ஆளும் லிபரல் கட்சி மார்க்கம் தோண்கில் தொகுதி மக்களின் மன விருப்புக்கு மதிப்பளிக்குமா ?

726

நேற்று மாலை மார்க்கம் தோண்கில் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் செல்வி வனிதா நாதன் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் ஆளும் லிபரல் கட்சியின் நடுநிலையற்ற வேட்பாளர் தேர்வுக்கான செயற்பாடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். லிபரல் கட்சியின் நியமனத் தேர்தலின் நேர்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் நடு நிலைமை பற்றிய தனது குற்றச்சாட்டை அவர் கீழ்வருமாறு முன்வைத்தார்.

நீண்டகாலமாக, பொதுச்சேவையிலும், சமுதாய முன்னேற்றதிற்கும், பெண்கள், இளையோரின் வாழ்வை மேம்படுத்துவதிலும் என்னை ஈடுபடுத்திவருகிறேன். எமது சமுதாய முன்னேற்றதில் எனது பங்கை ஆற்றுவதற்கு, அரசியலில் ஈடுபட முடிவுசெய்தேன். 2010 ஆம் ஆண்டு கனடிய மண்ணில் தேர்தலில் வெற்றிபெற்று முதல் தமிழ்ப் பெண்ணாக, யோர்க் பிராந்தியத்தில் கல்விச் சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டேன். 2010, 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அனைத்து Markham நகரத் தொகுதிக் கல்விச் சபை உறுப்பினர்களையும் விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 2013, மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் லிபரல் கட்சி நியமனத் தேர்தலில் பங்குபற்ற முடிவு செய்திருந்தேன். லிபரல் கட்சியைச் சேர்ந்தவளாக, லிபரல்க் கட்சித் தலைவர் ஜஸ்ரின் ரூடோ அவர்களது வெளிப்படையான, நேர்மையான நியமனத் தேர்தல் இடம்பெறும் என்ற வாக்குறுதியும், பெண்களையும் பல்லினத்தவரையும் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமையும் எனக்கு நம்பிக்கையளித்தன.

ஆனாலும், Markham-Thornhill தொகுதியில் போட்டியிட இருந்த கட்சியின் மூத்த உறுப்பினருக்காக எனது நியமனத்தை விட்டுக்கொடுத்தேன். அத்தொகுதியில் வசித்துவரும் எனக்கு, மக்கள் ஆதரவு நிறைவாக இருந்த பொழுதும், அம்மூத்த உறுப்பினருக்காகவும், லிபரல் கட்சிக்காகவும் இந்தக் கடினமான முடிவை எடுத்தேன். அப்பொழுது, எதிர்காலத்தில் நடைபெறும் நியமனத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு நேர்மையான வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டது.

ஜனவரி 2017இல், Markham-Thornhill நாடாளுமன்ற உறுப்பினர் சீனாவுக்கான கனடிய தூதராக அனுப்பப்பட்டபொழுது, எனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது ஆதரவோடு லிபரல் கட்சியின் நியமனத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலுள்ள மரியாதை காரணமாக, அவர் நாடாளுமன்றத்தில் ஜனவரி 31 அன்று நிகழ்த்திய முடிவுரைக்குப் பின்பே லிபரல் கட்சியின் வேட்புமனுப் படிவத்தை கோரியிருந்தேன்.

அதற்குப்பின், லிபரல் கட்சியின் சக வேட்புமனுத் தாரரின் அலுவலகத்தில் இருந்து, போட்டியிட இருந்த மற்றவர்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டனர், நானும் பின்வாங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், நான் எனது வேட்புமனுவில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறினேன். எனது கட்சி நியாயமாக செயற்படும், Markham-Thornhill தொகுதி வாழ் மக்கள் தங்கள் வேட்பாளரைத் தெரிவு செய்ய உரிய வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்த்தேன்.

இந்நியமனத் தேர்தல் தொடர்ப்பாக நடந்த நிகழ்வுகள், இந்நியமனத் தேர்தல் நேர்மையானதாகவோ, வெளிப்படையானதாகவோ, நடுநிலைமையானதாகவோ நடைபெறாது என்பதைத் தெளிவு படுத்தும். பெப்ரவரி 15 ஆம் நாள் பிரதமர் அலுவலகப் பணியாளர் தான் இந்நியமனத் தேர்தலில் பங்குபற்ற இருப்பதாக அறிவித்தார். பெப்ரவரி 13ஆம் நாள் தான் அலுவலகப் பணியில் இருந்து விடுப்பு எடுத்திருந்தார். அதற்கு அடுத்தநாள் பெப்ரவரி 16ஆம் நாள் கிடைத்த மின்னஞ்சலில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான முடிவு நாள் பெப்ரவரி 21ஆம் நாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பெப்ரவரி 20ஆம் நாள், லிபரல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த மின்னஞ்சலில், பெப்ரவரி 14க்கு முன் உறுப்பினராகச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, நான் லிபரல் கட்சிக்கு பெருவாரியாக உறுப்பினர்களைப் பதியத் தொடங்கிய பெப்ரவரி 15ஆம் நாளுக்கு ஒரு நாள் முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், லிபரல் கட்சியில் இணைந்த ஆயிரக் கணக்கான உறுப்பினர்களிடம் இருந்து வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, Markham-Thornhill தொகுதி லிபரல் அமைப்பின் உறுப்பினராக, இத்தேர்தலைப் பற்றியோ, முடிவுத் திகதிகளைப் பற்றியோ Markham-Thornhill தொகுதியின் லிபரல் அமைப்புடன் எந்தவிதக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல, அறிவிப்புகள் கூட கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் லிபரல் கட்சியின் தலைவருக்கும், லிபரல் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி இதற்கான தீர்வை முன்வைக்கக் கோரிக் கடிதம் அனுப்பினேன். லிபரல் கட்சிக்குள்ளாக இதைத் தீர்ப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டேன். அதற்கு, அனைத்து முறைமைகளையும் சரியாகப் பின்பற்றியுள்ளோம் என்ற திருப்தியற்ற பதிலே கிடைத்தது.

Markham-Thornhill வாழ் மக்களிடம் இத்தேர்தல் பற்றி முறையான கலந்துரையாடல் இடம்பெறவில்லை. மற்றைய இடைத்தேர்தல்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் Markham-Thornhill இடைத்தேர்தலுக்கு அளிக்கப்படவில்லை. எனக்காக லிபரல் உறுப்பினராக இணைந்த ஆயிரக்கணக்கானோர் இந்நியமனத் தேர்தலில் பங்குபற்றும் உரிமையை இழந்திருக்கிறார்கள்.

Markham-Thornhill வாழ் மக்கள் தங்களுக்கு எத்தகைய வேட்பாளர் வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை முறையாக வழங்கப்பட வேண்டும். Markham-Thornhill வாழ் மக்களுக்கு எங்கிருந்தோ வந்து இரண்டு கிழமை மட்டும் பிரச்சாரம் செய்யும் ஒரு வேட்பாளர் திணிக்கப்படக்கூடாது. அவர்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பன்னெடுங்காலமாகக் கண்டறிந்த Markham-Thornhill தொகுதிவாழ் வேட்பாளரை, அவர்களது அயலவராக, நண்பராக இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

இதில் தலையிட்டு நேர்மையான, வெளிப்படையான நியமனத் தேர்தலை நடப்பதை உறுதி செய்யுமாறு லிபரல் கட்சித் தலைவரும், கனடியப் பிரதமருமான திரு. ஜஸ்ரின் ரூடோ அவர்களிடம் கோருகிறேன்.

இது Markham-Thornhill வாழ் மக்களுக்கு, கனடாவுக்கு முக்கிய இடைத்தேர்தலாகும். ஆகையால், லிபரல் கட்சித் தலைமையானது, நடைபெற்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு நீதியான நேர்மையான முறையில் இந்நியமனத் தேர்தல் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும். Markham-Thornhill மக்களுக்கு தங்கள் வேட்பாளரை தெரிவு செய்வதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.