குழல்கள்

112

சூடுகள் விழும்போதுதான்
கிளம்புகின்றன சுரணைகள்
மான நரம்புகளில்.

சுடாதபோது
குழல்கள் கக்கும் பிச்சை பொறுக்குவோர்
தெருக்களில் திரிகையில்
சிரிக்கின்றன  உறங்கும் எலும்புகள்
குழல்கள் புதைத்த குழிகளில்.

ஆட்கள்
ஆலமரத்துப் பிள்ளையார்
வயல்கள்  வளவுகள்
வாழும் கிராமங்களை
குழல்களின்  வாய்கள்
மெண்டுகொண்டே இருக்கும்.

அதிகாலைப் பனியின் குளிர்
அள்ளி வரும் தென்றல்
கிளை தடவ முன்னரே
முகைகளைக் கருக்கியவை.

தென்னையின் மேனியில்
பச்சை குத்தியவை.
தேயிலையின் வாசத்தை
வேரோடு பிடுங்கியவை.
பனைகளின் வாழ்வுக்கு
பாடைகள் கட்டியவை.

காலம் ஆற்றலாம்
காயங்களை
வடுக்கள் அரித்துக்கொண்டே இருக்கும்.
சுடு குழல்கள்
குருதி வெறியில்
சந்திகளில் காத்திருக்கும்வரை.

-களப்பூரான் தங்கா