பேருவளை தொடக்கம் இறக்காமம் வரை…

120

டந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினங்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டன. முன்னைய மகிந்த ஆட்சியில் சிறுபான்மையினங்களிற்கு நிச்சயமற்ற ஆபத்தான நிலை தோன்றியதாலேயே இந்த ஒற்றுமை ஏற்பட்டது. இதில் நாட்டிலுள்ள முழு முஸ்லீம் மக்களின் ஒற்றுமையும் குறிப்பிட வேண்டியதொன்று. முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, பௌத்த மேலாதிக்க அடையாள திணிப்பு எல்லாம் சேர்ந்து முஸ்லீம்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ச ஆட்சி மீதான வெறுப்புணர்வு ஏற்பட்டது. கிட்டத்தட்ட முஸ்லீம்களின் நூறு சதவிகித பங்களிப்புடன் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது.

சிறுபான்மையினங்களின் பங்களிப்புடன் நல்லாட்சி நிறுவப்பட்டதால், சிறுபான்மையினங்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது உண்மை. குறிப்பாக தேசிய இனப்பிரச்சனை தீர்வு, முஸ்லீம்களின் அடையாள அழிப்பு நிறுத்தல் உள்ளிட்டவற்றில் பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்தன. மகிந்தவின் வீழ்ச்சிக்கு சற்று முன்னதாகத்தான் பேருவளை, அளுத்கம கலவரங்கள் நிகழ்ந்தன. முஸ்லீம் இனஅழிப்பை ஒத்த முயற்சிதான் அது. இனி நமது ஆட்சி என்ற நம்பிக்கையும், பழைய காட்சிகள் மாறும் என்ற எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் இருந்தது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட தொடங்கியுள்ளது. நல்லாட்சியிலும் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறையவில்லை, நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்த இடைவெளிக்குள் நுழைந்து கொள்ளும் எத்தனத்தில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தோல்வியின் பின் மெதமுதலனவில் முடங்கியிருந்த மகிந்த இப்போது மட்டக்களப்பு வரை வந்துவிட்டார். கிழக்கு முஸ்லீம்களை சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்து பல மாதங்களாகிவிட்டது. நல்லாட்சியில் முஸ்லீம்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகவில்லையென்பது தனியே தென்னிலங்கை அரசியல் சக்திகளின் குறையல்ல. நமது முஸ்லீம் தலைவர்களின் சறுக்களே பெரிதும் காரணம். அரசுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் தமிழர்கள் விவகாரத்தில் கூட்டமைப்பு தேவையான இடத்தில் அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்கும் சாமர்த்தியத்தை இப்போது முஸ்லீம்கள் கற்க வேண்டும். (முன்னர் முஸ்லீம்களிடமிருந்து கற்க வேண்டுமென தமிழர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்) சறுக்கல்களை சமாளிக்க முஸ்லீம் தலைமைகள் இனமானத்தை தூண்டும் பேச்சுக்களில்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். இனஉணர்வுகளை தூண்டிவிடுவதை ஒரு பக்கத்திலும், முஸ்லீம்கள் பொறுமைகாத்து முன்னுதாரணமாக திகழ வேண்டுமென இன்னொரு பக்கத்திலும் பேசும் செப்படி வித்தையைதான் பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் இப்பொழுது கையிலெடுத்துள்ளனர். யாரும் பிரச்சனைகளின் நிரந்தர தீர்வை நோக்கி பயணிப்பதாக தெரியவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் தம்புள்ளை பள்ளிவாசல், பேருவளை சம்பவம் உள்ளிட்ட பல இனரீதியான மேலாதிக்க செயற்பாடுகள் நிகழ்ந்தன. இவை நிரந்தரமாக தடுக்கப்படவில்லையென்பதே இன்றைய ஆட்சியின் நிலவரமும். தெஹிவளை பள்ளி வாசல், ராஜகிரிய பள்ளிவாசல் சம்பவங்கள் எல்லாம் ஏன் இப்பொழுதும் தொடர்கிறது? பள்ளிவாசல்களின் பாதுகாப்பைதான் உறுதிசெய்ய முடியவில்லையென வைத்தாலும், இப்போது இஸ்லாமிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எந்தவகைக்குள் அடக்குவது? முஸ்லீம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முயற்சியை ஆரம்பித்துவிட்டது. மார்க்கம் நமது உயிர்நாடியென்றுதான் எல்லா முஸ்லீம் கட்சிகளும், தலைவர்களும் சொல்கிறார்கள். உயிர்நாடியிலேயே அரசு கைவைக்க தயாராகிறது. இப்போது தேவை நமது தலைவர்களின் வாய்ச்சொல் அல்ல, ஆக்கபூர்வ செயலே.

ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லீம்களிற்குள்ள உரிமையை உறுதிசெய்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை வாக்களிக்காமல் விலகியிருந்து விட்டது. நீண்டகாலமாகவே மத்தியகிழக்கு முஸ்லீம் நாடுகள் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றன. பாலஸ்தீனம் இலங்கையின் நீண்டநட்பு நாடு. எல்லாவற்றையும் கைகழுவி இஸ்ரேலிற்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது இலங்கை. உள்நாட்டில் எதிர்ப்புக்கள் எழுந்ததையடுத்து, ஜனாதிபதிக்கு தெரியாமல் நடந்துவிட்டதென்ற சமாதானத்தை சொல்லிக்கொண்டார்கள்.

இப்பொழுது இறுதியாக முஸ்லீம், தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணத்தில், சிங்களவர்கள் இல்லாத இடத்தில், நீதிமன்ற தடையையும் பொருட்படுத்தாமல் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இறக்காமத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலையைத்தான் குறிப்பிடுகிறோம். அதற்கு பொலிசார் பாதுகாப்பு வேறு வழங்கியுள்ளார்கள். சம்பந்தமில்லாத இடமொன்றில் புத்தர்சிலை வைக்கலாம், இனங்களிற்கிடையில் பதற்றத்தை உருவாக்கலாம், சிங்களவர்கள்தான் நாட்டின் முதற்குடிகள் என்ற அபிப்பிராயத்தை தொடர்ந்து பரப்பலாம் என்ற நிலை நீடிப்பதெனில், ஆட்சி மாற்றம் எந்த காட்சிகளை மாற்றியது? ஆட்சிபீடத்தில் உள்ள முகங்களை மட்டுமல்லவா மாற்றியுள்ளது?

எந்த ஆட்சி வந்தாலும் முஸ்லீம்களின் அடிப்படையான பிரச்சனைகள் தீராது என்பதே தற்போதைய நிலை. இனப்பிரச்சனை தீர்வு என்ற பெரும் செயலை விடுங்கள். நுரைச்சோலையை மீட்க கோரினோம், வட்டமடு காணியை மீளகோரினோம், கரும்பு செய்கையாளர் பிரச்சனையை தீர்க்க கோரினோம், அஷ்ரப் நகர் மக்களின் காணிகளை தருமாறு கோரினோம், ஒலுவில் துறைமுகத்திற்காக பெறப்பட்ட காணிகளிற்கான மாற்று காணிகள் கேட்டோம். இது மகிந்தவிடமும் மைத்திரியிடமும் வைக்கப்பட்ட கோரிக்கைகள். மகிந்தவின் காலத்தில் முற்றாக நிறைவேற்றவில்லை. நல்லாட்சியின் இரண்டு வருடத்திலும் நிறைவேறவில்லை.

வடக்கு கிழக்கு இணைய வேண்டுமென தமிழர்கள் கோருகிறார்கள். முஸ்லீம்களிடம் இதில் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடு உள்ளது. பொறுப்புள்ள அரசு என்ன செய்ய வேண்டும்? இனப்பிரச்சனை தீர வேண்டுமென நினைத்தால் வடக்கு கிழக்கு விவகாரத்தில் தமிழ், முஸ்லீம் சமூகங்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்கள் நடத்தி இதில் இணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால் சச்சரவை நீட்டித்து கொண்டிருந்தால் பலனிருக்காது. நல்லாட்சி அரசு முஸ்லீம்கள் விவகாரத்தில் முழு கவனம் செலுத்தவில்லையென்பதுதான் களநிலவரம். மகிந்த ஆட்சியில் ஆரம்பித்த பேருவளைகள் நல்லாட்சியில் இறக்காமங்களாக தொடர்ந்து கொண்டிருப்பதே சாட்சி.