மந்திரத் தறி The Enchanted Loom

307

புலம்பெயர் ஈழத் தமிழர் அதிகம் வாழும் கனடாவின் ரொரொன்ரோ மாநகரில் கடந்த நவம்பரில் ஒரு நாடகம் பார்க்கப் போயிருந்தேன். அதன் பெயர் மந்திரத் தறி. ஆங்கில மொழியிலான நாடக அரங்குகளில் செயற்பட்டுவரும் பல்வகைமைச் சிறப்பைக் கொண்ட ரொரொன்ரோ நகரத்தின் மைய நீரோட்டக் கலை வட்டத்துக்குள், ஈழத் தமிழரின் கதைகளை கொண்டு சேர்க்கும் வகையில் அமையும் படைப்புக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறான ஒரு முக்கிய படைப்பாக இந்த நாடகத்தைக்
கருத முடியும்.

Factory Theater  மற்றும் Theater Company என்னும் இரண்டு ரொரொன்ரோவைச் சேர்ந்த அரங்கியல் அமைப்புக்களின் கூட்டு முயற்சியில் பல வருடகால உழைப்பின் பின்னர் உருவாகியிருக்கிறது இந்த நாடகம். நாடகத்தின் பிரதியாசிரியர் சுவேந்திரனி லீனா மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் ஒரு நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர். ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற இந்த நாடகப் பிரதி, முழு வளர்ச்சியடைந்து நவம்பர் 5முதல்27ம் திகதிவரை தினமும் ரொரொன்ரோவில் மேடையேற்றப்படும் நிலையை அடைந்துள்ளது.

நாடகம் நடைபெற்ற அரங்கு மிக எளிமையானது. பார்வையாளர்களுக்கு மிக அண்மையில் நடிகர்கள் இருந்ததும் மிக சொற்பமான பொருட்களை மட்டுமே பாவித்து பல காட்சிகளை ஒரு சிறிய இடத்துக்குள் கொண்டு வந்ததும் பிரமிப்பைத் தருவதாக அமைந்தன.

புலம்பெயர் நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடும்பமொன்றில் கதை ஆரம்பிக்கிறது. பாடசாலை செல்லும்
சின்ன மகள், உடல் நிலை சரியில்லாத நிலையில் தந்தை, வேலைக்குச் சென்று காசு உழைக்கும் தாய் மற்றும் ஆய்வுக்கற்கையை மேற்கொண்டு வரும் ஒரு மகன் என பாத்திரங்கள் அமைகின்றன. அவர்கள் மத்தியில் இல்லாத ஒரு பாத்திரம் அங்கு அதிகம் பேசப்படுகிறது. இறந்து,விட்டதாகக் கருதப்படும் காவலன் எனப்படும் இன்னொரு மகன் அந்தக் குடும்பத்துக்குள் ஆதிக்கம் செலுத்துகிறான். சித்திரவதை
காரணமாக ஏற்பட்ட வலிப்பு நோய் மேலும் அதிகரித்து வரும் நிலையில் தங்கன் என்னும் தகப்பன் பாத்திரம் ஒருசத்திரசிகிச்சைக்கு உட்படுவதா இல்லையா என்னும் சிக்கல் அங்கு எழுகிறது. இதன் இடையே போரின் இறுத்திக்கணங்களும் அதன் போது கார்டினர் கடுகதி வீதியில் மக்கள் திரண்ட அந்த உன்னத சம்பவமும் வந்து போகிறது. இரண்டு மருத்துவர்களுக்கிடையேயும் அதே துறையில் எலிகளுடன் ஆய்வினை மேற்கொள்ளும் மகனுக்கும் சத்திர சிகிச்சை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. கடைசியில் சத்திரசிகிச்சைக்கு சம்மதம் தரப்படுகிறது. சிகிச்சையின் முன்னர் தாய் மூலமாக மறைக்கப்பட்ட கடந்தகாலம் வெளிப்படுகிறது.

இறந்ததாகச் சொல்லப்படும் மகன் இறக்கவில்லை எனவும் தகப்பனின் உயிரைக் காப்பற்றிக்கொள்வதற்காக அவனை விடுதலைப் போராளிகளுடன் விட்டுவிட்டு வந்ததாகவும் அவள் ஒத்துக்கொள்கிறாள். இதன் பின்னர் சத்திரசிகிச்சை நடக்கும் போது காட்சி திடீரென யுத்தம் நடக்கும் காட்டுக்குள் மாறுகிறது. இறுதிப் போராளியும் இறக்கும் நிலையில் காவலன் சயனைட் அருந்துகிறான். அப்போது சத்திர சிகிச்சைக்கு உட்பட்டுக்கொண்டிருந்த தந்தை அவனிடம் வேண்டாமெனக் கெஞ்சுகின்றார். சத்திரசிகிச்சயின் போது அவரது நினைவலைகளாகவே இந்தக் காட்சி நடக்கிறது. இவை
எல்லாவற்றுக்குமிடையே தனது அண்ணனைத் தேடி மற்ற மகன் புறப்பட்டு இலங்கை செல்கின்றான்.அவனும் இறுதி யுத்தத்தில் இருந்து திரும்பி வரவில்லை. தகப்பன் சத்திர சிகிச்சையின் போது நினைவற்றவராகிறார். இறுதியில் நடனமணியான தாயார் அபி நயத்துடன் நிறைவுக்காட்சியில் தனது காதலையும் வாழ்வையும் தியாகத்தையும் பேசுவதுடன் நாடகம் நிறைவடைகிறது.

காதல், அன்பு, உயிர்வாழ்தல், இழப்பு போன்ற பல பரிணாமங்களைத்தொட்டு, மருத்துவ ரீதியிலும் நினைவுகளை மாற்றியமைக்கும் சத்திரசிகிச்சை தொடர்பான சரி பிழைகள் பற்றிய விவாதமாகவும் இந்த நாடகம் அமைந்தது. சத்தியவானின் உயிரை யமனிடமிருந்து காப்பாற்றிய சாவித்திரியின் பாத்திரத்துடன் தாயின் கதாபாத்திரம் ஒப்பிடப்படுகிறது. ஒரு மருத்துவ விவாதமும் அதன் நடுவே ஒரு குடும்பத்தின் உளவியலும் உணர்வுகளும் மிகக் காத்திரமாக அமைக்கப்பட்டிருந்தன. காட்சிகளும் நடிப்பும் மனதினைத் தொடுவனவாக, கனமானவையாக அமைந்திருந்தன. மனித மூளை மந்திரத் தறிபோல நினைவுகளை வெவ்வேறு வடிவங்களில் நெய்து கொண்டிருக்கிறது. அதனை இந்த நாடக மாந்தர்கள் மேடையில் சிறப்பாகக் கொண்டு வந்தனர்.

20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்சியில் காது கேளாதோருக்கான சைகை மொழி விளக்கமும் அமைந்திருந்தது ஒரு சிறப்பம்சமாகும். இந்த நாடகத்தினை நெறியாள்கை செய்திருக்கிறார் மேஜொரி சான். அவரும் நடித்த நடிகர்களும் நாடகத்துறையில் அனுபவம் மிக்கவர்கள். சுவேந்திரனி லீனாவின் முதலாவது பிரதி இதுவே எனினும் அவர் இன்னோர் பிரதியைத் தயார் செய்து வருகிறார் என்கிற செய்தியும் கூறப்பட்டது. கலாசார ஆலோசகராகக் கடமையாற்றிய துஷி ஞானப்பிரகாசம் அவர்களும் ரொரொன்ரோவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நாடக நெறியாள்கையில் அனுபவம் மிகுந்தவர். இதைத் தவிர மேலும் பலர் நிறைந்த ஒரு பெரிய குழு இந்த் நாடகத்திற்காக உழைத்திருந்ததைக் காண முடிந்தது. இவ்வாறான முயற்சிகள் நமது கதைகளை மொழி கடந்து கொண்டு செல்வதற்கான பாலமாக அமைகின்றன என்றால் மிகையாகாது. ரொரொன்ரோவின் ஆங்கில மொழிமூலமான அரங்குகளில் வெவ்வெறு இனக்குழுக்களைச் சேர்ந்த பார்வையாளர்களின் இரசனைக்குமுரியதாக ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டமை ஒரு சிறந்த செல் நெறியாகும். இது இன்னும் தொடர வேண்டும்.