது. ஏற்கனவே தமிழக பெரும் தொலைக்காட்சி ஒன்று இது குறித்து ரவி அச்சதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. படத்தின் வியாபார முன்னெடுப்புக்கள் வெற்றிகரமாக அமைந்திடும் பட்சத்தில் இதுபோன்ற  பேச்சுமொழி மாறுபடும் படைப்புக்கள் அதிக அளவில் உருவாகவும் சந்தர்ப்பம் உண்டு. சுருக்கமானச் சொன்னால் ‘ஐ-Scream’கனடா தமிழ்த் திரைப்பட விநியோக முயற்சிகளுக்கு ஒரு புதிய கதவை வர்த்தக ரீதியில் திறந்து வைக்கிறது.

இளைஞர்களை குறிவைத்து திகில் கலந்த ஜனரஞ்சக திரைப்படமாக ‘ஐ-Scream’ உருவாக்கப்பட்டுள்ளது எனத்தெரிய வருகிறது. காதல், மர்மம், கொலை, திகில், சண்டை, பாடல், நடனம் என பலதரப்பட்ட அம்சங்கள் திரைப்படத்தில் இருக்கும். அதனூடாக இன்றைய கனடாவின் இரண்டாம் தலைமுறை இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஏற்ற படிப்பினையைத் தரக்கூடியதொரு கதையை சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் சிறப்பு.

இதில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கனடாவின் தமிழ்த் திரைப்படத்துறையின் நட்சத்திரங்களாக மிளிரும் அளவிற்கு திறமை கொண்ட கலைஞர்கள் என்பது முன்னோட்டக் குறுங் காட்சிப்படத்தை காணும்போதே தெரிகிறது. படத்தின் கமெராவையும் ரவி அச்சுதனே கையாண்டிருக்கிறார். கியூபாவில் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

Lucky Exclusive நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘ஐ-Scream’ யோர்க் சினிமாவில் டிசம்பர் 3, 4ந் திகதிகளில் திரையிடப்படுகிறது.