காலத் துயர்!

296

எதற்கு அஞ்சி இருந்தோமோ அது நடந்து விட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்றம்ப் வெற்றி பெற்றுவிட்டார். இது அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலுமே பாதகமான விளைவுகளை மேலும் அதிகரிக்கப் போகிறது.

டொனால்ட் ட்றம்ப் எந்தக் கலப்புமில்லாத அப்பட்டமான இனவாதி. வெள்ளையரல்லாதோரை வெறுப்பவர். எப்போதும் சலியாது பொய் சொல்பவர். பெண் வெறுப்பாளர். அமெரிக்காவின் வறிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துபவர். பெரும் பணக்காரர். பல அமெரிக்க, கனடிய விமர்சகர்கள் அவரைப் பாசிசவாதி (Fascist) என்று தீவிரமாக விமர்சித்துள்ளனர்.

அவருடைய “கொள்கைகள்”அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் மட்டுமல்ல முழு உலகத்துக்குமே ஆபத்தானவை என்பது பரவலாகத் தெரிந்ததுதான். எனினும் இத்தகைய ஆபத்தான பேர்வ்ழி ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டமையும் கணிசமான மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதும்தான் இன்னும் பயங்கரமான விடயம்.
“மாற்றார் வெறுப்பு” (Xenophobia) என்பது எவ்வளவு தூரம் அமெரிக்காவிலும் -ஓரளவிற்குக் கனடாவிலும்- அண்மைக் காலங்களில் பெருகி வருகின்றதென்பதை ஆய்வுப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன். இத்தகைய நிலைதான் ஐரோப்பவிலும் இங்கிலாந்திலும் பெருமளவுக்கு மேலோங்குகின்றன. ட்றம்ப் வெற்றி பெற்றிருப்பது இந்தச் சூழலை மேலும் பயங்கரமானதாக்கி நமது வாழ்வைப் பெருமளவு பாதிக்கக் கூடும். அவரோடு கூட்டுச் சேர்ந்திருப்பவர்களைப் பார்க்கிறபோது இந்த அச்சம் இன்னும் மேலோங்குகிறது. அமெரிக்க உளவு சேவையிலும் ஒரு பிரிவினர்-அதன் தலைவர் உட்பட- ட்றம்ப்புக்கு ஆதரவாக இயங்குவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்துத்துவ அடிப்படைவாதிகளும் சிவ சேனாவைச் சார்ந்தவர்களும் “ட்றம்புக்கான இந்துக்கள்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் மிகப் பெரிய  பணக்காரர் (இந்தி/இந்து-அமெரிக்கர்) இதில் முன்னிலை வகிக்கிறார். ஒரு மில்லியன் டொலர்களுகளுக்கு மேலாக இவர்கள் ட்றம்ப்புக்கு நிதி வழங்கி இருக்கிறார்கள். ட்றம்பின் வெற்றி இந்தியாவின் நலன்களுக்கு நல்லது என்று கருதுபவர்கள் மிகப் பலர் உள்ளனர். வெறுப்பில் விளையும் அரசியலுக்கு மோடியும் ட்றம்பும் நல்ல எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல, வெறுப்பு விரைவில் பற்றிக் கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்தவர்கள். அதனை லாகவமாகப் பயன்படுத்தவும் தெரிந்தவர்கள். ட்றம்ப்பிற்கு வெற்றி வாய்ப்புகள் பெருமளவுக்கு இல்லையென ஆரம்பத்தில் கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டினாலும் தேர்தலின் இறுதி நாட்களில் நிலைமை மெல்ல மெல்ல மாறத் துவங்கி விட்டது. முக்கியமான காரணம் ஹிலரி கிளிண்டன் மேலுள்ள வெறுப்பு. பல்லாயிரக் கணக்கில் இளம் வயதினர் ஜனநாயகக் கட்சியின் பேரணி ஸாண்டர்சுக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியவர்கள், கிளிண்டனுக்காக வேலை செய்ய முன்வரவில்லை. அதனால் தேர்தல் அன்று ஹிலரி கிளிண்டனுக்காக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அழைத்து வருவது தடைப்பட்டது. தெரிந்த பேயான கிளிண்டன் இனவாதியான ட்றம்ப்பை விடப் பரவாயில்லை என வாக்களிக்கலாம் என நினைத்தவர்களும் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை.

ஆபிரிக்க-அமெரிக்கரும், லத்தினோ மக்களும் ஒபாமாவுக்குக் காட்டிய அளப்பெரும் ஆதரவையும் அன்பையும் கிளிண்டனுக்குக் காட்ட மறுத்து விட்டார்கள். ஹில்லரி கிளிண்டனும் பொய்யில் வளர்ந்தவர்தான். லிபியாவிலும் ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் மிகப் பெரிய யுத்தமோகியாகத் தொழிற்பட்டவர் அவர், அதிபர் ஒபாமா தயங்கிய பல சந்தர்ப்பங்களிலும் “உடனே கொல்லு!” எனத் தீவிரமாக நின்றவர் அவர் என நியூ யோர்க்கர் சஞ்சிகை அம்பலப் படுத்தியுள்ளது. அவரதும் அவரது கணவரதும் கிளிண்டன் நிறுவனத்துக்காக 25மில்லியன் டொலர் சௌதி அரேபியாவிடம் இருந்தும் பல மில்லியன் டொலர்கள் கட்டார், குவைத் போன்ற அரசுகளிடம் இருந்து பெற்றுக் கொண்டவர். ஊழல் பேர்வழி. வஹாபிய-இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஊற்றுக்கண் சௌதி அரேபியா என்பது தெரிந்தாலும் அவரால் சௌதியை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது. அவ்வளவு நெருக்கம்!!

இவருக்காகத் தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற ஒருவர் வட மாகாண சபையில் இருக்கிறார் என்றும் சேதி வருகிறது. (மெய்யியலாளர்கள்தான் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென பிளேட்டோ வலியுறுத்தினார். கோமாளிகள்தான் அங்கம் வகிக்கிறார்கள் என்பது நமது தலைவிதி.) ஹிலரி கிளிண்டன் வெற்றி பெற்றால் ஒபாமா முன்னெடுத்த கொள்கைகளைப் பின்பற்றுவார். அது கனடாவுக்கு இணக்கமானது எனவே கனடிய அரச தரப்பினர் நம்பினர். இனி அது சரி வராது என்று தெரிகிறது. பைப் லைன்கள் அமைத்தல், சுற்றுச் சூழலை அலட்சியம் செய்தல் போன்ற ட்றம்பின் கருத்தியல் கனடாவின் பெரு நிதி நிறுவனங்களுக்கும் பழமை வாதக் கட்சிக்கும் மிகுந்த உற்சாகம் தரலாம். எனினும் கனடாவின் பல முற்போக்கான கொள்கைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை,  ட்றம்ப் நிர்வாகத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகள், வழமை போலவே முன்னுரிமை பெறாது. இலவு காத்த கிளிகளாக இருப்பது நம்மில் பலருக்குப் பழக்கம்தானே!!!!! நமக்கான காலத்துயர் இப்போது அமெரிக்க மக்களுக்கும் ட்றம்ப் மூலம் கிடைத்துளது!