முப்பது வருடங்கள்: மாறாத இரண்டு காட்சிகள்

98

யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளித்தது. அதிலும் வடக்குத்தான் குறிப்பட்டு சொல்ல வேண்டும். முழுமையாக முடங்கியது வடக்கு,
நீதி வேண்டி போர் என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. உண்மைதான் நீதி வேண்டித்தான் இதெல்லாம் நடந்தது. இந்த முடக்கம், போர் என்பவற்றில் பல்கலைகழக மாணவர்களின் பங்கும் பெரியது. மாணவர் சக்தி மாபெரும் சக்தி. இதற்கு உலக வரலாற்றிலிருந்தெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை. தமிழர்களின் அரசியலுரிமை போராட்டமே சாட்சி. மிதவாத வழியில் நம்பிக்கையிழந்து எண்பதுகளில் ஆயுதம் ஏந்தியவர்கள் மாணவர்கள்தான். யாழ்ப்பாண பல்கலைகழகம் போராட்ட இயக்கங்களின் கூடாக இருந்தது. பல்கலைகழக சூழலில்தான் எல்லா இயக்கங்களும் தமக்கான கோட்பாட்டு விளக்கங்களை உருவாக்கினார்கள். பல்கலைக வரலாற்றில் பொங்குதமிழ் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய எழுச்சி. எல்லா நெருக்கடிகளிலும் பல்கலைகழக மாணவர்கள் குரல் கொடுத்தார்கள். தமிழ் மக்களின் அரசியல், சமூக போராட்டங்களில் நேரடி பங்காளிகளாகவும், கலை வெளிப்பாடுகளின் மூலம் உந்துசக்தியளிப்பவர்களாகவும் பல்கலைகழக மாணவர்கள் இருந்தார்கள்.இப்படி தமிழர்களின் எல்லா அரசியல் நிகழ்வுகளுடன் இணைந்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் பயணித்தார்கள். பல்கலைகழக மாணவர்களிற்கு உள்ள பாதுகாப்பு ஒருவிதத்தில் அதற்கு உதவியும் செய்தது.

இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதும் அதனை விபத்தாக சித்தரிக்க பொலிசார் முயற்சித்தபோது, மாணவர்களின் விழிப்புணர்வுதான் உண்மையை வெளிக்கொணர்ந்தது. பின்னர் யாழ் மாவட்ட செயலகம், ஆளுனர் செயலகத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். பல்கலைகழக கல்விசார் செயற்பாடுகளை இடைநிறுத்தினார்கள். அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்தார். ஜனாதிபதியை சந்தித்து பேசிவிட்டு வெளிவரும்போது திருப்தியில்லையெனறார்கள். மறுநாள் பல்கலைகழகத்தை வழமைக்கு கொண்டு வந்தார்கள். பல்கலைகழகம் வழக்கம் போல இயங்கத் தொடங்கியதில் எந்த விமர்சனமும் வைக்க முடியாது. மாணவர்கள் வீதியிலேயே நிற்க வேண்டும் என்று நாம் குறிப்பிடவில்லை. இந்தவகையான போராட்டங்களால் குறிப்பிடும்படியான பலன்கள் கிடைக்காது என்ற வரலாற்று படிப்பினையை மாணவர்கள் அறியாமலிருக்கிறார்கள் என்பதையே குறிப்பிட விரும்புகிறோம். கூடவே சில அவதானங்களும் உள்ளன. நமது மாணவர் சக்தியின் போராட்ட குணம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது, அல்லது சரியான தலைமைகள் உருவாகவில்லையோ என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டு மாணவர்களின் மரணத்திற்கு காரணம் விபத்தல்ல, பொலிசார்தான் என்பதை நிரூபித்ததை தவிர்த்தால் பல்கலைகழக மாணவர்கள் இதில் சாதித்தது குறைவு. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறிய அதிர்வொன்றாக எழுந்தடங்கிய நிகழ்வாக இந்த போராட்டம் முடிந்துள்ளது. இலங்கையில் ஆணைக்குழுக்கள் உருவானால் என்ன நடக்குமென்பது ஊரறிந்தது. வாக்குறுதிகளின் முடிவை கண்டிருக்கிறோம். இந்த இரண்டும்தான் மாணவர்களின் எதிர்பார்ப்பெனில், உண்மையில் இவ்வளவு கொந்தளித்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது. தமிழ்தேசிய கூட்டமைப்பு, சுதந்திரகட்சி, ஐக்கிய தேசியகட்சி, ஆளுனர் யாராவது ஒருதரப்பை அணுகி ஜனாதிபதியை ஆரம்பித்திலேயே அணுகி வாக்குறுதியை பெற்றிருக்கலாம்.

மாணவர் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ண வேண்டாம். நீண்டபோராட்டத்தின் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த மாணவர்கள் “ஜனாதிபதியின் வாக்குறுதியிலும் நம்பிக்கை, திருப்தியில்லை“ என்றுதானே அறிவித்துள்ளார்கள். ஆனால், மறுநாளே  பல்கலைகழக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக அறிவித்தார்கள். பொதுவாகவே தமிழ் சமூகம் அதிகம் ரிஸ்க் எடுப்பதை விரும்புவதில்லை. தனது கல்வியை, வாழ்க்கையை, பணத்தை, பொழுது போக்கை இழப்பதற்கு விருப்புவதில்லை. நீண்ட ஆயுதப்போராட்டம் நிகழ்ந்திருந்தாலும், பார்வையாளர்களிற்கும் பங்கேற்பாளர்களிற்குமிடையிலிருந்து எண்ணிக்கை வித்தியாசமே இதற்கு சாட்சி. ஆயுதப்போராட்டத்தில் எல்லா இயக்கங்களிலுமிருந்து மரணித்தவர்களின் தொகையைவிட, கனடாவில் உள்ள ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

பல்கலைகழக மாணவர்களும் இந்த சமூகத்தின் குழந்தைகள்தான். அவர்களால் இத்தனை நாளிற்கு அதிகமாக எதையும் கொண்டு நகர்த்த முடியாதென்பதே யதார்த்தம். ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைபோல, மாணவர்களை உசுப்பேற்றும் எண்ணம் நமக்கில்லை. தமிழ் சமூகத்தின் இந்த மெத்தன மனநிலையில் நீட்சி மாணவர்களிடம் தென்படுவதை சுட்டிக்காட்ட வேண்டுமென்பதே எமது எண்ணம். மாணவர்கள் வன்முறை பாதையை நாடாமல் அமைதியாகவும், நாகரிகமாகவும் எதிர்ப்பை வெளியிட்டார்கள் என்பது பாராட்டத்தக்கதே. ஆனால் அறுவடையில்லாத செயலது.

இப்படியான போராட்டங்கள் செய்வதால் கொல்லப்பட்ட மாணவர்களிற்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. வடக்கேபற்றியெறிந்தது வித்தியா விவகாரத்தில். அப்போதும் இப்படியான வாக்குறுதிகள் வந்தன. இப்பொழுது மாணவர்கள் பெற்றுள்ளதும் நீதியையல்ல. வாக்குறுதியை. இந்த வாக்குறுதியை வைத்து கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் பரிகாரம் தேடலாமா என்பது தெரியவில்லை. முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர்களின் அதிகபட்ச ஆபத்தான ஆயுதமாக இருப்பது ஹர்த்தால். எப்பொழுதாவது மக்கள் ஒன்றுதிரண்டு ஹர்த்தால் செய்கிறார்கள். நமது வரலாற்றில் எத்தனை ஹர்த்தாலை நடத்தி விட்டோம்? எத்தனை ஹர்த்தால்களிற்கு பலன் கிட்டியது? வித்தியா கொலை சமயத்திலும் இப்படித்தான் நடந்தது. பின்னர் நடந்ததை நாம் சொல்ல வேண்டியதில்லை.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடந்த இரண்டு போராட்டங்களை சுட்டிக்காட்ட வேண்டும். 1986 நவம்பரில் பல்கலைகழக சமூகம் பெரும் போராட்டம் செய்தது. பல்கலைகழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டபோது போராடினார்கள். விஜிதரனிற்காக போராடிய பல்கலை கழக மாணவர்களிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புலிகளின் யாழ்ப்பாண தளபதி கிட்டு தலையிட்டு வழங்கிய வாக்குறுதியையடுத்து மாணவர் போராட்டம் நிறுத்தப்பட்டது. இன்றுவரை விஜிதரன் வரவில்லை.

இப்போது 30 வருடங்களின் பின்னரும் அதேகாட்சிகள். என்ன மாணவர்கள் நீதி வேண்டிய தரப்புக்கள்தான் வித்தியாசம்.முப்பது வருடங்களாக ஒரேவிதமாக போராடி, ஒரேவிதமான முடிவுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த கட்டுரையை, தமிழர்களிற்கு நீதி தர மறுக்கும் சிங்கள பேரினவாதம் என்பது மாதிரியாக மாற்றி எழுதுவது சுலபம். பலரையும் திருப்தியடைய வைக்கலாம். ஆனால் யதார்த்தம் என்றொன்று இருக்கிறதல்லவா? நமது சமூகமும் பாவப்பட்டது. அந்த பொறுப்புணர்ச்சி மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்கள், சமூக அமைப்புக்களை தலைமை தாங்குபவர்கள், இப்படியான போராட்டங்களை முன்னெடுப்பவர்களிற்கு இருக்க வேண்டும். முப்பது வருடமாக ஒரேவிதமாக போராடி “ஏய் சிங்கள பேரினவாதமே“ என தொண்டை நரம்பு புடைக்க பேசுவதால் ஒன்றுமாகப் போவதில்லை. செயல் வீரர்களே நமக்கு அவசியமாக தேவைப்படுகிறார்கள்.

தமிழர்களிற்கு நீதியை பெற்றுத்தரவும், எதிர்தரப்பை நுட்பமாக கையாளவும் கற்பனை வளத்துடன் கூடிய செயல்வீரர்கள் நமக்கு அவசியம். போராட்டங்களையும் கற்பனைவளத்துடன் செய்யும் அசகாய சூரர்கள் நமக்கு தேவை. போராட்ட மென்பதை தொண்டை நரம்பு புடைக்க பேசி, பகிரங்கமாக செய்வதுதான் என்ற ஒற்றைப்படை தன்மையுடன்கூடிய கற்பனை வறட்சியான தலைவர்களால் நமக்கு எதுவும் ஆகப்போவதில்லை. தமிழர்களின் அகிம்சை வழி எதிர்ப்பின் வீரியம் என்ன வென்பதை மாற்றுத்தரப்புக்கள் சரியாக எடைபோட்டுள்ளதாலேயே 30 வருடங்களின் பின்னரும் யாழ்ப்பாண பல்கலை கழகத்தால் உறுதியான மாற்றங்களை நிகழ்த்த முடியாமல் உள்ளது. தமிழர்களின் ஜனநாயகவழி தலைவர்களாலும் மாற்றத்தை நிகழ்த்த முடியாமல் உள்ளது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம். தப்பிச்சென்ற விடுதலைப்புலி சந்தேகநபரை சுட்டுக்கொன்ற வழக்கில் இராணுவ மேஜர் ஒருவருக்கு நீதிமன்றம் விதித்த 20 இலட்சம் ரூபாயை கூட்டு எதிரணி சேகரித்தது. அவர்களின் செயலின் பின்னால் இருந்தது முழுமையான இனவாத பார்வை. ஆனால் விடயங்களை அவர்கள் கையாளும் நுட்பத்தை கவனிக்கலாம். நாட்டை காத்த வீரர்களை குற்றவாளி கூண்டில் இந்த அரசு ஏற்றுகிறதென்ற இனவாத, அரசியல் நோக்கம் கொண்ட, நாட்டை முன்னகரவிடாத ஒரு ஆயுதத்தைதான் எடுத்துள்ளனர். ஆனால், அதை எப்படி கச்சிதமாக செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஹர்த்தால் என்பது ஒருநாள் நிம்மதியாக வீட்டில் பொழுதைக்கழிப்பதென்ற பெரும் பாலான தமிழ் மக்களின் மனநிலையில் மாற்றத்தை நிகழ்த்தும்வரை இந்தவிதமான போராட்டங்கள் முற்றுப்பெறாமல் தொடரத்தான் செய்யும்.