காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்

273

அடுத்து வரப்போகும் ஓரிரு மாதங்கள் ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, திருப்பு முனையாக
அமையப்போகின்றது. இலங்கையில் அமையப்போகும் புதிய அரசியல் யாப்பின் மூலம் எவ்வளவு அதிகமான நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெறுவதிற் தான் எமது எதிர்காலம் அமையப் போகின்றது. இதுதான் வேணும், இப்படித்தான் வேணும் இல்லா விட்டால் முடியாது, வேண்டாம் என்பதாக எல்லைகளைப் போடுவதால் எந்தவித பயனும் இல்லை. சந்திப்புப் புள்ளியை எவ்வளவுக்கு நமக்குச் சாதகமான திசையில் நகர்த்தலாம் என்பதே எமது குறியாக இருக்க வேண்டும்.ஒரு அரசியல் அமைப்பு என்பது மாறாத ஒன்றல்ல, மாற்ற முடியாத ஒன்றல்ல.காலம் காலமாக அது மாறிக்கொண்டே தான் இருக்கும். அந்தந்த காலக் கட்டத்தில் இருக்கும் அரசியற் சூழ்நிலைகளுக் கேற்ப அது மாற்றப்படும். பின்னரும் மாற்றலாம். இப்போதுள்ள நிலைமைக்கேற்ப எமது அனைத்து சக்தியையும் வளங்களையும் பயன்படுத்தி அதி உச்சமாகப் பெறக்கூடியதை பெற்றுக்கொள்வதே அறிவுடைமை. அதுவே சாத்தியமான
சாணக்கிய அரசியற் செயற்பாடு. தவற விட்டால் இப்போதுள்ள நிலைமை இனி எப்போதுமே வராமற் போகலாம்.

அப்படியான நன்மைகளை அதி உச்சமாக எப்படிப் பெறலாம்?

நமக்கு ஆதரவாகச் செயற்படும் சக்திகள் எவை?. எதிராகச் செயற்படும் சக்திகள் எவை?. ஆதரவான செயற்பாடுகள் எவை? எதிரான செயற்பாடுகள் எவை? என்பதைச் சரியாக இனம்கண்டு ஆதரவானவற்றைப் பயன்படுத்தி எதிரானவற்றை முறியடித்து காரியத்தைச் சாதிக்க வேண்டும்.
ஆதரவாகச் செயற்படும் சக்திகள்:-

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை.

2. மிகப் பெரும்பாலான ஈழத் தமிழ் மக்கள்

3. இலங்கையில் தமக்குச் சாதகமான ஒரு அரசின் ஊடாக சமாதான சகவாழ்வு ஏற்படுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியும் உறுதியான அரசும் இருந்தால் தான் தமது சர்வதேச பொருளாதார ஆதிக்க நலன்களைப் பேணிக்கொள்ளலாம், அத்தோடு தாங்கள், மனித உரிமை,மனித குல மேம்பாட்டுக்கான செயற் பாட்டாளர்கள் எனக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கும் சர்வதேசத் தரப்பு.(அமெரிக்கா தலைமையிலான நாடுகள்

4. தமிழர் பிரச்சனையால் இலங்கை சீனா பக்கம் ஓடுவதைத் தடுப்பதற்கும், இனப் பிரச்சனை தீர்க்கப் படாத காரணமாக தமிழர் தனிநாடு நோக்கிப் பயணிப்பதைத் தடுப்பதற்குமாக செயற்படும் இந்தியா.

5. இனப்பிரச்சனையால் நாடு அபிவிருத்தி அடைய முடியாமலும் அதன் காரணமாக நாட்டில் வன்செயல்கள் உருவாவதும், அதனால் இனவாதிகளின் சட்டத்திற்குப் புறம்பான வன்முறை ஆட்சி அமையும் நிலைமையே உள்ளதாலும் மேலும் இலங்கையின் சர்வதேச உறவுகள் பாதிக்கப் படுவதாலும் நாட்டில் சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை அமைத்து அமைதியை ஏற்படுத்துமாறு இந்தியா மற்றும் சர்வதேச நட்பு நாடுகளால் கொடுக்கப்படும் அழுத்தங்களாலும் இனப்பிரச்சனையைத் தீர்க்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ள இன்றய நல்லாட்சித் தலைமை.

6. சகல மத இன மக்களும் சமத்துவமாக வாழ்வதால்த்தான் இன்று பல நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ முடிந்துள்ளது, சிங்கப்பூர் போன்று முன்னேற முடிந்துள்ளது, மற்றவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுத்து வாழ்வதால் எமது அந்தஸ்து குறையப்போவதில்லை என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்துள்ள சிங்கள மக்கள்.

எதிரான சக்திகள்:

1. இன்றய நல்லாட்சி நீண்ட காலமாகத் தீர்க்கப் படாமலிருக்கும் இனப்பிரச்சனையைத் தீர்த்து நாட்டை முன்னேற்றமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும்போது அதை மக்கள் ருசி கண்டு விட்டால் அராஜக ஆட்சி செய்த தாம் என்றுமே ஆட்சிக்கு வரமுடியாமற் போய்விடுமே என்பதற்காக இன்றய நல்லாட்சியை எதையுமே செய்ய விடாமல் முடக்கி அரசைக் கவிழ்க்க முயற்சிக்கும் மிகப்பெரிய சூழ்ச்சிகள் செய்யும் மகிந்த தரப்பு.

2. மகிந்த ஆட்சியோடு சேர்ந்து இலங்கையை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்துசமுத்திரப்
பிராந்தியத்தைக் கட்டியாள நினைக்கும் சீனா,

3. சிங்களப் பவுத்த இனவாதத்தில் ஊறிப்போயுள்ள சிங்களவர்,

4. இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டு இயங்கும் சிங்கள இனவாத அமைப்புகள்.சில அரசியல் வாதிகள்.
5.சீனாவுக்கு ஆதரவான சில நாடுகள்.
6. தமிழருக்கான நன்மைகள் எதுவானாலும் அதை தாங்கள் தான் செய்து பெயரெடுத்து விட வேண்டும்,
அதன் மூலம் ஈழத் தமிழினத்தைத் தமது அதிகாரத்தில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று செயற்படும் சில தமிழ் அமைப்புகள் .

யார் நண்பர்? யார் எதிரி?
அரசியலில் இன்றய நண்பன் நாளைய எதிரியாகலாம். எதிரிக்கு எதிரி நண்பன். இன்றய நண்பர்களை இன்று பயன்படுத்துவோம். அடுத்த கட்டத்தில் அன்றய சூழ்நிலைகளைப் பொறுத்து நண்பர்கள் மாறலாம். எதிர்க்க வேண்டியும் வரலாம்.இன்றய நண்பர்களின் கடந்தகாலச்சரித்திரம் சந்தேகம் இப்போ நமக்குத் தேவையில்லை. இன்றய நண்பரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களைப் பகைப்பதால் கெடுதி நமக்குத்தான். நண்பர்களுக்கு எதையாவது சொல்ல வேண்டி வந்தால் ,அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால் அதை அம்பலப்படுத்தாமல் அறைக்குள்ளேயே பேசிக்கொள்ள வேண்டும். இங்கு எமது
நட்பு சக்திகளாக, ஆதரவுச் சக்திகளாக மேலே பட்டியலிட்டுக் காட்டியுள்ள அனைத்துத் தரப்பாரையும் (6 தரப்பினர்) வெளிப்படையாக விமர்சிப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். அவர்கள் தவறுகளை அவர்களுக்குத் தனிப்படச் சொல்வோம். அவர்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பைக் கொடுக்காமல் ஊக்கம் கொடுப்போம்.

முன்னர் கூறியதை போன்று சந்திப்புப் புள்ளியை முடியுமான வரை நம்பக்கம் நகர்த்த அவர்களுக்கு எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம். எதிரிகள் (பட்டியலில் 6 தரப்பினர்) பலமடையக் கூடியவாறு அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடியவாறு எமது செயற்பாடுகள் சொல்லாடல்கள் அமைவே கூடாது. எமது செயற்பாடுகள் எல்லாம் முடியுமான வரை அவர்களின் பலத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும்.நண்பரோ எதிரிகளோ எந்நேரமும் எச்சரிக்கையோடும் விவேகத்தோடும் இராஜதந்திரமாகவும் சமயோசிதமாகவும் இருக்க வேண்டியதே எமது திறமையாகும்.

மக்களின் மனப் பயத்தைப் போக்குவோம்

சிங்களவர் பற்றி தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்களுக்கும் இருக்கக்கூடிய மனப் பயத்தைப் போக்கடிப்பதிலேயே நாம் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியுள்ளோம். தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்துவார்களோ, தனிநாடு எடுப்பார்களா, தென்னிந்தியத் தமிழரோடு சேர்ந்து தம்மைக் கட்டுப்படுத்துவார்களோ என்பதே சிங்கள மக்களின் பயமாகும். எமது அனைத்து உடனடிச் செயற்பாடுகளும் பரப்புரைகளும் பேச்சுகளும் சிங்கள மக்களின் அந்த மனப் பயத்தைப் போக்குவதாகவே இருக்கவேண்டும். தமிழ் மக்களை பொறுத்த வரையில் நாம் இன்னொருமுறை ஏமாற்றப்படுவோமோ, சிங்கள மக்களால் தொடர்ந்து கேவலமாக ஆளப்படுவோமோ, எமது மண் மதம் மொழி கலை கலாச்சாரங்கள் அழிக்கப்படுமோ, கொடுத்து விட்டுப் பின்னர் மீண்டும் பறித்து விடுவார்களோ என்பவைதான் தமிழ் மக்களுடைய பயமாகும். இவை அனைத்தைப் பற்றியும் எம்மைவிட எமது தலைமைகள் மிக நன்றாகவே அறிவார்கள். எமது எதிரிகள் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடும் அனாவசியமான பொய்ப் பிரச்சாரங்களில் நாம் ஏமாந்து விடத் தேவையில்லை. அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காப்போம். ஆர்ப்பரிக்கவேண்டி வரும் காலம் அதையும் செய்வோம். சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சரியாகக் கையாள்வோம்.

கவனத்தைக் குவித்து வெற்றி காண்போம்
ஒரே நேரத்தில் பல விடயங்களை முன்நகர்த்தினால் கவனம் சிதறுண்டு எந்த விடயத்திலுமே சரியாக வெற்றி பெற முடியாது. அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எது அதி முக்கியமோ அதில் மட்டுமே அனைவரது முழுக்க கவனமும் பதியுமாறு செயற்பட்டு அந்த விடயத்தைச் சாதித்தபின் அடுத்த விடயத்திற்குப் போகலாம். இப்போது நம் முன்னுள்ள அதி அவசர மிக முக்கிய விடயம் இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் மட்டுமே எமது முழுக்கவனமும் இருக்க வேண்டும். போர்க்குற்றங்கள், போரினால் பாதிக்கப் பட்டோருக்கான நஷ்ட ஈடுகள், காணாமற் போனோர் பிரச்சனை, சிறைக் கைதிகள் விடுவிப்பு என்பவை அடுத்தடுத்த விடயங்களாகப் பார்க்கப்பட வேண்டும். நிலவிடுவிப்பு, சிங்கள பவுத்த ஆதிக்கத்தைத் தடுத்தல் போன்ற விடயங்களைக் கூட இப்போது தீர்ப்பதை விட ஒரு சாதகமான அரசியல் யாப்பு அடிப்படையில் தீர்க்கும் போது எமக்கு அதிகம் சாதகமாக அமையும். அதனால் எமது அனைத்து சக்தி வளங்களையும் இன்று நாம் இந்த அரசியல் அமைப்பிலேயே குவிக்க விடும்.

ஒன்றுபட்டுப் பொறுமை காத்து சாதனை செய்வோம்
இப்போதைக்கு எமது உள்வீட்டுப் பிரச்சனைகளை ஒருபுறமாக தள்ளி வைத்து விட்டு நான் பெரிது நீ பெரிது என்று மல்லுக்கட்டாமல் முதலில் பொங்கலை அதி சுவையாக போதுமானதாக ஆக்குவோம். அதன்பின்னர் பங்கீடு செய்வதைப் பற்றிப் பார்க்கலாம். இப்போதே யார் பெரிது யார் தலைமை என்று போராடிக்கொண்டு இருந்தால் பொங்கலே வராது. அப்புறம் என்னத்தைப் பங்கிடுவது. இன்றய நிலையில் உடனடியாக அனைத்துத் தமிழரும் செய்ய வேண்டியது வேறு விடயங்கள் பற்றிக் கதைத்து கவனத்தை சிதறடிக்காது அரசியல் அமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படி இருக்கக் கூடாது எமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடிக்காது சற்றுப் பொறுமை காக்க வேண்டும். குறிப்பாக சிங்கள இனவாதிகளுக்கு தீனி போடுவதாக ஒரு சொல்லைக்கூட பயன்படுத்தக் கூடாது. பதுங்கத் தெரியாத புலி ஒருநாளும் குறி தவறாமல் பாய முடியாது. முதலில் அரசியல் அமைப்புச் சபையினர் தமது முடிவுகளை வெளிப்படுத்த நாம் விட வேண்டும். அந்தச் சபையில் எமக்காக தம்மால் முடிந்த சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்தி பெறக்கூடியதை பெறுவதற்கு த.தே .கூ. தலைமை உள்ளது. அவர்கள் செய்வது சரியில்லை போதாதென்று யாரும் கருதினாலும் கூட அவர்களுக்குப் பதிலாக வேறு யாரையும் போடக்கூடிய வாய்ப்பு இப்போது எங்கிருக்கிறது. அதனால் கிடைப்பதையும் கெடுக்காமல் முதலில் அரசியல் அமைப்பின் முதற்கட்ட அறிக்கை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும் வரை பொறுத்திருப்போம்.

என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்
பொதியில் இருந்து பூனை வெளியானதும் அது பற்றிப் பேசலாம். ஆனால் என்ன பேசவேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதுதான் அதி முக்கியம். முதலில் எமக்குள்ளே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருக்கவே கூடாது. மாறாக பேசவேண்டிய விடயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். அதைவிட முக்கியமானது எமது வாதங்கள் தமிழருக்கு, தமிழரின் தேவைக்கு, தமிழரின் நன்மைக்கு இவை இவை வேண்டும் இப்படி இப்படி வேண்டும் என்று வாதாடாமல் எமது வாதங்கள் முழு நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் தான் நன்மை பயக்கும் என்றவாறு அமைய வேண்டும். தமிழருக்கு தமிழர் பகுதிக்கு இது வேண்டும் என்று கூறாமல் அவற்றை முழுத் தீவுக்கும் ஆக கேட்க வேண்டும். நாம் தமிழருக்கு எதையோ அதிகமாக கேட்கின்றோம் என்றவாறு இருப்பின் அதற்கு சிங்கள மக்கள் சம்மதிக்க மாட்டார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு என்று கேளாமல் அனைத்து மக்களின் நன்மைக்காக முழு நாட்டையும் 4 அல்லது 5 பிராந்தியங்களாக பிரிக்குமாறு கேட்கலாம் அல்லவா?. நாங்கள் மட்டும் வெற்றிபெற வேண்டும் என்று இல்லாமல் வெற்றியில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக நாம் செயற்பட்டால்த்தான் இருபகுதியாரும் வெல்ல முடியும் இல்லையேல் யாருமே வெல்ல முடியாது. சிந்திப்போம், ,செயற்படுவோம், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்.

வி.வின். மகாலிங்கம்