ஒளிவதற்கு இடமில்லை!

153

ங்களிடம் உள்ள செல்லிடத் தொலை பேசியில் GPS எனச் சுருக்கமாக வழங்கப்படும் இடம் அறி பொறிமுறை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போதுள்ள எல்லாத் தொலைபேசிகளிலுமே பெரும்பாலும் இந்தப் பொறிமுறை உண்டுதான். தொலைபேசியில் GPS செயலியை நிறுத்தி விட்டால் அது வேலை செய்யாது என்பதுதான் பொதுவான நம்பிக்கை.  ஆனால் அப்படியல்ல என்று காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் மொன்றியல் நகரக் காவல் துறையினர். அங்கிருந்து வெளிவரும் புகழ் பெற்ற ஃபிரஞ்சு மொழி நாளிதழான  LaPresse யில் ஊடகவியலாளராகப் பணி புரியும் பற்றிக் லகாஸெயின் ஐஃபோனிலிருக்கும் விவரங்கள் எல்லாவற்றையும் நவீன தொழில் நுட்பம், தொலைபேசிச் சேவை வழங்குகிற நிறுவனங்களது ஒத்துழைப்பு என்பவற்றைப் பயன் படுத்தி விரிவாக உளவு பார்த்துள்ளார்கள். அதற்கும் மேலாக அவருடைய தொலைபேசியில் இருக்கும் ஜி.பி.எஸ். செயலியை அவருக்குத் தெரியாமலே இயங்கச் செய்து அவர் போய் வரும் இடங்கள் எல்லாவற்றையும் உளவு பார்த்துள்ளனர்.

காவல்துறையினர் தொடர்பான ஊழல்கள், சட்டவிரோதமாக அவர்கள் நடந்து கொள்வது பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்தும் எழுதி வருபவர் லகாஸே. அவரை மட்டுமல்ல மேலும் பத்து ஊடகவியலாளர்களை காவல் துறையினர் கடந்த பத்து ஆண்டுகளாக இவ்வாறு உளவு பார்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கனடிய ஊடக உலகை இச் செய்தி அதிர்ச்சியும் ஆத்திரமும் கொள்ள வைத்துள்ளது. ஹார்ப்பர் அரசின் காலத்தில்தான் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளும் உரிமைகள், சுதந்திரம் தொடர்பான கனடியப் பட்டயம் (Canadian Charter of Right and Freedom)எமக்குத் தந்திருக்கும் உரிமைகளை மீறுவது பரவலாகத் துவங்கியது எனினும், மொன்றியால் காவல் துறையைப் பொறுத்த மட்டில் புதிய அரசு வந்த பிற்பாடும் கூட அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார்கள்.

இது போலவே கனடிய அரசின் உளவுத்துறையும் (Canadian Security and Intelligence Service – CSIS) சட்ட விரோதமாக குற்றங்கள் எதிலும் தொடர்பு படாத பொது மக்களின் தகவல்களையும் அவர்களுடைய முகநூல், மின்னஞ்சல்கள் வழி திரட்டிஃதிருடி வந்துள்ளமை சென்ற வாரம் அப்பலப்படுத்தப் பட்டுள்ளது. கனடிய உளவுத்துறை பொய் சொல்வதும் ஆதாரங்களையும் தகவல்களையும் திரிப்பதும், ஆட்களைப் பயமுறுத்துவதும் ஏற்கெனவே விரிவாக ஆவணப் படுத்தப்பட்ட விடயங்கள்தான். பொப் றே (Bob Ray), அவர்கள் தலைமையிலான ஆணைக்குழு ஒன்று இவை பற்றி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கனடிய உளவுத்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் குட்டேல் (Goodale)  என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு நமக்குத் தெரிவது என்னவெனில், ஒளிவதற்கு இடமில்லை என்பதுதான்!!!