மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 8

143

1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில்142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றவெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வீரர்கள். வீக்ஸ் 760 ஓட்டங்களை 3 சதங்கள் 2 அரைச் சதங்களுட்படப் பெற்றுகொண்டார். ஐந்தாவது போட்டியில் வீக்ஸ், வோல்கொட், வொரெல் மூவருமே சதமடித்தார்கள். வலன்ரைன் 28 இலக்குகளை இந்தப் போட்டித்தொடரிற் கைப்பற்றியபோதும், இந்தியவீரர்களும் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இப்போட்டித்தொடரின் மிகுதி நான்கு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.1954 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகளிற் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மிக விறுவிறுப்பான இந்தத் தொடரின் முதலிருபோட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி முறையே 140 மற்றும் 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டபோதும், மூன்றாவது போட்டியிலும் ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்திற் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் காரணமாகவும், வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நான்காவது போட்டியினாலும், தொடரானது 2-2 என்கிற வகையில் சமநிலையில் முடிந்தது. நான்காவது போட்டியில் வீக்ஸ், வொரெல், வோல்கொட் மூவரும் சதமடித்தார்கள். வோல்கொட் இந்தப் போட்டித்தொடரில் மூன்று சதங்கள், மூன்று அரைச் சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார். பதிலுக்கு இங்கிலாந்தின் அணித்தலைவரான லென் ஹட்டன் 677 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ராமதீன் 23 இலக்குகளைச் சாய்த்தார். வீக்ஸ் (487 ஓட்டங்கள்) வொரெல் (334) ஆகியோரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிசார்பில் சிறப்பாக விளையாடியிருந்தார்கள்.

1955 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலிய அணியைத் தம்மண்ணுக்கு வரவேற்றார்கள். கீத் மில்லர், றே லிண்ட்வோல், நீல் ஹார்வி, றிச்சி பேனோ, இயன் ஜோன்சன், ஆதர் மொறிஸ் போன்ற சிறந்த ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை மேற்கிந்தியத்தீவுகளால் சமாளிக்க முடியாமற்போனது. இத்தனைக்கும் வோல்கொட் வெறிகொண்டவர் போல அற்புதமாக மட்டையெடுத்தாடினார். ஐந்து சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். போர்ட்-ஒஃப்-ஸ்பெயினிலும், கிங்ஸ்ரனிலும் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். வீக்ஸ்சும் தம் பங்குக்கு 469 ஓட்டங்களைப் பெற்றார், ஒரு சதம் மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக. இருந்தபோதும் நீல் ஹார்வி (650 ஓட்டங்கள், 3 சதங்கள்), கீத் மில்லர் (439 ஓட்டங்கள், 3 சதங்கள், 20 இலக்குகள்), றேலிண்ட்வோல் (187 ஓட்டங்கள், 1 சதம், 20 இலக்குகள்), றிச்சி பேனோ (246 ஓட்டங்கள், 1 சதம், 18 இலக்குகள்), கொலின் மக்டொனால்ட் (449 ஓட்டங்கள், 2 சதங்கள்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்திறணுக்கு முன்னால் ஈடுகொடுக்கமுடியாமல் 3-0 என்கிற கணக்கில் தொடரை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

இதன்பிறகு நியூசிலாந்தில் நடந்த தொடரை 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வீக்ஸ் (418 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்திலும் ராமதீன் (20 இலக்குகள்), வலன்ரைன் (15 இலக்குகள்) பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். இந்தத்தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பெற்றுக்கொண்ட வெற்றி அவர்களது துடுப்பாட்ட வரலாற்றின் முதல் வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் 1957 ஆம் வருடத்திலிடம்பெற்ற இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மோசமான அனுபவமாகவே அமைந்தது. அணிவீரர்கள் யாருமே சரியாகச் செயற்படாமற்போக 3-0 என்கிற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இழந்தார்கள். 5-0 என்கிற மோசமான கணக்கிலிருந்து நேரப்பற்றாக்குறை காரணமாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் மயிரிழையிற் தப்பித்தார்கள். நாடு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர், 1958 இல் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டார்கள். அந்தப் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டார்கள். இந்தத் தொடர் துடுப்பாட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். பல சாதனைகள் இத்தொடரில் நிலைநாட்டப்பட்டன. இத்தொடரைப் பற்றி விரிவாகப் பார்க்கமுன்னர், இத்தொடருக்கு முன்னர் வரை “திறமைசாலி” என்று அடையாளங்காணப்பட்டாலும் தமது திறமையை அதுவரையும் நிரூபிக்காத ஒரு இளம்வீரர் மேற்கிந்தியத்தீவுகளின் புதிய நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

சேர். காரி சோபெர்ஸ் (Sir. Gary Sobers) காரி சோபெர்ஸ் ப்ரிட்ஜ்ரவுண், பார்படோசில் 1936 ஆடி மாதம் 28ம் திகதி பிறந்தார். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த சோபெர்சுக்கு அவரது இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தன. அவ்விரு மேலதிக விரல்களையும் தனது குழந்தைப் பருவத்தில் தானாகவே அகற்றிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் இதற்கு முந்தைய அத்தியாயங்களிற் பார்த்த மற்றைய மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டச் சாதனையாளர்கள் போலவே, காரியும் தமது சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளிற் சிறந்தவராக இருந்தார். பாடசாலை அணி, கழக அணிகள் எனப்படிப்படியாக முன்னேறி, தமது பதினாறாவது வயதில் பார்படோஸ் பிராந்திய அணிக்காக முதற்தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தார். காரி சோபெர்ஸ் தமது ஆரம்பகாலத்தில் ஓரளவு துடுப்பெடுத்தாடக் கூடிய பந்துவீச்சாளராகவே அடையாளங்காணப்பட்டார். இடது கைச் சுழற்பந்து வீச்சாளராகவும், மிதவேகத்திலும் பந்து வீசக்கூடியவராகவும் சேபெர்ஸ் செயற்பட்டார். 1953 இல் அறிமுகமான முதலாவது முதற்தரப்போட்டியில் ஏழு இலக்குகளைச் சாய்த்ததோடு, ஆஊஊ அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் முறையே இரு ஆட்டவாய்ப்புகளில் 46 மற்றும் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தச் சிறப்பான இரு ஆட்டங்கள் காரணமாக அவர் மேற்கிந்தியத் தீவுகளின் 5 நாட் போட்டிகள் விளையாடுகிற அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கெதிரான முதற்போட்டியில் 4 இலக்குகளைச் சாய்த்திருந்தாலும், அந்தத் தொடரில் அவர் மிகச் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார் என்று சொல்லமுடியாது. இதே கூற்று அவரது முதல் 14போட்டிகளுக்கும் பொருந்தும் எனலாம். அதுவரைக்குமான போட்டிகளில் சோபெர்ஸ் வெறும் மூன்று அரைச்சதங்களை மட்டுமே பெற்றிருந்தார். பந்துவீச்சில் அதிசிறந்த பெறுதியாக ஒரே ஒரு முறைமட்டும் 4 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். 1957 இல் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த சோபெர்சுக்கு அதுவே இறுதித்தொடராக இருக்கும் என விமர்சகர்கள் மற்றும் நிர்வாகிகளில் ஒரு சாரார் பேசிக்கொண்டார்கள். அது ஓரளவுக்கு உண்மையாகும் வண்ணமே சேபெர்சின் துடுப்பாட்டமும் இருந்தது. இரண்டு அரைச் சதங்கள் அடங்கலாக 32 என்கிற சராசரியில் 320 ஓட்டங்களை மட்டுமே சோபெர்சால் பெற முடிந்தது. பந்து வீச்சிலும் 71 என்கிற சராசரியில் ஐந்து இலக்குகளையே அவரால் வீழ்த்த முடிந்தது. ஆனாலும், மேற்கிந்தியத்தீவுகளின் நிர்வாகிகளை சோபெர்சின் பக்கம் சாய்த்தது இந்தத் தொடரின் இறுதிப்போட்டி.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது போட்டி தொடங்கும்போது 2 போட்டிகளை வென்று, இரண்டு போட்டிகளைச் சமன்செய்திருந்த இங்கிலாந்து, தொடரை ஏற்கனவே தன்வசமாக்கியிருந்தது. முதலிற் துடுப்பெடுத்தாடி 412 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது. பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் வெறும் 89 ஓட்டங்களுக்கு முதல் ஆட்டவாய்ப்பிலும், 86 ஓட்டங்களுக்கு இரண்டாவது ஆட்டவாய்ப்பிலும் சுருண்டார்கள். ஜிம் லேக்கர் மற்றும் ரொனி லொக் ஆகிய இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களை ஓரளவுக்காவது சரியாக எதிர்கொண்டது சோபெர்ஸ்
மட்டுமே. முதல் ஆட்டவாய்ப்பில் 39 ஓட்டங்களையும், இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 42 ஓட்டங்களையும் பெற்ற சோபெர்ஸ், மற்றவர்களால் இயலாத ஆடுகளத்தில் தன்னாலும் ஆடமுடியும் என நிரூபித்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நிர்வாகிகளின் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டார். அதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடவிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விடத்தில் சோபெர்சைப்பற்றிய சில வியத்தகு சம்பவங்களைப் பார்க்கலாம். மேலே பார்த்த இங்கிலாந்துக்கான தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணித் தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகளிற்தான் முதன்முதலாக சோபெர்ஸ் அணிக்குள்ளிருந்த அக முரண்பாடுகளை முரண்கொண்டார். அந்த அணியில் இடம்பெறுவதற்குச் சம வாய்ப்புகளிருந்த வெஸ்லி ஹோல் மற்றும் ஃப்ராங் மேசன் ஆகிய இரு பந்து வீச்சாளர்களில் ஹோல் தமது நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சோபெர்ஸ் மற்றும் எவேர்ட்டன் வீக்ஸ் ஆகியோர் வேண்டுமென்றே தடுத்தாடினார்கள். மேசனை அடித்தாடினார்கள். சோபெர்சின் பார்வையில் மேலான பந்து வீச்சாளரான மேசனுக்குப் பதிலாக ஹோல் அணியிற் சேர்த்துக்கொள்ளப்பாட்டார். இந்த அக முரண்கள்தான் மேற்கிந்தியத் தீவுகளின் வரமும் சாபமும். அவர்களின் பல அற்புதமான வெற்றிகளுக்கும், மோசமான தோல்விகளுக்கும் பின்னாலிருந்த ஒரு பெருங்காரணமும் இந்த அக முரண்பாடுகள்தான்.

-தொடரும்