கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கின்றேன்.

239

சில காலமாக அணைந்திருந்த (தீபம்)மீண்டும் எரிகிறது. கனடாவில் ஆரோக்கியமான பத்திரிகை ஒன்று திடீரென நின்று போவதற்கு ஆயிரம் பொருளாதாரக் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் (தீபம்) திடீரென (நூந்து ) போனது கண்டு வாசகர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் கடுமையான கோபம் இருக்கிறது. சரி… சரி… மாதம் ஒருமுறையாக இப்போதாவது வருகிறதே என ஆறுதல் அடைவோம். (தீபம்) அற்றிருந்த இருளில் ஜெயலலிதாவின் மரணம், லோகன் கணபதியின் சரணம், ஜஸ்டின் ட்ரூடோவின் கரணம், முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பயணம் என பல விடயங்களை சுடச்சுட நாம் பகிர முடியாமல் போய்விட்டது – பல விடயங்களை விமர்சிக்கவும் முடியாமல் போய்விட்டது.

அரசியலில் தலைவர் நிலையை அடைய ஆசைப்படும் அரசியலாளர்கள் எவருமே கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம்? அரசியலில் ஈடுபடுபவரது தனிமனித குணாம்சங்கள் மட்டுமல்ல, பொதுவாழ்க்கைக்கான நேர்மைத்துவங்களும் பொது அரங்கில் வைக்கப்படுவதாலேயே அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். தத்துவங்கள், கருத்தியல்கள் என்பனவற்றின் பிம்பமாக தனிமனித குணாம்சத்தையும், நேர்மைத்துவத்தையும் அவர்கள் காட்டி நிற்க வேண்டும் என்ற ஆதங்கத்தால்தான் அரசியலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். அதற்காக விமர்சிக்கப்படும் எல்லா அரசியலாளர்களும் தலைவர்கள் அல்ல. தலைவர்கள் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அவர்கள் தலைவர்களுக்கு உரிய குணாம்சங்களோடே பிறந்து வருகிறார்கள் என்று சொல்வார்கள். அதனால்தான் யார் தலைவர்? என்ற கேள்வி நம்மைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்தது.

ஆதி மனிதன் வாழ்க்கையின்போதே  தலைவர் என்ற கருத்தியல் உருவாகிவிட்டது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடச் செல்லும்போது கூட்டத்தை வழிநடத்த ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர்
குறிப்பறிந்து மற்றவர்கள் இயங்கினர். மனுக்குல வரலாற்றில் தலைவர் என்பவர் அப்படித்தான் உருவாகினார். பின்னர் கால்நடைகளை வளர்க்கவும், வயல்களை உருவாக்கி பயிர் செய்யவும் தனிமனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை ஏற்படும்போது தலைவர் என்ற கருத்தியல் இன்னும் விரிவாக்கம் பெற்றது. சுருங்கச் சொன்னால் சமூகத்தை வழிநடத்தும் விதமாக அமைந்த தனிமனித ஆளுமையே தலைமைத்துவமாக மாறியது.

இது தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்ட காலம். எனவே தமிழர் வரலாற்றை நன்றாகவே ரீவைண்ட் செய்து பார்த்தால் நான்கு வகையான தலைவர்கள் பண்டைக்காலத்தில் தமிழர்களை வழி நடத்தியிருக்கிறார்கள் என்பதை காணலாம். அந்தக் கால மீடியாவான சங்க இலக்கியங்களில் (1) சீறூர் மன்னர்,(2) முதுகுடி மன்னர் (3) குறுநில மன்னர் (4) வேந்தர் என்ற பெயர்களில் அந்த நான்கு தலைவர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இந்த நான்கு தலைமைகளுக்கும் இடையே காணப்பட்ட வேற்றுமைகள் அவர்கள் வைத்திருந்த நிலப் பொருளாதாரம், நிலவிரிவு, அரசாளுமை சார்ந்து இருந்திருக்கின்றன.

இந்த நான்குவகை தலைவர்களின் தன்மைகளையும் இப்போது பார்ப்போம்:
முதலில் சீறூர் மன்னர். அன்றைய இலக்கியங்கள் சீறூர் மன்னர் என்று அழைக்கப்பட்ட தலைவர் தானும் மக்களுள் ஒருவர் என்ற நிலையில் வாழ்ந்தவராவர். ஒருவகையில் இவர்தான் அந்த ஊர் மக்களுக்குக் காவற்காரராகவும் ஊர்த்தலைவராகவும் இருந்திருக்கிறார். மக்கள் இவரைத் தன் தலைவராக நினைத்தனர் என்பதைத் தவிர இவருக்கு வேறு சிறப்பு உரிமைகளையோ, சலுகைகளையோ மக்கள் தருவதில்லை.

சீறூர் மன்னரைவிட சற்றுப் பெரிய நிலையில் முதுகுடிமன்னர் வருகிறார். முதுகுடிமன்னர் என்பவர், தன் மக்களுக்காகத் தான் என்ற மனநிலையில் மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டவர். சீறூர் மன்னரைவிடச் முதுகுடி மன்னர் சற்றுச் செல்வாக்கும் சொல்வாக்கும் நிலவிரிவும் உடையவர். இவர்களின் நிலப்பகுதி வயல்சார்ந்தது. பெரும்பாலும் இவர்கள் நிலவுடைமையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் வேந்தரை எதிர்த்துப் போரிட்டு அழிந்தவர்களே ஆவர்.

முதுகுடிமன்னரைவிட சற்றுப் பெரிய நிலையில் குறுநில மன்னர் வருகிறார். குறுநில மன்னர் எனப்படுபவர்கள் பெரும்பாலும் தாமே தம்மை மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்களை வள்ளல்களாகவும் காட்டி வந்துள்ளார்கள். (தம்மிடம் இருக்கும் வரிப்பணத்தை தமக்குப் பிடித்தவர்களுக்கு தருவது, மேடைகளில் வைத்து சேர்டிபிகேட் தருவது போன்றவை குறுநில மன்னர்கள் செய்துவருபவை.) குறுநில மன்னர் சேர, சோழ, பாண்டி நாட்டு ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்றபோதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

இனி வேந்தர் என்றால் யார் என்று பார்ப்போம். நால்வகை நிலத்தினையும் பலரும் தனித்தனியே ஆண்ட நிலைமாறி நால்வகை நிலத்தையும் ஒருவரே ஆளும் சூழல் ஏற்பட்டபோது வேந்தர் உருவானார். வேந்தர் என்றழைக்கப்பட்டவர்கள், அரசுக்காகத்தான் மக்கள் என்ற நிலையில் தன்னுடைய அதிகாரத்தினை மட்டும் செலுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். பெருஞ்செல்வமும் நிலவிரிவும் ஆளுமைத்திறனும் முரசு, காலாற்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வெண்கொற்றக்குடை, ஆணைச்சக்கரம், மணிமுடி, ஆகியவற்றை உடையவரே வேந்தர்! அவர்கள் பனம்பூ, வேப்பம்பூ, அத்திப்பூ ஆகிய அடையாளப் பூக்களைக் கொண்டிருந்தது மட்டுமல்லாது புலிக்கொடி, வில்கொடி, மீன்கொடி என அடையாளக் கொடிகளையும் வைத்திருந்தனர். குறுநில மன்னர்களைப் போல இவர்கள் வாரி வழங்கவில்லை. வேந்தருக்குப் போர்த்தொழில்தான் முதன்மையாக இருந்தது. வேந்தரின் அடியாட்களாகச் சீறூர் மன்னர்களும் முதுகுடிமன்னர்களும் குறுநில மன்னர்களும் செயல்பட்டனர். அடியாட்கள் சிறப்புற பணியாற்றினால் அவர்களுக்கு வேந்தர் ஊதியம் வழங்கியுள்ளார். அவ் ஊதியத்தினை இலக்கியங்கள் வேந்து தரு விழுக்கூழ் என்று சிறப்பித்துள்ளன. தன்னால் வேந்தர் வெற்றி பெற்றால், அதனைத் தன்னுடைய வெற்றியாக நினைத்து, அடியாட்கள் மகிழ்ந்து கொண்டாடியுமுள்ளனர்.

இன்றைய ஜனநாயக உலகில் சீறூர் மன்னர், முதுகுடி மன்னர், குறுநில மன்னர், வேந்தர் என யாரும் இல்லை என்றாலும் மேலே சொன்ன நான்கு வகையில் பண்டைய தமிழ் மன்னர்கள்போலவே தம் அதிகாரத்தை வைத்து ஆட்சிபுரியும் அரசியல்வாதிகளை இன்றும் நாம் கனடாவில் காணலாம்.